திட்டங்களுக்குப் பின்னால் உள்ள தமிழ் இளையோர்களின் தொழில்நுட்ப அறிவு
புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் இளையோர்கள் தேசியம் நோக்கிய பயணத்தில் ஆர்வத்துடனும் முழு ஈடுபாடுடனும் ஈடுபட்டு வருவது அவர்களின் தீவிரமான செயல்பாடுகளின் மூலம் அனைவரும் அறியக்கூடியதே.
அந்த வகையில், இந்த வருடம் பதினோராம் ஆண்டு தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு இத்தாலி வாழ் தமிழ் இளையோர்களால் பல விதமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மே முதலாம் திகதியிலிருந்து இனப்படுகொலையின் உச்சக்கட்ட நாள் மே 18 2009 வரை நடந்தேறிய சம்பவங்கள் காலவரிசையின் (Timeline) ஊடாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.
150 மேற்பட்ட தமிழ் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு skype வழியூடாக இனப்படுகொலை, அடையாளங்கள், தேசியம் சார்ந்த வகுப்புக்கள் இளையோர்களால் எடுக்கப்பட்டன.
மேலும், தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் சார்ந்து 1 நிமிட விழிப்புணர்வு இயங்குபடம் ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
இந்த இயங்குபடம் இளையோர்களால் கருத்தூட்டப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த 1 நிமிட காணொளிக்கு பின் பல இளையோர்களின் கடின உழைப்பும் அறிவாக்கமும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்த காணொளி 200 வரைபடங்களையும் stop motion (பொருட்களை புகைப்படங்கள் மூலம் தானாகவே அசைய வைத்தல்) மற்றும் பின்புலத்தில் motion picture எனப்படும் ஒரு வகையான திரைப்பட உத்திகள் மூலம் 1 மாத காலத்திற்குள் உருவாக்கப்பட்டு தமிழன அழிப்பு நாள் மே 18 அன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.
தற்போது இந்த விழிப்புணர்வு இயங்குபடம் பல நாடுகளில் பல்வேறு மக்களால் பார்வையிட்டு வருவதும், தமிழினப்படுகொலையை பல்லாயிரக்கணக்கான மக்களிடையே கொண்டுசேர்த்துள்ளது என்பது இளையோர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.
இது மட்டுமல்லாமல், இந்த வருடம் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கொரோனாவைரசு காரணத்தால் மக்கள் ஒன்றுகூடி நினைவுகூர இயலாத இக்கட்டான சூழல்நிலை ஏற்பட்டிருந்தது. இதற்குப் பதிலாக, இத்தாலிய இளையோர்கள் digital வழியாக நினைவுச் சுடர் ஏற்றி உயிரிழந்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்த Tamilsresist.com இணையத்தளத்தினை உருவாக்கியுள்ளனர்.
எனவே, எந்தவொரு சந்தர்பமும் எமது போராட்டங்களுக்கும் கடமைகளுக்கும் தடையாக இருக்க முடியாது என்பது இந்த வருடம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
இப்படியான அறிவுபூர்வமான வேலைத்திட்டங்களில் இப்போதைய இளையோர்கள் தங்களை ஈடுபடுத்தி தேசியம் நோக்கி செயல்பட்டு வருகின்றனர். இவ் வகையான திட்டங்கள் கல்விசார்ந்து மட்டுமல்லாமல் தொழில்சார்ந்த வளர்ச்சிகளுக்கு கூடுதல் சிறப்பை, முன்னேற்றத்தை தரக்கூடியனவாகவே அமைகின்றன.
தமிழ் தகவல் மையத்தால் “முள்ளிவாய்க்காலில் முளைத்த விதைகள்” என்ற தலைப்பின் கீழ் முள்ளிவாய்க்கால், இனப்படுகொலை சார்ந்த சிறார்களின் காணொளிகள், ஆக்கங்கள் போன்றன Youtube போன்ற சமூக வளையத்தளங்களில் பதிவேற்றுவது முடக்கப்பட்டு வருகிறது. அதற்குரிய நடவடிக்கைகளிலும் இளையோர்கள் ஈடுபடவேண்டும். எனவே, இத் துறைகளிலும் நம்மையும், நம் தேசத்தையும் வளர்த்து அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.
வரும் எதிர்காலம் தொழிநுட்பத்தையே மையமாக கொண்டுள்ளது. எனவே, எமக்கான தளத்தினை உருவாக்குவது இளையோர்கள் கையிலுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டிய கடமையில் உள்ளோம். இனி வரும் திட்டங்களில் இணைந்து வேலை செய்யவும் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள விரும்பும் இளையோர்களை எமது திட்டங்களுக்குள் இணைத்துக்கொள்ள நாங்களும் ஆர்வமாகவுள்ளோம்.