செஞ்சோலைப் படுகொலையின் ஆறாத ரணங்கள்
எம்மினத்தின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குரல்கள் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்று இருந்தது. இந்த வளாகமே 2006 ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடையவும் செய்தது.
செஞ்சோலை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை தறிகெட்ட சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர்கள் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையும் ஆத்திரமடையச் செய்தது.
இதேவேளை, இந்தப் பயிற்சிப்பட்டறை குறித்து தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளர் இளங்குமரன் “இதுவொரு வருடாந்த பயிற்சிப்பட்டறை. கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் நிதியுதவியையும் ஆதரவையும் வழங்கியிருந்தது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகளும் வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர். சிங்கள அரசு தமிழ்ச் சமூகத்தின் கல்வி உரிமையை மறுத்துள்ளது. வரலாற்றில் சிங்கள தீவிர வாதிகள் எப்போதும் தாக்கியே வந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. அரசின் முப்படைகளினதும் வெறியாட்டத்தால் அப்பாவித் தமிழர்கள் பட்டபாடு வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது. `குமுதினி’ படகில் பயணித்த பலரை 1984 ஆம் ஆண்டு கடற்படை வெட்டியும் குத்தியும் கொன்றது.
இதில் 6 மாத பச்சிளம் பாலகன் துப்பாக்கியிலுள்ள கத்தியால் கடற்படையினரால் குத்திக் கொலை செய்யப்பட்டான். மூன்று முறை அந்த பிஞ்சு நெஞ்சில் குத்தி கொன்ற கடற்படை இன்றும் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை அரசின் முப்படைகளும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பொய்யான, விளக்கங்களை பேரினவாதிகள் மாத்திரமன்றி சிங்களத்துவ ஊடகங்களும் கூறிவருகின்றன. இனவெறி – இதயமற்றோர் நடத்திய முல்லைத்தீவு படுகொலைக்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம் கொடுமையானது”. இலங்கையில் நடைபெறும் அராஜகங்களுக்கு இந்த பழமொழியும் நன்றாக பொருந்தும் – “பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பதே அது
சோலையில் உங்கள் உதிரம் கண்ட காற்றும்
இங்கு சோக கீதம் இசைக்கும்.
பாசம் வைத்த உறவுகள் தவிக்கின்றோம்.
பாரினில் உங்கள் நினைவுடன் ஏக்கத்துடன் வாழ்கிறோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.