மிடுக்குடன் தொடங்கும் இயற்கையின் ஆட்சி!
மனித வாழ்விற்கு அத்தியாவசியமானவற்றில் ஒன்று வளியாகும். சுத்தமான காற்றை நாம் சுவாசிப்பது முக்கியம். ஆனால், கடந்த நூற்றாண்டிலிருந்து வளி மாசுபாடும் அதிகரித்து வந்துள்ளது.
இவ் மாசுபாடானது வாகனப் புகை, தொழிற்சாலைகளின் புகை, எரிபொருட்கள் போன்றவற்றால் ஏற்படுகிறது. மாசுபாட்டின் விளைவாக புகை மூட்டம் மற்றும் வானிலை மாற்றம் உண்டாவதோடு, தூய்மையற்ற காற்றை சுவாசிப்பதால் மனிதனுக்கு உடல் நலச் சீர்கேடு ஏற்படுகிறது. அதாவது ஆஸ்துமா, இதய நோய் மற்றும் நுரையீரல் நோய், மூக்கு, தொண்டை, கண்கள் அல்லது தோல் எரிச்சல் போன்ற நோய்கள் நம்மைப் பாதிக்கின்றன. வளி மாசுபாட்டால் ஒரு வருடத்தில் மட்டும் 2.5 மில்லியன் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
ஆனால் தற்போதைய கொரோனா வைரசு முடக்குநிலை காரணமாக சாலைகளில் உந்துகளின் போக்குவரத்தின்மையாலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாகவும் வளிமண்டலம் தூய்மையடைந்து வருகின்றது. மனிதனால் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் மாசுபடுத்திகளில் ஒன்றான நைதரசனீரொட்சைடின் (NO2) அளவு வளிமண்டலத்தில் குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சென்ற ஆண்டோடு ஒப்பிடும்போது ஐரோப்பாவில் இவ்வருடம் ஒரே மாதத்தில் நைதரசனீரொட்சைடின் (NO2) அளவு கிட்டத்தட்ட ஐம்பது வீதம் (50%) குறைந்துள்ளது. உலகமெங்கும் இந்த மாற்றம் உணரப்பட்டது.
காற்றோடு ஒலியின் மாசுபடுதல் தன்மையும் குறைந்துள்ளது. பெரிய நகரங்களில் ஆரவாரம் குறைந்ததால் நகரங்களிற்குள் பல வன விலங்குகள் நடமாடத் தொடங்கியுள்ளன. கடலிலும் நீருந்துகளின் போக்குவரத்தின்மையால் வழமையாகக் காணக்கிடைக்காத ஓங்கில் (delfino) மற்றும் திமிங்கலம் போன்ற பெரிய மீன்களை பலர் கண்டு ரசித்துள்ளனர். ஒலி மாசுபடுதல் குறைந்ததால் நிலஅதிர்வுகளை அளவிடுதல் மிகவும் இலகுவாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரசு மூலம் மனிதனால் கட்டுப்படுத்தப்பட்ட இயற்கை, மீண்டும் தன்னை நிலைப்படுத்துவது போல் தெரிகிறது.
ஆய்வாளர்கள் காற்றின் மாசிற்கும் வைரசின் தொற்றிற்கும் தொடர்புள்ளது என்கிறார்கள். அதாவது மாசு அதிகமாக இருக்கும் பகுதிகளில் வைரசின் தொற்று அதிகமாக உள்ளதை அவதானித்துள்ளார்கள். எனவே, நாம் சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம். பல உலக நாடுகள் இதற்கான வழிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். முக்கியமாக முடக்குநிலைக்குப் பின்னர் நமது போக்குவரத்தில் கவனம் செலுத்தவேண்டும். இயந்திர வாகனங்களான உந்துருளிகள், மகிழுந்துகள் போன்றவற்றைத் தவிர்த்து, மிதியுந்து, ebike, மற்றும் பல்வேறு இயற்கைக்கும் நமக்கும் கேடு விளைவிக்காத உந்துகளைப் பயன்படுத்தலாம்.
மேற்கத்திய உலகத்தில் சூழல் மாசுபடுதல் என்று கூறினால் போக்குவரத்துக்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையை முக்கிய காரணிகளாய் நினைவில் வரும். ஆனால் எங்கள் மண்ணில் இயற்கை வளம் அரசாங்கத்தால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கங்கள் தமிழினத்தை அழிப்பது மட்டுமல்லாமல் சூழலையும் குறிவைத்தனர்.
யுத்த காலங்களில் இராணுவ குண்டுவீச்சுகளில் அழிக்கப்பட்ட காடுகள் மற்றும் இராணுவ காப்பரண்கள் ஆகியவை உருவாக்க பல்லாயிரக் கணக்கான மரங்கள் வெட்டித்தள்ளப்பட்டன. மீள்வனமாக்கவும் இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு 1994 ஆண்டுகளில் எமது தேசியத் தலைவர் தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவை அமைத்தார். காடு மற்றும் விலங்குகளின் நலன்கருதி மரங்கள் நட்டும் இயற்கையைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தினார். மிக இறுக்கமான நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. அவரின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் 1994 முதல் 2005 வரை பல்வகைப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டது.
“இயற்கை எனது நண்பன்” என்ற சிந்தனையை சொல்லில் மட்டுமல்லாமல் செயலில் உலகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளவர் எம் தமிழீழத் தேசியத்தலைவர்.
ஆகையால் நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்த நாட்டின் கட்டுப்பாட்டிற்கேற்ப சூழலைப் பாதுகாத்து நம் வாழ்வை மேம்படுத்துவதோடு, எமது எதிர்கால சந்ததியினருக்கும் ஓர் ஆரோக்கியமான வாழ்வைக் கையளிப்போம்.