கொரோனாவைரசு எப்பொழுது முடியும்?
இயல்பு வாழ்விற்கு திரும்புவதற்கு இன்னும் எவ்வளவு காலம் வேண்டும்? இவ் இக்கட்டான சூழல் எப்பொழுது மாற்றமடையும்? நாம் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன.
தொற்றுநோயின் முடிவும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியும்
தொற்றுநோயியல் பார்வையில், ஒரு தொற்றுநோயானது மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடையும் போதே முடிவடைகிறது. அதாவது, உலக மக்கள் தொகையில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாவது தான்வைரசின் பெரிய அளவிலான பரவலைத் தவிர்ப்பதற்கு மிகவும் பொருத்தமானது. மந்தை நோய் எதிர்ப்பு சக்தியின் இலக்கை பல்வேறு வழிகளில் அடைய முடியும், அவற்றில் பயனுள்ள ஒன்று தடுப்பூசி.
இறப்பு வீழ்ச்சி
இயல்புநிலைக்கு திரும்புவதைப் பற்றி பேசுவதற்கு இன்னொரு கட்டம் இருக்கின்றது: இறப்பு விகிதம் உயரும் என்ற பயம் இல்லாமல் ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் மீண்டும் ஆரம்பமாவது. இதனை மேற்கொள்வதற்கு ஏற்ற வழிகள் மக்கள்தொகையின் பலவீனமான பிரிவுகளுக்கு தடுப்பூசி போடுவது, உடன்சிகிச்சையை அதிகரிப்பது, பரிசோதனைகளின் தரம் மற்றும் அளவு அதிகரிப்பது ஆகும்.
“இயற்கைத்” தடுப்பாற்றல்
தடுப்பூசியைப் பொருட்படுத்தாமல், உலகளவில் 90 மில்லியனிலிருந்து 300 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் Covid-19 க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கலாம் என்று McKinseyயின் அறிக்கை மதிப்பிடுகிறது: இது சாதாரணமான இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி அல்லது கடந்த காலத்தில் பிற கொரோனாவைரசுகளின் வெளிப்பாட்டுடன் இணைக்கப்பட்ட “குறுக்கு-நோய் எதிர்ப்பு சக்தி” (cross immunity) அல்லது பிற தடுப்பூசிகளுடன் தொடர்புடைய நோய்த்தடுப்பு மருந்துகள் (எடுத்துக்காட்டாக, காசநோய்க்கு எதிரான Bacillus Calmette–Guérin (BCG) தடுப்பூசியின் பிரயோகம்) ஆகியவற்றின் காரணமாக இருக்கும்.
கொரோனா தடுப்பூசி
இத் தடுப்பூசி ஒரு தனி விவாதத்திற்கு தகுதியானது, ஏனென்றால் இது மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை ஒப்பீட்டளவில் விரைவாக அடைவதற்கான திறவுகோலைக் குறிக்கும்.
எவ்வளவு காலம்? McKinseyயின் மைய மதிப்பீடு என்னவென்றால், 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி அடையப்படும். இருப்பினும் இது 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியை எட்டக்கூடும். உண்மையில், அறியப்படாத பல மாறிகள் களத்தில் உள்ளன. அதாவது, தடுப்பூசியின் செயல்திறனின் அளவு, அதன் உற்பத்தி மற்றும் விநியோகம் எத்தகைய வேகமும் திறனையும் கொண்டிருக்கும், மேலும் தடுப்பூசிக்கு எதிரான சர்ச்சைகளின் சதவீதம் எவ்வாறாக இருக்கும் என்று தெரியாத நிலையிலேயே உள்ளது.
மிகவும் பலவீனமான பிரிவுக்கு தடுப்பூசி விநியோகம் தொடங்கியதிலிருந்து, மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைய குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று McKinsey மதிப்பிடுகிறார். ஆனால், தடுப்பூசி பாதுகாப்பு பிரச்சினைகள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தியின் குறுகிய கால திறன் ஏற்பட்டால் நீண்ட காலம் தேவைப்படலாம். துரதிட்டவசமாக, மேம்பட்ட சுகாதார அமைப்புகளைக் கொண்ட வளர்ந்த நாடுகளில் கூட, Covid-19 இன் தொற்றுநோயியல் முடிவு 2023 ஆம் ஆண்டில் மட்டுமே வரும் என்ற வாய்ப்பை இந்த அறிக்கை விலக்கவில்லை. வளர்ந்து வரும் நாடுகளிலும் அல்லது தடுப்பூசியை மறுக்கும் மக்களிடையே, Covid-19 பரவல் மிக நீண்ட காலம் இருக்கக்கூடும். மேலும், இது தொடர்ந்து மக்களிடையே சாதாரணமாக தோன்றக் கூடிய நோயாகவும் மாறலாம்.
Covid-19 எங்களுடன் இருக்கும், ஆனால் அதைப் பற்றிய பயம் இருக்காது
மேற்கத்திய உலகில், விரைவில் அல்லது பின்னர், Covid-19 அச்சம் இருக்காது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் கல்வி மையத்தின் இயக்குனர் Ann Rein கூறுகையில்: ஒரு நூற்றாண்டுக்கு முன்பு H1N1 எனப்படும் எசுப்பானியா கொடிய தொற்றுநோயால் (இன்றைய குளிர்கால காய்ச்சல் தடிமனின் முன்னோடி) 50 முதல் 100 மில்லியன் மக்கள் வரை இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்தது போலவே இந்த கொரோனாவைரசும் மாற்றமடைந்து நீண்ட காலமாக நம்முடன் இருக்கும்.
south carolina பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் Nükhet Varlik நினைவு கூர்ந்தபடி, தடுப்பூசி மூலம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஒரே நோய் பெரியம்மை. அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் உலக சுகாதார அமைப்பு நடத்திய வெகுஜன தடுப்பூசி பிரச்சாரங்கள் மூலம் குணப்படுத்த முடியாத வைரசை அழிக்க முடிந்தது. இந்த வைரசினால் உயிர் பிழைத்தவர்கள் உருச்சிதைக்கப்பட்டும், பாதிக்கப்பட்டவர்களில் 30% சதவீதம் வரை கொல்லப்பட்டனர்.
1950 களின் நடுப்பகுதியில் இருந்து பெரியளவிலான முயற்சிகள் இருந்தபோதிலும், எடுத்துக்காட்டாக, மலேரியா, ஏழ்மையான நாடுகளைத் தொடர்ந்து பாதிக்கிறது: 2018 ஆம் ஆண்டில் இது 400,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது. காசநோய் மற்றும் தொழுநோய் ஆகியவை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை, ஆனால் மனிதன் அவற்றுக்கு எதிராக இன்னும் வெற்றிபெற முடியவில்லை. 1973 இல் எபோலா தோன்றியது, இதற்கான முதல் தடுப்பூசி கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு.
1980 களின் முற்பகுதியில் அடையாளம் காணப்பட்ட HIV மற்றும் எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிக்கப்படவில்லை. ஆனால் Covid-19 ஐப் பொறுத்தவரை, உலகளாவிய ஆராய்ச்சி முயற்சிகள் முன்பை விட தீவிரமாக இருந்தன, மேலும் நம்பிக்கையுடன் இருப்பதற்கான காரணங்களுக்கு பஞ்சமில்லை.