Lombardiaவில் ஜூன் 14 வரை முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது
Lombardiaவில் உள்ள உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் ஜூன் 1 திங்கள் முதல் மீண்டும் திறக்கப்படும். பிராந்திய ஆளுநர் Attilio Fontanaவால் கையெழுத்திடப்படவுள்ள புதிய கட்டளை ஜூன் 14 ஆம் திகதி வரை செல்லுபடியாகும். அதே வரிசையில், “முழுப் பிராந்தியத்திலும் சுவாசக் குழாயை மறைக்கக்கூடிய முகக்கவசங்கள் அல்லது பிற துணிகளை அணிய வேண்டிய நிபந்தனை பயன்படுகிறது” என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி
பிரதம அமைச்சரின் ஆணைக்கிணங்க 2 மீட்டர் தூரத்தைக் கடைப்பிடித்து வெளிப்புறங்களில் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு பூங்காக்களுக்கான அணுகலும் அனுமதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பிராந்தியங்களின் மாநாட்டால் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
கலை
ஜூன் 15 முதல், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான (3 முதல் 17 வயது வரை) கோடைகால மையங்கள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இல்லாத நிலையில், ஒத்திகைகளை நிகழ்த்துவதற்காக திரையரங்குகள், வெளி அரங்கங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், ஜூன் 1 முதல், மறுதொடக்கம் செய்ய முடியும்.
முகக்கவசங்கள்
வெளிப்புறத்தில் கூட சுவாசக் குழாயை மறைப்பதற்கு பயனுள்ள முகக்கவசங்கள் அல்லது பிற துணிகளை அணிய வேண்டிய கட்டாயத்தை இக் கட்டளை உறுதிப்படுத்துகிறது.
முதலாளி மற்றும் பணியாளர்களுக்கான வெப்பநிலை அளவீடு கட்டாயமாகும்; அதே நடவடிக்கை உணவக வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். இறுதியாக, பொது இடங்களில் விளையாட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் தொடர்ந்தும் நிறுத்தம் செய்யப் படுகின்றன.