1883 இல் ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையின் மூன்று ஆட்சிகள் – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 6
மொழி, இன, பண்பாடு வாழ்வியல் முறைகளினால் முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்ட, 1. தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒரு சேர ஆள்வதில் உள்ள இடர்பாடு. 2.1815 இலே கண்டியரசு தமிழ் மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்ட போது “கண்டிப்பகுதி தனியாகவே ஆளுகைக்குட்படுத்தப்படும்” என்று ஆங்கிலேயரால் கண்டி மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி.
அதனோடு, கரையோரச் சிங்களவருக்கும், கண்டிச் சிங்களவருக்கும் இடையே நிலவி வந்த வாழ்வியல் முரண்பாடுகள் ஆங்கிலேயரின் ஆளுகைக்குப் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தின. எனினும் 1833 இல், கோல்புறூக் கமறன் அரசியற் சீர்திருத்தின்படி முழு இலங்கையும் ஓரு ஆளுகையின் கீழ்க் கொண்டுவரப்பட்டு மூன்று ஆட்சிப் பகுதிகளும் ஒன்றிணைப்பட்டு 5 நிர்வாக மாகாணங்கள் ஏற்படுத்தப்பட்டன.
அப்போது தமது பகுதிகளான நுவரகலாவிய (அனுராதபுரம்) தம்மங்கடுவ (பொலநறுவை) பகுதிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களோடு இணைத்ததை, கண்டிச் சிங்கள மக்கள் கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள முரண்பாடுகள், வாழ்வியல் இடர்கள், வேறுபாடுகள் கிளைக்கோர்ன் குறிப்புக்களில் மிகத் தெளிவாகவே வகுத்துக் காட்டப்பட்டன.
தமிழ் சிங்கள மக்களை ஒன்றாக ஆள்வதிலுள்ள இடர்பாடுகளைத் தனது பட்டறிவினால் நன்றாக அறிந்த ஆங்கிலேய ஆளுநர் சேர்.வில்லியம் கிறேகரி 1873 இல், தமிழர் பகுதிகளாக அன்றிருந்த, இன்றைய வடக்கு கிழக்கு மாகாணப்பகுதிகளுடன் 1833 இல் இணைக்கப்பட்டிருந்த இன்றைய சிங்களப்பகுதிகளான நுகரகலவெல (அனுராதபுரம்) தம்பன்கடுவ (பொலநறுவை) பகுதிகளை மீண்டும் வேறாக்கி, புதிதாக வடமேல் மாகாணம் எனத் தனி மாகாணத்தை ஆக்கினார். விந்தனைப் பகுதி கிழக்கு மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக உருவகிக்கப்பட்ட ஊவா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்குள் சிங்களப் பகுதிகள் மீண்டும் வேறாக்கப்பட்டு தமிழ்ப் பகுதிகளை மட்டும் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உருவாக்கப்பட்டன.
1871 இல் நடத்தப்பட்ட இலங்கையின் குடித்தொகைக் கணக்கெடுப்புப் பட்டியல் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுமையான தமிழர் பகுதிகளே என்பதை மெய்ப்பிக்கின்றன. 1833 இல் நடைமுறைக்கு வந்த கோல்புறூக் அரசியல் திட்டம் 1931 வரை சிறு சிறு திருத்தங்களோடு நிலவியது. கோல்புறூக்கினால் நிறுவப்பட்ட சட்டசபையோ கால ஓட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்களின் ஊடாக, மெல்ல மெல்ல சட்டசபை, அரசாங்கச் சபை என்ற நிலைகளில் வடிவெடுத்து, தமிழர்களின் தூக்குக்கயிறான இலங்கைப் பாராளுமன்றமாக மாறியது என்பது வரலாறு.
பல்லாயிரக் கணக்கான மைல் தொலைவில் இருந்துகொண்டு குறைந்த ஆளணியோடு இலங்கைத்தீவு முழுவதையும் ஆளுகை செய்ய வேண்டுமென்பதை மட்டுமே அன்று, ஆங்கிலேயர் கருத்தில் எடுத்துக்கொண்டதால் இலங்கையின் நீண்ட பண்பாட்டுப் பின்னணியோடு வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பினை உறுதி செய்யும் அவர்களது அவாவினை ஆங்கிலேயர் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. மேலோட்டமான பார்வையோடு ஆங்கிலேயரால் வகுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்ட ஆளுகைத்திட்டங்கள், சிங்கள தமிழ் இனங்களின் இடையேயான வெடிப்பையும் ஐயங்களையும் மேலும் மேலும் பெரிதாக்கவே பயன்பட்டன.