தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020, இத்தாலி மேல்பிரந்தியம்
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் களமாடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழ தேசிய மாவீரர்நாள்-2020 மிகவும் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டது. பொதுசுடரேற்றல், தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது. தாயக நேரம் சரியாக 6.05 மணியளவில் இத்தாலி மேற்ப்பிராந்தியத்தின் Reggio Emilia, Genova, Biella, Napoli ஆகிய இடங்களில் மாவீரரின் உறவுகளால் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு, எழுச்சியுடன் உணர்வு பூர்வமாக நினைவுகூர்ப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று கரணியமாக சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடனும், நிகழ்வுகளுடனும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2020 எழுச்சியாக நிறைவு பெற்றது.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலிவீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணைப் பிளந்து அந்த வீரர்களை புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களை புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும் என்ற எம் தேசியத்தலைவரின் கூற்று நனவாகும்.
தமிழரின் தாகம் தமிழிழத் தாயகம்!































