Genova, Morandi பாலத்தின் மறு மலர்ச்சி
Genovaவில் அமைந்துள்ள Morandi பாலம் Riccardo Morandi எனும் பொறியியலாளரால் வடிவமைக்கப்பட்டு 1963-1967க்கு இடையிலான காலப்பகுதியில் கட்டப்பட்டது. இது Genova நகரில் உள்ள Polcevera நீரோடையையும் Sampierdarena மற்றும் Cornigliano எனும் சுற்றுப்புறங்களைத் தாண்டிய ஒரு நெடுஞ்சாலைப் பாலமாகும்.
14 ஆகஸ்ட் 2018 அன்று, காலை 11.36 அளவில், இப் பாலம் சரிந்து விழுந்தது. இச் சரிவால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாலத்திற்கு கீழ் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் உள்ளடங்கிய 43 உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. சரிவைத் தொடர்ந்து பலர் அவர்களின் வீடுகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்கள்.
ஆகஸ்ட் 2019ல் இந்த பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு மறுபடியும் கட்டியமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. பாலத்தின் புனரமைப்பிற்கான அனைத்து வேலைகளும், கொரோனாவைரசின் அவசரகாலங்களில் கூட, விரைவாகவும், நிறுத்தப்படாமலும் தொடரப்பட்டன.
இன்று காலையில், பிரதமர் Conteயின் தலைமையிலும் பாலத்தின் கட்டமைப்பு முடிவடைந்தது.
“Genova நகரத்திற்கு கொண்டாட்ட நாளாக அமைய வேண்டிய இன்றைய தினம் கொரோனாவைரசு அவசரநிலை காரணமாக பெருமளவில் கொண்டாட முடியாத ஒரு நிலைக்குள் அதிகாரிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கம் ஒருபோதும் Genova நகரத்தை கைவிடவில்லை. நானும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இங்கு பங்கு கொள்கிறேன். இன்று நாம் ஒரு பெரும் காயத்திற்கு தையல் போடுகின்றோம்.
ஆனால் இக் காயத்தை முழுமையாக குணப்படுத்த முடியாது, ஏனெனில் 43 உயிர்களை இழந்துள்ளோம் என்பதை மறக்கக் கூடாது” என பிரதமர் புதிய பாலத்தை அறிமுகப்படுத்தியபோது கூறினார்.
இத்தாலி முழுவதற்குமே Genova ஒரு எடுத்துக்காட்டாக அமைகின்றது எனவும் பிரதமர் பெருமையாகக் கூறினார். பாலத்திற்கான உத்தியோகபூர்வ திறப்புவிழா கோடை காலத்தில் நடைபெறும் என்றும் போக்குவரத்துச் சேவைகள் ஜுலை மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.