உலகளவில் கொரோனா வைரசின் தாக்கத்தின் புள்ளி விபரம்!
கொரோனாவைரசினால் உலகளவில் இறப்புகளின் எண்ணிக்கை சீனாவை விட அதிகமாக உள்ளது. இதுவரை, மொத்தமாக 173.320 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில உலக நாடுகளின் தற்போதய நிலவரம் கீழே:
பிரான்ஸ்:
5423 நபர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு 127 பேர் இறந்த நிலையில், பிரான்ஸ் ஒரு பாரிய முடக்க நிலையில் காணப்படுக்கின்ற போதிலும் நேற்று 35 ஆயிரம் நகராட்சிகளில் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.
அத்துடன், உணவகங்கள், கழியாட்ட விடுதிகள் , வழிபாட்டுத் தளங்கள் உட்பட அனைத்து “அத்தியாவசியமற்ற” பொது இடங்களையும் மூட பாரிஸ் நகரம் முடிவு செய்துள்ளது என பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் அறிவித்தார்.
ஸ்பெயின்:
இத்தாலிக்குப் பிறகு ஐரோப்பாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக இருக்கும் நிலையில் இங்கு 8.794 நபர்கள் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தவர்களின் தொகை 300 ஆகவும் உயர்ந்துள்ளது. மறுபுறம், ஸ்பெயினின் அரசாங்கம் இரண்டு வாரங்களுக்கு அவசரகால நிலையை அறிவித்து மற்றும் அநாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தடை செய்துள்ளது: வேலைக்குச் செல்வதும், உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி:
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 6.248 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, டென்மார்க், லக்சம்பர்க் மற்றும் ஆஸ்திரியாவுடனான எல்லைகளை இன்று காலை 8 மணியில் இருந்து மூட ஜேர்மன் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொருட்களின் போக்குவரத்திற்கும் வேலை நிமிர்த்தமான பயணங்களுக்கும் எந்தவொரு தடையும் இல்லை என்று அந் நாடு அறிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியம்:
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 1.391 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகவும் புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஐரோப்பாவின் பெரும்பகுதிகளைப் போல் அல்லாமல் லண்டனிலும், இங்கிலாந்தின் ஏனைய பகுதிகளிலும் பொது இடங்கள் எதுவும் மூடப்படாத நிலையில் அன்றாட வாழ்க்கை வழக்கம் போல நடைபெற்றுவருகின்றது. மற்றும் 70 வயதிற்கு மேற்பட்டவர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்திற்காக கட்டாயமாக நான்கு மாதங்கள் வரை தனிமைப்படுத்துவது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுவிட்சர்லாந்து:
இதுவரை தொற்றுக்குப் பாதிப்புக்குள்ளானவர்கள் 2.221 ஆகவும் உயிரிழந்தவர்கள் 22 ஆகவும் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில், ஞாயிற்றுக்கிழமை நோய்த்தொற்றின் எண்ணிக்கைகள் அதிகரித்ததையடுத்து (ஒரே நாளில் 800 க்கு மேல்) கொரோனா வைரசின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான அவசிய நிலையை ஜெனீவா(Ginevra), கிரிசன்ஸ் (Grigioni), நியூசெட்டல் (Neuchâtel), ஜூரா (Giura), பாஸல்-லேண்ட்ஷாஃப்ட் (Basilea Campagna) மற்றும் வலாய்ஸ் (Vallese) ஆகிய ஆறு நகரங்கள் அறிவித்ததோடு டிசினோ (Ticino) நகரத்தின் அவசரக்கால நடவடிக்கைகளை பின்பற்ற முடிவு செய்துள்ளன. மற்றும் கொரோனா வைரசை எதிர்த்து போராட அந்நாட்டு ராணுவதினால் 300 ராணுவவீரர்கள் பொது மருத்துவமனைகளுக்கு ஆதரவாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒல்லாந்து:
நெதர்லாந்தில் கொரோனா வைரசு நோயாளிகளின் எண்ணிக்கை 20% அதிகரித்து 1.295 ஆக அதிகரித்துள்ளது. மற்றும் 20 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அத்துடன், ஏப்ரல் 5 வரை பாடசாலைகள், சிறுவர் பள்ளிகள், உணவகங்கள், ஏனைய கடைகள் அனைத்தும் மூடிய நிலையில் இருக்கும் என்றும் பிரீமியர் மார்க் ருட்டே தொழில்முனைவோருக்கு உதவும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகங்கள் நோய் தொற்று பரவாமல் தடுக்க மார்ச் மாதம் இறுதி வரை மூடப்பட்டுள்ளன.
ஆஸ்திரியா:
இதுவரை தொற்றுக்கு உள்ளானவர்கள் 1.018 எனவும் உயிரிழந்தவர்கள் 3 ஆகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .
வைரசைக் கட்டுப்படுத்த கடைகள் மட்டுமல்லாமல், உணவகங்களும், விளையாட்டு மைதானங்களும் மூடப்பட்டுள்ளன. இத்தாலியைப் போலவே, கட்டாய இடநகர்வுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளுக்கான போக்குவரத்துத் தடையை தொடர்ந்து, ரஷ்யா, உக்ரைன் மற்றும் பிரித்தானியா விற்கும் ஆன திட்டமிடப்பட்ட விமானங்களும் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இராணுவ சேவை அல்லது சிவில் சேவையை மேற்கொண்ட பல குடிமக்கள் சுகாதார அவசரத்தை சமாளிக்க மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா:
அமெரிக்காவில் தற்போது 3.806 நபர்கள் பாதிக்கப்பட்டும் 70 நபர்கள் உயிரிழந்தும் உள்ளனர். இதையடுத்து ,வைரசை கட்டுப்படுத்த இன்று முதல் பள்ளிகள், உணவகங்கள் ஏனைய கடைகள் யாவும் மூடப்படுகின்றன: கொரோனா வைரசின் அவசரநிலை காரணமாக இந்த வார நிலவரப்படி நாடு முழுவதும் குறைந்தது 46,000 மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதோடு 21 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் வீட்டில் இருக்கவேண்டிய சூழல் ஏற்ப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த அவசரகால நிலையில் அந் நாட்டு தொழிலாளர்களுக்கு இவ் வைரசிற்கான இலவச பரிசோதனை மற்றும் ஊதியம் வழங்கப்பட்டு விசேட மருத்துவ விடுமுறைகளும் மேற்றக்கொள்ளப்படும் சாத்தியங்கள் உள்ளன என அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க துணைத் தலைவர் மைக் பென்ஸ், ஊரடங்கு உத்தரவு முதல் பொது வணிகங்களை மூடுவது வரை புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் 50 க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட அனைத்து நிகழ்வுகளும் எட்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் அல்லது ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் இவை யாவும் அமெரிக்காவின் மிக உயர்ந்த கூட்டாட்சி சுகாதார அதிகாரசபையான CdC இன் புதிய பரிந்துரைகள் என அவர் ஓர் உறையில் குறிப்பிட்டுள்ளார்.
கனடா:
வைரசு தொற்றுக்கு உள்ளானவர்கள் 341 ஆகவும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 ஆகவும் உள்ளது.
இந்நிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அந் நாட்டு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சீனா:
இதுவரை சீனாவில் 80.880 மக்கள் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டும் 3.227 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது வைரசின் பரவல் எண்ணிக்கை ஒரு வாரமாக குறைந்து வருகின்றது என்றும் நோய்த்தொற்றிலிருந்து 11 பிராந்தியங்கள் மீண்டுள்ளன என்றும் அந் நாட்டுப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் “சீனா அவசரகால நிலையில் இருந்து வெளிவந்துவிட்டது” என அந் நாடு தெரிவித்ததோடு தற்போது வேறு நாடுகளுக்கு உதவி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இந்தியா:
மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 129 நபர்களுக்கு கொரோனா வைரசு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே கேரளா மாநிலத்தில் திரையரங்குகள், பாடசாலைகள் மூடப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
விசாக்கள் நிறுத்தி வைப்பு முதல் சுகாதார சேவைகளை அதிகப்படுத்துவது வரை என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
இலங்கை:
இன்றுவரை இலங்கையில் 28 நபர்கள் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகைத்தந்தவர்கள் அனைவரும் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று ஆய்வு மத்திய நிலையங்களுக்கு 14 நாட்கள் கண்காணிப்புக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அத்தோடு, கொழும்பின் புறநகரான வத்தளை பகுதியில் கொரோனா வைரசு தொற்றுநோய் ஆய்வு மத்திய நிலையமாக மாற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு சிங்கள மக்களே எதிர்த்து வருகின்ற நிலையில் சிங்கள அரசாங்கம் தமிழீழ பிரதேசங்களில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை நிலையங்களை நிறுவும் தீர்மானத்தை முன்னெடுத்துள்ளது. இதை எதிர்த்து தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டங்களுக்கான நியாயங்கள் அனைத்து தரப்பினராலும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன.