ஏப்ரல் 13 வரை அவசரகால நெறிமுறைகள் நீட்டிக்கப்படும்
கடந்த நாட்களில் கொரோனவைரசின் தாக்கம் குறைந்து கொண்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருப்பினும், தொற்றின் பரவுதல் எண்ணிக்கை “R0” இன்னும் 1 க்கு குறையவில்லை.
அதாவது, தொற்றுதல் பரவும் விகிதம் குறையவில்லை. அப்படி குறையும் பட்சத்தில் தான் நெறிமுறைகளின் பயன் தெரிகிறது என்றும் மற்றும் நோயின் பரவுதலை அடக்கி விட்டோம் என எடுத்துக் கொள்ளலாம்.
இந்த நிலைமையை அடைவது மிகவும் இலகுவான விடயம் அல்ல; அதற்கு சில வாரங்கள் ஆகலாம். எனவே, இடைநிறுத்தங்கள், விதிமுறைகள் குறித்து வரும் நாட்களில் நடைபெறவுள்ள அமைச்சர்கள் சபையில் ஆலோசிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் 13 ஏப்ரல் வரை நீட்டிக்கப்படும் என சுகாதார அமைச்சர் Roberto Speranza இன்று பாராளுமன்றத்தில் உறுதிசெய்துள்ளார்.
தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகள், தடைகள் யாவும் குறைந்த பட்சமாக 13 ஏப்ரல் வரை அமுலில் இருக்கும் எனவும் சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரையும் முழுமையாக COVID-19 வென்றுவிட்டோம் என்று கூறமுடியாது. அதனால் வணிகம் மற்றும் தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பது படிப்படியாக தான் நடைபெறவேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
இதற்கு பின்வரும் நாட்களில், இப்போது அத்தியாவசிய சேவைகளில் சேர்க்கப்படாத தொழிற்சாலைகள் மீண்டும் திறப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த நாட்களில் வெளிவந்திருந்த ஓர் உரையில்: “7-10 நாட்களுக்குள்” தொற்றின் உச்சத்தை எட்டக்கூடும் என்று சுகாதாரத் துணை அமைச்சர் Pierpaolo Silieri ஊகித்தார்.
அதற்கு பின்னர்தான், புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும். ஆனால் 0.7 அல்லது 0.8 க்கு சமமான R0வை அடைய இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கூட ஆகலாம். எனவே இது ஏப்ரல் மாத இறுதியில் வரக்கூடும். அதற்குப் பிறகுதான் பிற நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடு செய்ய முடியும் என்று கூறினார்.
அவசரமாக அனைத்து வணிக நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டால் கணக்கிட முடியாத சேதங்களுடன் தொற்றுநோயை மறுதொடக்கம் செய்யும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளனர். அத்தியாவசியமற்ற கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் (Palestre), அழகு நிலையங்கள் (Centri Estetici) போன்ற மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களை திறப்பது என்பது மீண்டும் தொற்றின் பரவுதலை அதிகரிக்கும்.
ஒரு மீள் பரவுதலை தடுப்புவதற்காகவே இந்த நெறிமுறைகளை எளிதாக்குவதும் மற்றும் தொழிற்சாலைகளை திறப்பதும் படிப்படியாக நடைபெற வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்கள்.
எனவே, பழைய அன்றாட வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சில காலம் தேவைப்படுகிறது. இந்த நிலையை விட்டு வெளி வந்த பிறகும் வணிக ரீதியிலும் சரி தனிப்பட்ட ரீதியிலும் சரி பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம்.
அதாவது, கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இடையில் 1 மீட்டர் இடைவெளி, காற்றோட்ட வசதிகள் அனைத்தும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாக இருக்கும். வெளியே செல்லும் போது முகக் கவசம், கையுறை அணிவது, கைகளைச் சுத்தமாக வைத்திருப்பதும், பாதுகாப்பு இடைவெளியைப் பேணுவதும் முக்கியம்.