முதல் வித்து
ஓர் இனம் அடக்குமுறைகளால் ஆட்கொள்ளப்படும் போதும் அவ்வினத்துக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போதும், அதற்கெதிராக அமைதிவழியில் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. அமைதிவழிப்போராட்டங்கள் பயனற்று செயலிழக்கும் போது அவை வெடித்து ஆயுதப்போராட்டங்களாக வடிவம் பெறுகிறது.
அவ்வகையில் ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் விடுதலைக்கான போராட்டமே தமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டமாகும்.
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் 05.05.1976 இல் ஆரம்பிக்கப்பட்டது தமிழீழ விடுதலைப் போராட்டம். எமது இனம் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தலைநிமிர்ந்து வாழ ஒர் அணியில் ஆயிரமாயிரம் வேங்கைகள் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.
அவ்வகையில் தமிழீழ போராட்ட அணியில் வல்வெட்டித்துறை கம்பர்மலை மண்ணில் 1961 இல் உதித்தான் செல்வச்சந்திரன் சந்தியநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட வீரன். அடிமை விலங்குதனை களைந்தெறிய 1978 இல் தன்னை தமிழினத்திற்காய் இணைத்துக்கொண்டான். தமிழீழ தேசிய போராட்டத்தில் இணைந்து கொண்ட நாளில் இருந்து சங்கர் என அழைக்கப்பட்டான்.
சங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதியுடையதாக இருந்தது. ஓயாத உழைப்பும், எதிலும் ஆர்வமும் எப்போதும் சுறுசுறுப்பும் தோழர்களை ஒன்று கூட்டி கருத்தரங்கு வைப்பதும், திட்டங்கள் தீட்டுவதும் விவாதிப்பதுமாக சங்கரின் அரசியல் அறிவு விரிந்து வளர்ந்து கொண்டே சென்றது. இவ்வாறு தீரம் மிக்க போராளியாக தன் மண்ணை நேசிப்பவனாக திகழ்ந்தான் தீரன் சங்கர்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடந்த முற்றுகையில் எதிரியின் கையில் அகப்படாமல் தப்பிக்க எத்தனித்த போது வயிற்றில் குண்டு துளைத்து குருதி பீறிட்டது. படுகாயமுற்ற போது கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டுவிடக் கூடாது என்ற இலட்சிய உறுதியோடு நீண்ட தூரம் ஓடிச்சென்று தன் சகபோராளிகளை அடைந்தான். விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்டங்களில் போதிய மருத்துவ வசதி இல்லாத சூழ்நிலை அங்கு நிலவியது. அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் சங்கரை அவரது சக போராளிகள் விசைப்படகு மூலம் கடல் மார்க்கமாகத் தமிழகத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
இராணுவத்தின் தேடுதல்கள், முற்றுகைகள் என்பவற்றையெல்லாம் தாண்டி தமிழகம் செல்ல காலதாமதமாகியது. பெரும் குருதிப்பெருக்கு ஏற்பட்டாலும் சங்கரை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையும், மனவுறுதியும் சக போராளிகளுக்கு இருந்தது. ஆனால் அவர்களின் நம்பிக்கை யாவும் பயனற்று வீணாகியது.
தலைவரும், தோழர்களும் ஆழ்ந்த கவலையில் சூழ்ந்திருக்க 27/11/1982 அன்று மாலை 6.05 மணியளவில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் வித்து களப்பலியாகியது. இதில் முதல் மாவீரன் என்ற பெருமையை அணைத்துக்கொள்கிறான் லெப். சங்கர்.
இந்த வித்தானது மண்ணில் வீழ்ந்த நாளையே தமிழீழ தேசிய மாவீரர் நாளாகவும், லெப். சங்கர் மரணித்த அதே நேரமான மாலை 6.05 மணியளவில் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களமாடி வீரச்சாவடைந்த மறவர்களுக்கு விளக்கேற்றி தமிழீழ தேசிய மலரான காந்தள் கொண்டு நினைவுகூரப்பட்டு வருகிறது. தாயகத்திலும், புலம்பெயர்தேசங்களிலும், தமிழர்வாழும் அனைத்துப் பகுதிகளிலும் நவம்பர் 27 மாவீரர் நாளாக எம் தேசம் காத்த வீர மறவர்களை வணங்குகின்றனர்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணை பிளந்து அந்த வீரர்களை புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது பூமித்தாயின் மடியில் அவர்களை புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திர காற்றாக
வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும் என்ற தானைத்தலைவனின் கூற்று ஒருநாள் நனவாகும்.
கார்த்திகை மாதம் கனவுகள் மெய்ப்படும்..!
கல்லறைகள் உயிர் மூச்செறியும்..
எங்களின் விடியலுக்காய்
தங்களின் கண்களை மூடியவர்களே!
உங்களின் கனவு மலர்ந்து வரும் நாளில்
எங்களின் தலை சாய்ந்து வணங்கி நிற்போம்!
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!
ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை.