மே 4 நடைமுறைக்கு வரும் புதிய நெறிமுறைகள்
அவசரநிலையின் கட்டம் 2 எதிர்கொள்ள கடந்த வாரங்களில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சிறப்பு குழுவின் அறிக்கை பிரதமர் Conte யிடம் நேற்று சமர்பிக்கப்பட்டது. மே 4 திகதியிலிருந்து கட்டம் 2 ஆரம்பமாகவுள்ளது என்று பிரதமர் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வரப்போகும் கட்டம் 2 இல் விதிக்கப்பட்ட நெறிமுறைகளை பாதுகாப்பான முறையில் எளிதாக்குவதும், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீள எளுப்புவதுமே நோக்கமாக இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 27 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவது சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
சிறப்புக் குழுவின் கட்டம் 2 க்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
பாதுகாப்பு முறைகள்
முக்கியமாக சமூக இடைவெளி, முக கவசம் அணிதல், COVID மருத்துவமனைகள் நிறுவுதல், தொற்றுநோய் பரிசோதனைகள், தொடர்பு தடமறிதலுக்கான செயலிகள் (App) போன்றன அவசியமாக்கபடுவதோடு அவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
நகர்வுகள்
மே 4 லிருந்து ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நகராட்சியிலிருந்து வெளியேறுவது எளிதாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மாநிலத்தில் (Regione) இருந்து வேறொரு மாநிலத்துக்கு நகர்வதற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நகர்வுகளுக்கான சுய அறிவிப்புப் படிவம் (Autodichiarazione) வைத்திருப்பது அவசியம்.
கடைகள்
மே 4 முதல் வர்த்தகத் துறையை மறுதொடக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் ஆடை முதல் காலணி வரை சில வகையான கடைகளை மீண்டும் திறப்பது குறித்து இன்னும் பல சிக்கல்கள் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கான இடைவெளியை கையாளுவதை விட கூடுதலாக துணிகளை சுத்தம் செய்வதே பெரிய சவாலாக இருக்கிறது. இதற்கு புதிய இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. மேலும், வணிக வளாகங்கள் (Centri commerciali) மற்றும் உள்ளூர் சந்தைகளும் மூடப்பட்டிருக்கும்.
நிறுவனங்கள்
வல்லுனர்களின் கூற்றுப்படி, உற்பத்தி மற்றும் துணித் துறைகள் “நடுத்தர-குறைந்த” அளவிலான ஆபத்தில் உள்ளன. எனவே மே 4 முதல் மீண்டும் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும். ஆனால் smart வேலையில் தங்கள் பணிகளைச் செய்ய முடியாதவர்களுக்கு நேர மாற்றங்களூடான நுழைவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், அலுவலகத்தில் செயல்படுவோருக்கு பாதுகாப்பு இடைவெளிகள் கடைபிடிக்க வேண்டும் மற்றும் நுழைவாயிலில் காய்ச்சல் அளவிடப்பட வேண்டும்.
அழகு நிலையங்கள்
உபயோகிக்கும் கருவிகளை சுத்தம் செய்தல், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே பாதுகாப்புகளை பேணுதல் போன்ற கடுமையான விதிமுறைகளை நிலையங்கள் பின்பற்ற வேண்டும். இந்த வகையான நிலையங்கள் இன்னும் கூடியளவு ஆபத்துக்களை கொண்டுள்ளமையால் உடனடியாக திறப்பது சாத்தியமில்லை. எனவே, மே மாதம் 11 ஆம் திகதிக்குப் பிறகு தான் திறப்பது பற்றி ஆலோசித்து வருகிறது.
Bar மற்றும் உணவகங்கள்
இந்த இடங்களை மீண்டும் திறப்பது மற்ற செயல்பாடுகளுடன் ஒப்பிடும்போது “அதிக ஆபத்தான தாக்கத்தை” அளிக்கிறது. எனவே மேசைகளுக்கு இடையில் குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளி மற்றும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொடர்பு ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அவ் இடங்களில் கூடும் வாடிக்கையாளர்களை மட்டுப்படுத்தி குறைக்க வேண்டும். ஆகவே, மே 11 அல்லது 18 க்கு முன்னர் அவை மீண்டும் திறக்கப்படாது என்பது தெளிவாகத் தெரிகிறது.
நடைபயிற்சி
சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு நடைபயிற்சி, வெளியில் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். பூங்காக்கள், மைதானங்கள் திறப்பது ஒவ்வொரு நகராட்சியின் ஆளுநரைப் பொறுத்தது.
மேலும், சிறப்புக் குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், தற்போதைய தொற்றுநோய் இனப்பெருக்க எண் “R0” 0.5 -0.7 க்குள் உள்ளது. இதனால் “இத்தாலி முழுவதும் இதுவரை 3% விகித மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதால் எச்சரிக்கையாகவும் படிப்படியாகவும் மீள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை” பரிந்துரைக்கிறது.
Lombardia வில் தொற்றுக்குள்ளானவர்கள் 10% சதவீதம் என்றும், Lazio வில் இது 0.5 க்கு சமம் என்றும் வரைபடங்கள் குறிப்பிடுகின்றன. Piemonte யில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 3% சதவீதம், Emilia Romagna வில் அவை 5.5% சதவீதமாக உயர்ந்துள்ளன, Liguria வில் 4% சதவீதமும், Campania வில் 0.2% சதவீதமாகவும் உள்ளன என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.