COVID-19 தொற்றுநோயை வெற்றிகரமாக எதிர்கொண்டுவரும் கேரளா மாநிலம்
மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியாவில் வெறும் 6 நபர்கள் மட்டுமே கொரோனாவைரசுக்கு உள்ளாகியிருந்தனர். அதில் 3 நபர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் சில வாரங்களிலே நாடு முழுவதுமாக 17 ஆயிரம் மக்கள் தொற்றுக்கு உள்ளாகி, Mumbai போன்ற வளர்ச்சியடைந்த நகரங்கள், வைத்தியசாலைகள் அனைத்தும் முடக்க நிலைக்குத் தள்ளப்பட்டன.
இதே சமயத்தில், கேரளா மாநிலத்தில் தொற்றுநோயை கட்டுப்படுத்த சிறப்பான உத்திகள் அம் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதலில், வறுமையை ஒழித்து செழிமையை மேம்படுத்தும் சமூக-பொருளாதார அரசியலால் கேரளா ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கூடிய கல்வியறிவு விகிதம், சிறந்த சுகாதார அமைப்பு கொண்டுள்ளது.
நீண்ட காலமாக சமூக மக்களாட்சி கொள்கைகளுடன் பொதுவுடைமை கட்சிகளால் கேரளா அரச கட்டமைப்பு ஆளப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்த மாநிலத்தில் சுகாதார பாதுகாப்பு ரீதியாக சில பலவீனங்களும் உள்ளன.
தொழிலார்களை உருவாக்கும் முறைகள் கேரளாவில் மிக சிறப்பாகவே உள்ளன. அதனால் திறமையான தொழிலார்களே இந்த மாநிலத்தின் முக்கிய ஏற்றுமதியாக இருக்கின்றனர். குறிப்பாக இவர்கள் மத்திய கிழக்கு (Middle-East) நாடுகளில் வேலைகள் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வெளிநாட்டிலிருந்து அதிக பணம் கிடைக்கப் பெறுகிறது. பணம் மட்டுமில்லாமல், வெளிநாடு சென்றுள்ள இவர்கள் விடுமுறைக்கு மீண்டும் கேரளா திரும்புவது வழக்கம் ஆகும்.
கேரளா மாநிலம் ஒரு பெரிய சுற்றுலா மையமாகும். மாநிலத்தின் வருமானத்தில் ஒரு பெரும் பங்கு சுற்றுலாச் சம்மந்தமான வணிகாத்தால் வருகிறது.
இந்த இரண்டு காரணிகளால் வெளியிடங்களில் இருந்து போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதனால் கேரளாவின் குடிமக்களுக்கு தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.
ஆரம்பத்தில் Wuhan நகரத்தில் இருந்து மிட்கப்பட்ட 100 இந்தியர்களில் தொற்றுக்கு உள்ளாகிய 3 கேரள நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். இருப்பினும், பிப்ரவரி 24ம் திகதி பரவல் அதிகமாகி கேரளாவில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100யும் தாண்டியது.
ஆனாலும் இந்த தொற்றுநோயிற்கு எதிரான போராட்டத்தில் மாநில சுகாதார அமைப்பு, தெளிவானத் தொடர்புகள் மற்றும் சமூக ஒற்றுமை பக்க பலமாகவே இருக்கிறது.
சமீப காலத்தில் கேரளா சந்தித்த 2 பாரிய வெள்ளப்பெருக்குகள் மற்றும் h1n1, Nipah வைரசுகள் போன்றவற்றில் அந் நாட்டு மக்களின் ஒன்றிணைந்த ஒத்துழைப்பு மற்றும் தன்னார்வ செயல்களால் சிறப்பாக மீண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2018ம் ஆண்டு கேரளாவைத் தாக்கிய Nipah வைரசினால் பெறப்பட்ட அனுபவங்கள் தற்போது COVID-19 நோயையும் வெற்றிகரமாக கையாள வழிவகுத்துள்ளன. இதன் மூலம், பயனுள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தயாராக்கியது கேரள அரசு. இப்போது கொரோனா வைரசினால் தனிமைப் படுத்தப்படடவர்கள் தொடர்பு தடமறிதல், தொலைபேசி மற்றும் அயலவர்கள் மூலம் தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியா முழுவதும் அவசர நிலையை பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முன்னரே கேரளா மாநிலம் தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளி, சுகாதார நெறிமுறைகள் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது.
பாடசாலைகள் மூடப்பட்டிருந்தாலும் மாணவர்களுக்காக வழங்கப்படும் மதிய உணவுகள் வீட்டுக்குக் கொண்டுச் சென்று வழங்கப்பட்டன. பொருட்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து தரப்படும் சேவைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டன. வேறு மாநிலங்களில் இருந்து பணிபுரியும் தொழிலாளர்கள் கவனிக்கப் பட்டனர். மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த உதவிகள் வழங்கப்பட்டன. இவ்வாறான சமூக உதவித் திட்டங்களுடன், “தொற்றுப் பரவல் சங்கிலியை உடைப்போம்” என்ற பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
மேலதிகமாக, தென்கொரியா செயற்பட்ட வடிவத்தில் கேரளாவிலும் மக்களுக்கு அதிக அளவில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு சமூகம் ஒத்துழைத்து, குறிப்பாக மாணவர்களும் உதவிகள் வழங்கி, பொது இடங்களில் பரிசோதனை மையங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவில் பரிசோதனைகளை விரைவாக அமுல்படுத்திய முதலாவது மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான விவேகமான மற்றும் தர்க்கமான செயற்பாடுகளூடாக கேரளா மாநிலத்தில் தொற்று நோயின் பரவுதல் வேகம் குறைந்துள்ளது. இதனால் உலகில் பல நாடுகள் கேரளாவின் அரசு நடவடிக்கைகளைப் பாராட்டுகின்றனர்.
இப்பொழுது தொற்று நோய் வளைவு சமமாகியுள்ள நிலையில் பொருளாதார சிக்கலை கேரளா அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது. இந்த அவசரகால நிலையில் இருந்து விரைவில் கட்டுப்பாடுகளை நீக்கி அன்றாட வாழ்க்கைமுறைக்கு திரும்புவதுச் சார்ந்து ஆலோசித்து வருகிறது.
இதை பாதுகாப்பான வழியில் மேற்கொள்வதற்கு ஏராளமான காரணிகளைப் பொறுத்து இருக்கிறது. கோடைப் பருவமழை, தொடர்ந்து வரும் வெள்ளம், அத்துடன் ஊருக்கு திரும்பி வருபவர்கள் கூடுதலான சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஆனால், கொரோனாவைரசின் அடுத்த நிலைக்கு, கேரளா தயாராக இருக்கும் என்பது தெளிவாக உள்ளது.