கோல்புறூக் அரசியற் சீர்திருத்தம் சட்டசபைக் கட்டமைப்பு – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 7
இனவாரிப் பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்திய கோல்புறூக் அரசியற் சட்டத்திற்குச் சட்ட மூலங்களைக் கொண்டு வரும் உரிமையில்லாத போதும் தமிழர் சிங்களவர் வலு 1:1 என இருந்தது. 1889 இல், இந்நிலை மாறி சிங்களவர் தமிழர் உறுப்புரிமை 2:1 என ஆனது.
இதைத் தொடர்ந்து வந்த குறூமக்கலம் அரசியற் சீர்திருத்தம் 1910 இல் நடைமுறைக்கு வந்தது. ஆளுநரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர் அறுவர். இதன்படி சிங்களவர் தமிழர் உறுப்புரிமை 3:2 என இருந்தது. எனினும், படித்த இலங்கையருக்கான தெரிவுத் தேர்தலில் சேர்.பொன். இராமநாதன் வெற்றியீட்டியமையால் சிங்களவர் தமிழர் உறுப்புரிமை 3:3 எனச் சமநிலைப்பட்டது. தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அன்று எல்லா இலங்கையருக்கும் வழங்கப்படவில்லை. கல்வி அறிவுடையோரும் செல்வம் மிகுந்தோரும் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். கல்வி அறிவைப் பொறுத்தவரை தமிழர்கள் சிங்களவர்களை விஞ்சி நின்ற காரணத்தால் பெரும்பாண்மைச் சிங்களவரை இத்தேர்தலில் வெற்றி கொள்ளக்கூடிய வாய்ப்பு ஒரு தமிழருக்கு அமைந்தது. அதுமட்டுமன்றி, அன்று கண்டிச் சிங்களவர்கள் கரையோரச் சிங்களவர்களின் வெற்றியை விரும்பாத தால் இராமநாதனுக்கு வாக்களித்து அவர் வெற்றி பெற உதவினர்.