தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவுகூரல். Genova திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் ஆக்கம்
திலீபனின் தியாகம்.
தமிழ் மாணவர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்ட மொழி, இன, மத வேறுபாடுகள் தமிழ் மாணவர்களை தரப்படுத்தல் என்ற போர்வைக்குள் தள்ளி மாணவர்களை கல்வியில் பின்னடைய வைத்தது. இதன் காரணமாக ஈழ தேசத்திலே கல்லூரி மாணவர்கள் சிங்கள அரசுக்கு எதிராக போராடப் புறப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் தான் தீலீபன். இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரைக் கொண்டவர்.
யாழ் இந்துக் கல்லூரியிலே மாணவனாக இருந்து மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகியும் அந்த மருத்துவ பீட வாழ்க்கையைத் துறந்து தமிழின விடுதலைக்காக தன்னைப் போராட்டத்திலே அர்பணித்துக் கொண்டவர். அந்தப் போராட்டத்திலே திலீபன் அளப்பரிய பங்காற்றி வந்ததனால் தேசியத் தலைவர் பிரபாகரனினால் விடுதலைப் புலிகளின் அரசியற்பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அந்த வேளையில் தமிழ் மக்கள் தங்களது விடுதலைப் போராட்டத்தை நடத்தி அதிலே வெற்றி பெறவிருந்த ஒரு காலக்கட்டத்தை அடைந்து வருகின்ற வேளையில் சிங்கள அரசுடன் சேர்ந்து இந்திய அரசும் செய்த சதிச் சூழ்ச்சியில் தமிழினம் சிக்கியிருந்து பாரிய அழிவுகளைச் சந்தித்திருந்தது.
இக்காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த இராசையா பார்த்தீபன் எனும் சொந்தப் பெயரைக் கொண்ட திலீபன் எனும் விடுதலைப் போராளி தனது இனத்திற்காக இந்திய அரசிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவரிடம் அனுமதி கேட்டார். இந்திய அரசு அத்தகைய போராட்டத்தை ஏற்கும். உலகம் அதைப் புரிந்து கொள்ளும் என்பதற்காக அவர் உண்ணாநோன்பிருக்க நல்லூர்க் கோவில் வடக்கு வீதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
ஒவ்வொரு இடங்களில் இருந்தும் ஒவ்வொரு நாளும் பேராளிகளும் மக்களும் பல ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அந்தப் போராட்டத்திலே வந்து கலந்து கொண்டிருந்தார். அவர் தீலிபனைச் சந்தித்து சில வாக்குறுதிகளையும் பெற்றிருந்தார். ஆனாலும் தீலிபன் தன்னுடைய மக்களுக்காக தான் எடுத்த அந்தக் கொள்கையிலிருந்து தன்னை விடுவிப்பதில்லை என்ற உறுதியிலே இருந்ததனால் தலைவர் கூட அந்தப் போராளியின் மரணத்தைத் தடுக்க முயற்சித்த போதும் முடியவில்லை.
தமிழ் மக்கள் மத்தியிலே எல்லோரையும் அழ வைத்த மரணம். தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றிலே ஒரு வித்தியாசமான மைல்கல். அப்போராட்டத்தில் தான் இறந்ததன் பின்னர் தன்னுடைய உடலைக் மருத்துவ பீட மாணவர்கள் கற்பதற்காக கொடுக்கும் படியும் கூறியிருந்தார்.
தீலிபன் பன்னிரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த பின் மக்களுடைய அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவருடைய புகழுடல் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு கையளிக்கப்பட்டது.
ஈழ விடுதலைப் போராட்டத்திலே ஓர் வித்தியாசமான அரசியல் போராளியாக வாழ்ந்து தன்னுடைய வாழ்க்கையை தமிழ் தேசியத்திற்காகவும் தமிழினத்திற்காகவும் தியாகம் செய்த அற்புதமான போராளி.
அன்று எங்கள் மக்களுடைய மனங்களிலெல்லாம் நிறைந்திருந்த அற்புதமான அந்த மாபெரும் தியாகி இன்று முப்பத்து மூன்று வருடங்களுக்குப் பின்னரும் மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கின்ற தியாகியாகவே காணப்படுகின்றார்.
இன்றைய தமிழ் மக்களின் தேவை என்ன? , அரசியல் கைதிகளின் நிலை என்ன?
அன்று தீலீபனுடைய போராட்டத்திலே கூட “அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். தமிழ் மக்களுடைய பிரதேசங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என ஐந்து அம்சக் கோரிக்கையிலேயே முன்வைத்தார். ஆனால் எதையுமே இந்திய அரசு நிறைவேற்றவில்லை. மக்கள், தியாகம் என்பதை போராளிகள் மத்தியிலேயே பார்த்திருக்கின்றரே ஒழிய அரசியல்வாதிகளிடம் பார்க்கவில்லை.
” தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் “.
ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை