மாவீரர் கனவை நனவாக்குவோம்

நவம்பர் 27 தமிழீழ மாவீரர் நாள். எம் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை உவந்தளித்த ஆயிரம் ஆயிரம் உன்னத மாவீரத் தியாகிகளை உணர்வு பூர்வமாக நினைவு கூரும் நன்நாள்.

தமிழீழத் தேசத்தை உருவாக்க எமது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தலைமையில் போராடி வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழ தாயகம் என்ற உன்னத இலட்சியத்தை வலுப்படுத்தி முன் செல்லும் வகையில் இந்நாளில் அனைத்து தமிழ் உறவுகளும் எழுச்சியுடன் உறுதியுரை செய்கின்றோம். எமது வீரம் செறிந்த நீண்ட விடுதலைப் போராட்ட வரலாற்றில் உறுதியான வழித்தடங்களைப் பதித்து விட்டு எம் மாவீரச் செல்வங்கள் இன்று துயிலும் இல்லங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் தமிழ் இலட்சிய வேட்கை பெரும் நெருப்பாக மாவீரர்களின் மனவெளிகளில் என்றில்லாமல் உலகம் வாழ் தமிழ் மக்களில் பெரும் பிரவாகம் எடுத்து இன்று எரிந்து கொண்டிருக்கிறது.

“ஒரு விடுதலை வீரனின் சாவு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை..அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொண்டுள்ளது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை தட்டியெழுப்புகிறது”

என தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தனது சிந்தனை வெளிப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அந்த சத்திய வாக்கு என்றும் பொய்த்துப்போகாது. அது எம் நெஞ்சங்களில் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதல் லெ.சங்கர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். அந்த மாவீரன் வீரச்சாவடைந்த நவம்பர் 27; தாயக விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும் நினைவில் நிறுத்திக் கொண்டாடப்படும் எழுச்சி மிகு நாளே இந்த மாவீரர் நாளாகும். யாழ்ப்பாணம் வடமராட்சி கம்பர் மலையில் 1960 ம் ஆண்டு ஜூலை மாதம் 19 ம் திகதி பிறந்த சத்தியநாதன். என்ற இயற்பெயர் கொண்டவன் சங்கர். இவன் புலிகள் இயக்கத்தில் போராளியாக இணைந்து செயற்பட்டு வந்த காலப்பகுதியில் 1982 நவம்பர் 20 ம் திகதியன்று இவன் சிங்களப் படைகளால் சுற்றி வளைக்கப்படுகிறான்.

இந்த சுற்றிவளைப்பிலிருந்து சங்கர் வெளியேற முற்படுகிறான். அந்த நேரத்தில் சிங்களப்படைகளின் தாக்குதலில் அவனது வயிற்றுப் பகுதியில் காயமடைய அதனையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து தப்பிச் செல்கின்றான். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தமிழகம் அழைத்துச் செல்லப்பட்டான் ஆனால் சிகிச்சை பலனின்றி தலைவர் பிரபாகரன் அவர்களின் மடியிலேயே அவன் உயிர் பிரிகின்றது. லெப். சங்கர் உயிர் நீத்த நவம்பர் 27 தமிழீழ மாவீரர் நாளாக தமிழீழ விடுதலைப் புலிகளால் 1989 ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. லெப். சங்கர் உயிர் நீத்த மாலை 6.05 மணிக்கு அனைத்து மாவீரர்களையும் நினைவில் நிறுத்தி சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி இந் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்று வருகின்றன.

இந்த ஒப்பற்ற விடுதலைக்கான இலட்சியப் பாதையில் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள் தம்முயிர்களை உவந்தளித்து இன்று மாவீரர்களாக துயிலும் இல்லங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். மாவீரர்கள் எமது காவல் தெய்வங்கள் அவர்கள் துயில் கொள்கின்ற இல்லங்கள் புனிதம் நிறைந்த ஆலயங்கள்; அவர்கள் மனதில் நிறுத்தி வணங்கப்படவேண்டியவர்கள். வீரம் செறிந்த விடுதலைப் போராட்டக்களத்தில் விதைக்கப்பட்ட வித்துக்கள் இன்று சந்தனப் பேழைகளில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். 2009 மே மாதத்திற்குப் பின்னர் எமது தாயகப் பிரதேசங்கள் சிங்களப் பேரினவாதப் பிடிக்குள் முற்று முழுதாக ஆக்காரமிக்கப்பட்ட பின்னர் மாவீரர் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் அழிக்கப்பட்டன. அவற்றின் மீது இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு அப்பகுதிகள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்புக்குள் இருந்து வருகின்றன. சில துயிலும் இல்லங்கள் இராணுவப் பிடிக்குள் இருந்து விலக்கப்பட்டிருப்பினும் எமது மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்தவோ துயிலும் இல்லங்களை மீள் புனரமைக்கவோ சிங்கள அரசும் அதன் பேரினவாத படைகளும் அடக்கு முறைகளை பிரையோகித்து நிற்க்கின்றனர்.

மாவீரர்கள் எமது தெய்வங்கள் அவர்கள் எமது உறவுகள் நாம் சுதந்திரமாக தமிழீழத்தில் வாழ வேண்டும் என்கின்ற உன்னத இலட்சியத்திற்காக தம் உயிர்களை உவந்தளித்த உன்னத தியாகிகள்! அவர்களின் நினைவுகள் ஒவ்வொரு தமிழனின் மனங்களில் சுடர் விட்டு பிரவாகம் எடுத்து எரிந்து கொண்டிருக்கின்றன. தாயகத்திலும் சரி தமிழகத்திலும் சரி புலம் பெயர்ந்து உலகெங்கும் பரவி வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் உணர்வெழுச்சியாக இந்த மாவீரர்களின் தியாகங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தமிழீழம் என்பது தமிழீழ மக்களுக்கான ஒரு நாடு அல்ல அது உலகத் தமிழினத்துக்கான ஒரு நாடு தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான நாடு இது கோடிக்கணக்கான உலகம் வாழ் தமிழர்களின் உணர்வுகளோடு கலந்து விட்ட ஒன்று என்பது மிகையாகாது. அத்தோடு தமிழீழ விடுதலைப் போராட்டமே தமிழனை உலகறியச் செய்துள்ளது.

“எமது போராட்ட வடிவம் மாறுபடலாம் ஆனால் போராட்ட இலட்சியம் என்றுமே மாறாது” என்கின்ற எமது ஒப்பற்ற தேசிய தலைவரின் அசைக்க முடியாத உறுதியான கொள்கை வழியில் எமது விடுதலைப் போராட்டத்தின் செயற்பாடுகளை நாம் முன்னெடுத்துச் செல்வது அவசியமான ஒன்றாகும். சிங்கள பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள எமது தாயகத்தை மீட்டெடுத்து சுதந்திர தமிழீழத்தை அமைத்து எமது மாவீரர்களின் இலட்சியக் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

இது அவசியமானதும் காலத்தின் தற்போதய தேவையுமாகவுள்ளது. இந்த போற்றுதற்குரிய புனித நாளில் இதற்காக உறுதியெடுத்துக் கொள்வோம். ஒரு கணம் சிரம் தாழ்த்தி எம் மாவீரச் செல்வங்களுக்கு வீர வணக்கம் செலுத்தி இந்தப் புனித நாளில் தலை நிமிர்ந்து முன் செல்வோம். ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’.

ஆதவன்

உங்கள் கவனத்திற்கு