டொனமூர் அரசியல் திட்டமும் சிங்களக்குடியேற்றத் தோற்றுவாயும் – வரலாறு சொல்லும் பாடம் 12

அதையடுத்து 1931 இல் வந்த டொனமூர் அரசியல் திட்டம் 1947 வரை நிலைத்தது. பெரும்பான்மைச் சிங்கள மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெருமளவில் வீங்கச் செய்து, இனமுரண்பாடுகளைக் கூர்மைப் படுத்தியதில் இந்த அரசியல் சட்டத்திற்குப் பெரும் பங்குண்டு. தமிழர்கள் தனிவழி அரசியலை நாடிச் செல்ல இதுவுமொரு காரணமாயிற்று. பிரதேசவாரிப் பிரதி நிதித்துவம் தமிழர்களின் உறுப்புரிமையை அரசாங்க சபையில் வெகுவாக குறைந்ததால் சிறுபாண்மையினராக இருந்த தமிழர் இரண்டாம் தரத்திற்கு தள்ளப்பட்டனர். இச் சட்டத்தின் கீழ் 1936 ஆம் ஆண்டில் இரண்டாவதாக அமைந்த அமைச்சரவை, தமிழரின் உறுப்புரிமையின் வலுவற்ற நிலையை வாய்ப்பாக கருதி, தமிழ்ப் பகுதிகளிற் சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் திட்டங்களைத் தீட்டியது.

அந்த அமைச்சரவையின் காணி வேளாண் அமைச்சராக இருந்த டீ. எஸ். சேனநாயக்கா, தமிழரின் பாரம்பரிய நிலமான கந்தளாய், பாவற்குளம் பகுதிகளில் வேளாண் துறைவளர்ச்சியென்னும் போர்வையில் சிங்களக் குடியேற்றங்களுக்கு கால்கோள் இட்டார். இதனால், 1921 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டில் கிழக்கு மாகாணத்தில் 0.5 வீதமாக இருந்த சிங்களவர் குடித்தொகை அடுத்து எடுக்கப்பட்ட மதிப்பீட்டில் 4.0 வீதமாகியது. டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் 1936இல் அமைந்த தனிச்சிங்கள அமைச்சரவை தனது பேரினவாதப் போக்கைக் காட்டத் தவறவில்லை.

தனிச் சிங்கள அமைச்சரவை
C.W.W கன்னங்கரா, W.A சில்வா, C.கொரயா, கொத்தலாவவை, S.W.R.D பண்டாரநாயக்கா, D.S சேனநாயக்கா பாரன் ஜெயதிலகா ஆகியோர் அவைத்தலைவர் வைத்திலிங்கம் துரைசாமியுடன்

அரசாங்கச் சபையில் இனவாதமும் தமிழ்க்காங்கிரசின் தோற்றமும்

1943 இல் ஆங்கில மொழிக்கு மாற்றாக சிங்களம் மட்டும் ஆட்சி மொழியாக வேண்டுமென்று ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கச் சபையிலே தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் விவாதத்தின் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக தமிழ், சிங்களம் இரண்டுமே ஆட்சி மொழியாகவும் இருக்க வேண்டுமென்ற திருத்தம் மட்டக்களப்பு உறுப்பினர் வி.நல்லையாவால் முன்மொழியப்பட்டு, எஸ். டபிள்யூ ஆர். டீ. பண்டாரநாயக்காவினால் வழி மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. (ஆனால், இலங்கையின் சுதந்திரத்தின் பின் சிங்களம் மட்டும் சட்டத்தை 1956 ஆம் ஆண்டில் பண்டார நாயக்காவே கொண்டு வந்து நிறைவேற்றினார்.) 1944 டிசம்பரில், சோல்பரி தலைமையில் இலங்கை வந்த உசாவற்குழு 1945 ஏப்ரல் மாதம் வரை, இலங்கையின் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களினதும் கருத்தைக் கேட்டறிந்தது.

சோல்பரி

1936 இல் இருந்து 1942 வரை ஆட்சியிலிருந்த தனிசிங்கள அமைச்சரவையின் செயற்பாடுகளால், பெரும் பின்னடைவுகளை எதிர் கொண்ட இலங்கைத் தமிழர்கள் இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் ஒன்று சேர்ந்து 50இற்கு 50 எனும் கோரிங்கையை சோல்பரியின் முன்னே வைத்தனர். பெரும்பான்மைச் சிங்களவருக்கு 50வீத உறுப்புரிமையும், ஏனைய சிறுபான்மையோர்களுக்கு (இந்தியத் தமிழர்,முஸ்லீம்கள் உட்பட) 50 வீத உறுப்புரிமையும் கொடுக்கப்பட வேண்டுமென்பதே 50 இற்கு50 கோரிக்கையின் நிலைப்பாடாகும்.அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் இக்கோரிக்கையை முன் வைத்து வாதாடினார். எனினும், இலங்கைத்தீவில் சிங்கள, தமிழ்மக்களின் வரலாற்றுப் பின்னணியைச் சரிவர உணர்ந்து கொள்ளாத சோல்பரி குழுவினர், பேரினவாதச் சிங்களவருக்குக் கட்டற்ற உரிமைகளை வாரிவழங்கும் அடிப்படைகளின் மீது தமது அரசியல் திட்டத்தை வகுத்துச் சென்றனர். பிற்காலத்தில் இனப்பிரச்சனை கூர்மையடைந்து பெரும் மோதல்கள் ஏற்பட்டு இரத்த ஆறு ஓடத்தொடங்கியபோதுதான், தான் செய்த தவறுகளை சோல்பரி அவர்கள் உணர்ந்து காங்கடந்த பின்னர் வருத்தம் தெரிவித்தார்.

உங்கள் கவனத்திற்கு