கட்டம் 2 இன் நெறிமுறைகள் அடங்கிய ஏப்ரல் ஆணையின் முக்கிய அம்சங்கள் எவை?

26 ஏப்ரல் 2020 வெளியிடப்பட்ட ஆணை, மே 4 முதல் நடைமுறையிலிருக்கும் பல விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது:

  • ஒரே பிராந்தியத்தில் வசிக்கும் ஒருவரின் உறவினர்களை பார்வையிடுவதற்கான வாய்ப்பு; சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கு இணங்க கூட்டங்களைத் தவிர்த்து பூங்காக்களை மீண்டும் திறப்பது, (நகர ஆளுநர்கள் தற்காலிகமாக பூங்காக்களை மீண்டும் மூட முடிவு செய்யலாம்).
  • பொதுமக்கள் அணுகக்கூடிய மூடிய இடங்களில் (பொது போக்குவரத்து மற்றும் வணிக நிறுவனங்கள் போன்றவை) முகக் கவசங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாகிறது.
  • புதிய ஆணை, சுவாச நோய்க்கான அறிகுறிகள் மற்றும் 37.5 பாகைக்கு மேல் உடல் வெப்பநிலை உள்ள அனைவருக்கும் வீட்டிற்குள் இருக்க வேண்டிய காட்டாயத்தை நிறுவுகிறது. மேலும், அவர்கள் தங்கள் குடும்ப வைத்தியரைத் தொடர்பு கொள்ளவேண்டும்.
  • மே 4 முதல், நீங்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் கூட, நடைபயிற்ச்சி, உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம். இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கு, அதிகபட்சமாக 15 நபர்களைக் கொண்டு , தற்பாதுகாப்பிற்கான முகக் கவசங்களை அணிந்துகொண்டு நிற்கவேண்டும் .
  • மே 4 முதல் bar , உணவகங்கள் மற்றும் எடுத்துச் செல்லக் கூடிய அல்லது வீட்டுக்கு கொண்டு வந்து தரக்கூடிய சேவைகள் கொண்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதிக்கிறது.
  • மேலும், பல்வேறு உற்பத்தி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள், கட்டுமானத் துறைகளுக்கான நடவடிக்கைகள் அகியனவை பணியிடத்தில் பாதுகாப்பு தொடர்பான நடைமுறையில் உள்ள விதிகளுக்கு இணங்கி மீண்டும் தொடங்கலாம்.

நகர்வுகள்

மற்றவர்களை சந்திக்கச் செல்லலாமா?
உங்கள் உறவினர்களை மட்டுமே சந்திக்க நகர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. இது நியாயப்படுத்தப்பட்ட தேவையான நகர்வுகளாகக் கருதப்பட வேண்டும். இருப்பினும், பிற நபர்களூடான சந்திப்புகளை அதிகபட்சமாக மட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இது தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த சந்திப்புகளின் போது பின்வருவனவற்றை மதிக்க வேண்டும்: கூட்டங்கள் உருவாகுவதை தவிர்த்தல், குறைந்தது ஒரு மீட்டராவது ஒருவருக்கொருவர் பாதுகாப்பு இடைவெளியை பேணுதல் மற்றும் தற்பாதுகாப்பிற்காக முகக் கவசங்களைப் பயன்படுத்தல் போன்றவை அவசியம்.

26 ஏப்ரல் ஆணையின்படி, சந்திக்க அனுமதிக்கப்பட்ட உறவினர்கள் யார்?
ஆணையில் குறிப்பிடும் “உறவினர்கள்” பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: வாழ்க்கைத் துணை, திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவர்கள், நிலையான உறவுப் பிணைப்பால் இணைக்கப்பட்ட நபர்கள், நெருங்கிய சொந்தங்கள்.

வெளியே நடந்து செல்லலாமா ?
வேலைக்குச் செல்வதற்கும், சுகாதார காரணங்களுக்காகவும், அவசிய தேவைக்காகவும் அல்லது விளையாட்டு அல்லது உடற்பயிற்சி வெளியில் மேற்கொள்ள மட்டுமே நீங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியும். எனவே, மேலே சுட்டிக்காட்டப்பட்ட ஒரு காரணத்தால் நியாயப்படுத்தப்பட்ட ஒரு நகர்வை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. உதாரணமாக, கடைக்குச் செல்வது, செய்தித்தாள்கள் வாங்குவது, மருந்தகத்திற்குச் செல்வது, அல்லது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்குவது அல்லது சந்தைக்குச் செல்வது போன்ற காரணங்களுக்காக வெளியில் நடந்து செல்லலாம். கூடுதலாக, வெளிப்புற விளையாட்டுப்பயிற்சி அல்லது நடைபயிற்சிக்காக வீட்டிலிருந்து வெளியேறுவது அனுமதிக்கப்படுகிறது. பணியிடத்தால் வழங்கப்பட்ட வேலைக்கான ஆவணங்களைக் காண்பிப்பதன் மூலம் வேலைக்கான நகர்வை நிரூபிக்க முடியும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அனைத்து நகர்வுகளும் மக்களின் கூட்ட நெரிசல்கள் உருவாக்குவதை தவிர்ப்பது அவசியம். எனவே ஒருவருக்கொருவர் இடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியை மதிக்க வேண்டிய கடமைக்கு உட்பட்டது.

உறைவிடம், இருப்பிடம் மற்றும் குடியிருப்புக்கு வெளியே இருப்பவர்கள் இவற்றிற்கு திரும்பிச் செல்ல முடியுமா?
வெவ்வேறு பிராந்தியங்களுக்கு இடையிலான நகர்வாக இருந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் உறைவிடம், இருப்பிடம் மற்றும் குடியிருப்புக்கு திரும்பிச் செல்ல அனுமதி உண்டு.

உறைவிடம், இருப்பிடம் மற்றும் குடியிருப்புக்கு திரும்பியதும் இவற்றில் இருந்து மறுபடியும் வெளியேற முடியுமா?
26 ஏப்ரல் 2020 அன்று பிரதமரால் வெளியிடப்பட்ட ஆணையின் படி நிரூபிக்கப்பட்ட வேலைத் தேவைகள், அவசரத் தேவைகள் மற்றும் சுகாதாரக் காரணங்களுக்காக மட்டுமே வெவ்வேறு பிராந்தியங்களுக்கு நகரலாம். ஆகையால், இன்னொரு பிராந்தியத்திலிருந்து சொந்த உறைவிடம், இருப்பிடம் மற்றும் குடியிருப்புக்கு திரும்பியதும், மேல் குறிப்பிடப்பட்ட காரணங்களைத் தவிர வந்தடைந்த பிராந்தியத்திலிருந்து வெளியேற முடியாது.

எனது பிள்ளையை ஒரு பூங்கா அல்லது பொது தோட்டத்திற்கு அழைத்துச் செல்லலாமா?
கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பு தூரத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே பூங்காக்கள் மற்றும் பொதுத் தோட்டங்களுக்கான பொது அணுகல் அனுமதிக்கப்படுகிறது. புதிய ஆணையின் படி, மூடிய நிலையில் இருக்கும் குழந்தைகளின் விளையாட்டுப் பகுதிகளை பயன்படுத்த முடியாது. ஆனால் குறிப்பிட்ட பகுதிகளை தற்காலிகமாக மூட ஒவ்வொரு நகர ஆளுநரும் உத்தரவிடலாம்.

உடற்பயிற்சி செய்ய முடியுமா?
ஒன்றாக வாழும் நபர்களாக இல்லாவிட்டால், தனியாக வெளியே சென்று உடற்பயிற்சி செய்யலாம். மே 4 முதல் உங்கள் வீட்டிற்கு அருகில் இல்லாமல் தூரம் சென்று உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். சிறுவர்கள் மற்றும் முற்றிலும் தன்னிறைவு இல்லாதவர்களுடன் இன்னொரு நபர் செல்லலாம்.
உடற்பயிற்சி செய்பவர்கள் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் தூரத்தையும், நடைப்பயிற்சி செய்பவர்கள் ஒரு மீட்டர் தூரத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயமாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், கூட்டமாகச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
மேற்கூறிய உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியை மேற்கொள்வதற்கு, பொது அல்லது தனியார் போக்குவரத்து வழிமுறைகளுடன் பயிற்சிக்கான அந்தந்த இடங்களை அடையலாம். உங்கள் பிராந்தியத்திற்கு வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய முடியாது.

மிதிவண்டியைப் பாவிக்க முடியுமா?
வேலையிடம், வீடு மற்றும் கடைகளை சென்றடைவதற்கும், உடற்பயிற்சிக்கும் மட்டுமே, தகுந்த பாதுகாப்பு தூரத்தைக் கடைப்பிடித்து, மிதிவண்டியைப் பயன்படுத்த முடியும்.

மயானத்திற்கு செல்ல முடியுமா?
கூட்டங்களைத் தவிர்த்து, பாதுகாப்பு தூரத்தைக் கடைப்பிடித்து, வாழும் பிராந்தியத்திற்குள், உறவினர்களை அடக்கம் செய்திருக்கும் மயானங்களுக்குச் செல்லலாம். பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க முடியாத பட்சத்தில் நகரங்களில் மயானங்கள் மூடப்படலாம்.

வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும், அவற்றில் இருந்து வருவதற்கும் என்ன விதிமுறைகள் உள்ளன?
இது குறித்த தகவல்களுக்கு, வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சின் வலைத்தளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறது. https://www.esteri.it/mae/it/

பல்கலைக்கழகத் தேர்வு மற்றும் பட்டமளிப்பு அமர்வுகள் நடத்த முடியுமா?
பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கடைப்பிடிக்க முடியாத பட்சத்தில் இணையவழி கல்வி நடைமுறைகளைப் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

மேலும், அரசாங்கம் விதித்த நெறிமுறைகளை விட ஒவ்வொரு பிராந்தியத்தில் தனித்தனியாக விதிக்கப்படும் நெறிமுறைகளையும் கவனத்தில் கொள்ளவும்.

உங்கள் கவனத்திற்கு