இருமொழித்துவம்

இருமொழித்துவம் – தமிழ் தகவல் மையம்

கூடுதலான தமிழ் பெற்றோர்கள், தாய்மொழியான தமிழ் மொழியை விட, தாங்கள் வாழும் நாடுகளின் மொழியில் அவர்களின் பிள்ளைகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் உண்மையாகவே பயனுள்ளதாகக் கருதப்படலாமா?

இக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்பு இருமொழித்துவம் எனும் கருத்தினை அறிமுகப்படுத்த வேண்டும். இருமொழித்துவம் என்றால் ஒரே நேரத்தில் இரு மொழிகள் கதைக்கும் திறமையை மட்டும் குறிப்பிட முடியாது, இரு மொழிகளையும் தகுந்த முறையில் பயன்படுத்தும் திறமையையும் குறிக்கும்.
இரு மொழிகள் கதைப்பதால் உண்டாகும் பயன்களை பல அறிவியல் ஆய்வுகள் விளக்கின்றன, ஆனால் இவற்றைப் புரிந்துக் கொள்வதற்கு ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் எமது மூளையானது பிறந்ததிலிருந்தே இரண்டுக்கும் மேலான மொழிகளை நிர்வகிக்கும் திறனைக் கொண்டது. மேலும், குழந்தையின் மூளை, முதல் ஆண்டுக்காலங்களில், ஒரு மொழியை எளிதான முறையில் உள்வாங்கிக் கொள்ளும் திறனைக் கொண்டது: குழந்தைகள் நடக்கக் கற்றுக்கொள்வது போல் மொழிகளையும் சிரமங்களின்றி கற்றுக் கொள்கின்றார்கள். குழந்தைகளின் இருமொழித்துவம் என்பது இளம் வயதில் இரண்டாவது மொழியைக் கற்றுக்கொள்வதிலிருந்து வேறுப்படுகின்றது ஏனென்றால் மொழிகளைக் கேட்க போதுமான வாய்ப்பையும் அவற்றைப் பயன்படுத்த போதுமான உந்துதலையும் கொடுத்தால் மட்டுமே குழந்தைகளால் தன்னிச்சையான முறையில் மொழிகளை உள்வாங்க முடியும்.
இதன் அடிப்படையில் வெவ்வேறான நன்மைகளைப் பார்க்கலாம்:

கவனம் சார்ந்த நன்மைகள்
4 முதல் 8 வயது வரையிலான இருமொழிக் குழந்தைகள் ஒருமொழிக் குழந்தைகளை விட அவர்களின் கவனக் கட்டுப்பாட்டில் அதிகக் கவனம் செலுத்துவராக இருப்பார்கள். அதாவது, ஏனைய விடயங்களால் தங்களின் கவனத்தை சிதற விடாமல் ஒரு விடயத்தில் அதிகளவு கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள்.

உரையாடல் சார்ந்த நன்மைகள்
பிள்ளைகளுடன் தாய்மொழியில் கதைப்பதன் மூலம் பெற்றோர்-பிள்ளை மற்றும் பிள்ளை-உறவினர் இடையிலான உறவு வலுப்படுத்தப்படுகின்றது ஏனெனில் இவ்வாறு சொந்த கலாச்சாரம் மற்றும் மரபுகளும் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.

சிந்தனைச் சார்ந்த நன்மைகள்
இருமொழித்துவம் மற்றும் சிந்தனையாற்றல் இடையில் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளதாக பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. சிந்தனையாற்றல் என்றால் கேட்கப்படும் கேள்விகளுக்கு, கற்பனைகளுக்கு இடம் கொடுத்து, வெவ்வேறான பதில்களைக் கொடுக்கும் திறனைக் குறிக்கின்றது. இருமொழி நபர்கள் ஒரு சொல்லுக்கு குறைந்தது இரண்டு வார்த்தைகளைத் (தாய்மொழியிலும் ஏனைய மொழியிலும்) தெரிந்திருப்பதே இதன் காரணம் ஆகும். இது சிந்தனைச் சுதந்திரத்தையும் அதிலுள்ள செல்வத்தையும் வலுப்படுத்துகின்றது.

மொழி சார்ந்த நன்மைகள்
இருமொழி அறிந்தவர்கள் சொற்களின் ஒலியை விட கருத்தில் கவனம் செலுத்தும் அதிகத் திறனைக் கொண்டவர்கள் என நிரூபிக்கப்படுகின்றது. இதை பாடல்கள் மூலமும் அவதானிக்கலாம். மேலும், இருமொழி அறிந்தவர்கள் மொழிகளின் வெவ்வேறான அமைப்புக்கள் தெரிந்திருப்பதால் மூன்றாவது அல்லது நான்காவது மொழி ஒன்றினை கற்றுக் கொள்வதற்கான ஆற்றல் இவர்களிடம் உள்ளது.

வயதானவர்கள் சார்ந்த நன்மைகள்
சிறு வயதிலிருந்தே மூளையை பயிற்சிக்கு உள்ளாக்கி வந்ததால், இருமொழி தெரிந்த வயதானவர்களின் அறிவாற்றல் திறன் குறைவதற்கான அறிகுறிகள் தாமதமாக வெளிவரும் என ஆய்வுகள் விளக்கின்றன. மூளை ஒரு தசை என்பதால் அதை நாங்கள் தொடர்ச்சியான முறையில் பயிற்சிக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வேலைச் சார்ந்த நன்மைகள்
இன்றைய காலக்கட்டத்தில் பல நிறுவனங்கள் வெவ்வேறு மொழிகள் தெரிந்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள். ஆகையால், இருமொழி தெரிந்தவராக இருப்பது வணிக உலகில் நுழைவதற்கான ஒரு பெரும் வாய்ப்பை வழங்குவது மட்டுமல்லாமல் எமது Curriculumக்கு ஒரு கூடுதல் மதிப்பைக் கொடுக்கின்றது.

ஆலோசனைகள்
ஒரு மொழி முக்கியமற்றது என கருதப்பட்டால் அதை குழந்தைகள் எளிதில் உணருவார்கள். ஆகையால், இரு மொழிகளுக்கும் குடும்பத்தினர் ஒரே முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும். வெவ்வேறு மொழிகள் பெற்றோர்கள் கதைப்பதால் உடனடியாக இருமொழித்துவம் உள்ளதாக கூற முடியாது: இரு மொழிகளையும் சமமான முறையில் கதைப்பதை குழந்தைகள் கேட்க வேண்டும். இதைப் பின்பற்றுவதற்கான ஒரு முறை, சிறிதளவில் பாவிக்கும் மொழியை வீட்டில் கதைப்பதும் பெருமளவில் பாவிக்கும் மொழியை வெளியே கதைப்பதும் ஆகும்.
ஒரு மொழி கதைக்கும் போது இன்னொரு மொழியையும் இணைத்து கதைப்பதை நிறுத்துவதன் மூலம் இருமொழித்துவத்தின் நன்மைகளைக் காண முடியும். இதைப் பொதுவாக அனைத்து மொழிகளிலும் காணலாம். எனவே தேவையில்லாத மொழி என்று எதுவும் இல்லை.

முடிவு
எமது பிள்ளைகளுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் தமிழ் மொழியை கற்பிப்பதன் மூலம் அவர்களின் கல்வி பாதிப்படையாது என்றும் அவர்களுக்கு பல விதமான நன்மைகளும் உதவிகளும், எமது கலாச்சாரம் மறறும் மரபுகளை அறிவதற்கான வாய்ப்பும் இதனால் கிடைக்கும் என்பதையும் புரிந்துக் கொள்வதற்கு இக் கட்டுரை உதவியிருக்கும் என்று எதிர்ப்பார்க்கின்றோம்.
இன்று எமது பிள்ளைகளுக்காக நாம் எடுக்கும் முடிவுகள் நாளை அவர்களின் எதிர்காலத்திற்கு பயனளிக்கும் என்பதை நினைவில் கொண்டு தவறான நம்பிக்கைகளுக்கு உள்ளாகாமல் இருப்பது முக்கியம் ஆகும்.
இவ் அவசரகாலச் சூழ்நிலையில் நாம் அனைவரும் வீட்டில் இருக்கும் நாட்களை பயனுள்ளதாக மாற்றியமைக்க வேண்டும். எனவே, இந்த நாட்களில், எமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களுக்கு எமது மொழியை கற்பிப்போம் அல்லது மேம்படுத்துவோம்.

மேலதிக தெளிவுப்படுத்தல்கள், சந்தேகங்கள் அல்லது ஒருவருடன் கதைக்க வேணடும் என்ற தேவையை நீங்கள் உணர்ந்தால் எங்களைத் தொடர்புக் கொள்ளத் தயங்காதீர்கள்!

உங்கள் கவனத்திற்கு