உலக சுகாதார அமைப்புக்கு நிதியளிப்பதை முடக்கியுள்ளார் Donald Trump
உலக சுகாதார அமைப்புக்கு (WHO – World Health Organisation) அமெரிக்காவினால் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த நிதியை (2019 வருடத்தில் 40 கோடி USD வழங்கப்பட்டன) முடக்கப்பட்டுள்ளது என்று USA சனாதிபதி Donald Trump அறிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் மிக கடுமையாக உலக சுகாதார அமைப்பின் செயற்பாட்டை Trump விமர்சித்து வந்தார். அதாவது உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக இருக்கிறது, சீனாவின் தவறுகளை மூடிமறைக்க உதவுகிறது, தொற்றுநோய் பற்றிய முன்னறிவித்தல்களை நாடுகளுக்கு அறிவிக்க தவறிவிட்டது என்று பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
உலக சுகாதார அமைப்பின் பொறுப்பற்ற செயல்கள் பல உயிர்களை பலியெடுத்துள்ளது என்றும் Trump நேற்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், உலக சுகாதார அமைப்பு சீர்திருத்தப்படாவிட்டால் வேறு நாடுகளின் ஆதரவோடு புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அவசரநிலையில் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்ட நிதியை முடக்குவது ஒரு மோசமான நடவடிக்கையாக இருக்கிறது என்ற கருத்தை பல நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
“குற்றம் சாட்டுவது ஒரு பயனற்ற செயல். நாடுகளின் எல்லைகள் அறிந்து வைரசுகள் செயற்படுவதில்லை” என்று Germany வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 26.000 நபர்களுக்கு மேலாக உயிரிழந்துள்ளார்கள். ஆதரவு இல்லாதவர்களும் ஏழை மக்களும் அதிகூடிய பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகிறது.
தர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தில், மற்றவர்களை குறை கூறும் ஒரு பொறுப்பற்ற அரசியலை சனாதிபதி நடத்திக்கொண்டு வருகிறார் என்பதை பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்.