மே 18, தமிழின அழிப்பு நாளில் இணையத்தளத்தின் ஊடான நினைவேந்தல்!
மே 2009 அன்று தமிழினத்தின் மீதான சிறிலங்கா அரசப்பயங்கரவாதம் உச்சத்தை எட்டிய நாட்கள்.
18 மே நாளையே தமிழின அழிப்பு நினைவு நாளாக மே 2009 ற்குப் பின் தமிழ் மக்கள் உலகளாவிய ரீதியில் நினைவுகூர்ந்து நீதிகேட்டுப் போராடுகின்றனர். ஈழத் தமிழர்கள் வாழ்விலிருந்து அழிக்க இயலாத ஒரு நாள்.
மே 2009 பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்ட நாட்கள் இவை.
இந்த நாளிலே, உயிர்நீத்த மக்களுக்கும் எமக்காய் போராடிய மாவீரர்களுக்கும் வணக்கம் செலுத்தும் விதமாக உலகமுழுவதும் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களால் ஒன்றுகூடி பாரிய அளவில் நினைவுகூரப்படுகிறது.
“முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளி அல்ல” என்பதற்கேற்ப மே 18 ஒரு நினைவுநாள் மட்டுமல்லாமல் எமது விடுதலைக்காக நீதிக்காக தொடர்ந்தும் போராட உந்தும் நாளாக அமைகிறது.
இந்த வகையில், கொரோனாவைரசு காரணமாக இப்போது நாமிருக்கும் இத்தகைய சூழலில் அனைவரும் ஒன்றுகூடி பதினோராமாண்டு நினைவுகூரலை முன்னெடுப்பது என்பது சாத்தியமாக அமையவில்லை. இருப்பினும், இந்த சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இணையவழிமூலம் முன்னெடுக்கப்படவுள்ளது. இவ் இணையத்தளத்தின் ஊடாக உயிரிழந்த எமது உறவுகளுக்கான நினைவுச்சுடர் ஏற்றி வணக்கம் செய்வோம்.