தமிழின அழிப்பு நாளுக்கு தமிழ் இளையோர்களின் திட்டங்கள்
முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளி அல்ல!
சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது தொடுத்த கோர இனப்படுகொலையானது உச்சத்தை எட்டி 11 வருடங்கள் ஆகி விட்டன. எமது தேசத்தில் எமது மக்கள் அனுபவித்த அநீதிக்கு எதிராக தாயகத்திலும் உலக நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் நீதி கேட்டு தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
கொரோனாவைரசின் தாக்கத்தால் நாம் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தாலும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராட வேண்டிய பாரியக் கடமையில் உள்ளோம். இவ் வகையில், இத்தாலி நாட்டில், தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களின் ஆதரவோடு, எமது தமிழ் இளையோர்கள் பல்வேறுபட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மே 2009ல் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற கொடூரங்களை உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில்,
இன்றைய நாட்களில் அதிகளவில் உபயோகிக்கப்படும் சமூகவலைத்தளங்களூடாக, மே 1ம் திகதி முதல், அன்றாடம், அச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் இத்தாலி மொழியில் பகிரப்பட்டு வருகின்றன.
எமது ஆயுதவழிப் போராட்டம் மௌனித்த பின்பு, எமது தமிழீழத் தேசியத்தை கட்டியெழுப்பி தமிழ் மக்களின் உரிமைகளைக் கையாழ்வதும் புலம்பெயர் மண்ணில் வளர்ந்து வரும் எமது சந்ததியினரின் கடமையும் ஆகும்.
இவ் வகையில், இத்தாலியில் இயங்கி வரும் தமிழ் பாடசாலைகளில் படிக்கும் 9 முதல் 16 வயதிற்குட்பட்ட தமிழ் மாணவர்களுக்கு தமிழர்களின் அடையாளங்கள், வரலாறு, இனப்படுகொலை சார்ந்த வகுப்புகள் எமது இளையோர்களால் இணையவழியூடாக நடாத்தப்பட்டன.
இதனையடுத்து, பல ஈழத்தமிழ் மாணவர்கள், சிறார்கள் கூட தமிழின அழிப்பு நாள் சார்ந்த உணர்வுபூர்வமான பல ஆக்கங்களை தமிழ் தகவல் மையத்திற்கு தொடர்ச்சியாக அனுப்பி வைத்திருக்கின்றார்கள். அவற்றை இத் தகவல் தளத்தில் காண முடியும்.
மேலும், மே18 தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு, கொரோனாவைரசு அவசரகாலத்தால், நாம் அனைவரும் ஒன்றுகூடி அந் நாளை நினைவுகூற முடியாத காரணத்தால், Tamilsresist.com எனும் இணையத்தளம் ஊடாக தாயகத்தில் உயிரிழந்த மக்களுக்காகவும், தாயக மண் மீட்புப் போரில் வீரச்சாவடைந்த எமது மாவீரர்களுக்காகவும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் நினைவுச்சுடர் ஏற்றி வைக்க இத்தாலி வாழ் தமிழ் இளையோர்களால் இச் செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இவ்வாறு, எமது தாயகம் நோக்கிய ஒன்றுப்பட்ட சிந்தனையுடன் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக உறுதியோடு போராடுவோம்!
ILC Tamil காற்றலையில் தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு இத்தாலியில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் சார்ந்த நேர்காணல்