கொரோனவைரசு தொற்றும் இடங்களில் குழந்தைகளை தாக்கும் Kawasaki நோய்
ஐரோப்பாவின் பல பகுதிகளில் உள்ள குழந்தை மருத்துவர்கள் ஒரு அரிய அழற்சி/வீக்கம் நோய்க்குறியால் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது kawasaki நோயாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
21 மார்ச் Bergamo இன் ஒரு மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட ஒரு குழந்தையிடம் இந்த kawasaki நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப் பட்டுள்ளது என அவ் மருத்துவமனையின் இருதய மற்றும் குழந்தை மருத்துவர் Matteo Ciuffreda தெரிவித்துள்ளார். அதற்கு பின்னர், Bergamo வில் இந்த நோயால் மேலும் 20 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இந்த ஒரு மாதத்தில் சமனாகியுள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த kawasaki நோய் இத்தாலியில் Bergamo மற்றும் Genova விலும், ஐக்கிய இராச்சியம், போர்த்துக்கல் போன்ற நாடுகளில் தற்போது அதிகளவு தாக்கிவருகிறது. மேலும், Sars-Cov 2 மற்றும் Kawasaki நோய்க்கும், ஒரு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Kawasaki நோய் : இது குழந்தைகளை பாதிக்கும் இரத்த நாளங்களின் வீக்கம் அல்லது அழற்சி (vasculiti) ஆகும். இது பிறந்த குழந்தைகள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறார்களில் பெரும்பாலும் தோன்றுகின்றது. பொதுவான அறிகுறிகளாக: தொடர்ச்சியான அதிக காய்ச்சல், சொறி, முனைகள் (கரங்கள் மற்றும் பாதங்கள்) மற்றும் சளி சவ்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், உதடுகள் சிவத்தல், வெண்படலம் ஆகியவையாகும்.
மேலும், இதயத்தின் தமனிகளின் அழற்சியே மிகவும் பயமுறுத்தும் சிக்கலாகும். இது இதயத் தமனிகளின் நிரந்தர விரிவாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பொதுவாக, இந்த நோய்க்கான சரியான மற்றும் விரைவான சிகிச்சை முறை மூலம் அனைத்து குழந்தைகளும் குணமடைகின்றனர்.
கொரோனாவைரசால் அதிகளவு பாதிக்கப்பட்ட Lombardia, Piemonte மற்றும் Liguria மாநிலங்களில் இந்த நோய் பற்றிய கண்காணிப்பு மற்றும் தரவுகள் சேகரிப்பு ஆரம்பமாகியுள்ளது என்று இத்தாலிய குழந்தை மருத்துவ சங்கத்தின் தலைவர் Alberto Villani தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிலையை சிறப்பாக கண்காணிக்க, அனைத்து இத்தாலிய குழந்தை மருத்துவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, அதில் மேல் விவரிக்கப்பட்ட அறிகுறிகளுக்கு கூடுதல் கவனம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில், குழந்தை மருத்துவர்கள் இதேபோன்ற அவதானிப்புகளை மேற்கொண்டுள்ளனர் மற்றும் சுகாதார அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். அந் நாட்டின் தேசிய மருத்துவ இயக்குனர் Stephen Powis, கொரோனாவைரசுடனான தொடர்பைத் தீர்மானிப்பதற்கு இன்னும் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இது குறித்து பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது மிக அவசியமாகும்.