நத்தார் புதுவருட நாட்களுக்கான புதிய சட்ட ஆணை
நேற்று இரவு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நத்தார் விடுமுறை நாட்களை முன்னிட்டு, பிரதமர் Conte புதிய சட்ட ஆணையை வெளியிட்டுள்ளார்.மேலதிக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிற புதிய ஆணை சனவரி 6 வரை நடைமுறையில் இருக்கும். குறிப்பாக:
24-25-26-27-31 டிசம்பர் மற்றும் 1-2-3-5-6 சனவரி ஆகிய திகதிகளில் இத்தாலி முழுவதுமே சிவப்பு மண்டலமாக இருக்கும்.
- எனவே சிவப்பு நிற பிராந்தியங்களில் இதுவரை பின்பற்றப்பட்ட விதிகள் நாடு முழுவதும் பொருந்தும்: நிரூபிக்கப்பட்ட வேலைத் தேவைகள், அவசியமான சூழ்நிலைகள் மற்றும் சுகாதார காரணங்கள் தவிர பிராந்தியங்களுக்கிடையிலும் நகராட்சிகளுக்கு இடையிலும் மற்றும் நகராட்சிகளுக்கு உள்ளேயும் எந்தவொரு நகர்வும் தடை செய்யப்படுகின்றது. வசிக்கும் வீட்டிற்கு அல்லது குடியிருப்புக்கு திரும்புவது எப்போதும் அனுமதிக்கப்படுகிறது.
- இத் தினங்களில் அனைத்து bar, அழகு மையங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட வேண்டும். வீட்டிற்கு உணவு எடுத்துச் செல்லும் சேவை இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகின்றது.
- பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள், மருந்தகங்கள், பத்திரிகை கடைகள் மற்றும் சிகையலங்கார நிபுணர்கள் திறந்திருக்கும். இரவு 10 மணி வரை மத வழிபாடுகள் அனுமதிக்கப்படுகின்றன.
- வீட்டுக்கு அருகில், பாதுகாப்பு தூரத்தை கடைப்பிடித்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
- காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீட்டிற்கு 2 நபர்கள் மட்டுமே செல்லமுடியும். இவர்களுடன் 14 வயதிற்குட்பட்டவர்களும் தன்னிறைவு இல்லாதவர்களும் சேர்ந்து செல்லலாம். இவை “இரண்டு நபர்கள்” எனும் கணக்கில் உள்ளடங்கமாட்டார்கள்.
28,29,30 டிசம்பர் மற்றும் 4 சனவரி ஆகிய தினங்களில் இத்தாலி முழுவதும் செம்மஞ்சள் மண்டலமாக அமையும்.
- இத் தினங்களில் கடைகள் திறந்திருக்கும். வசிக்கும் நகராட்சிக்குள் நகர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. முக்கியமாக 5.000 குடிமக்களை கொண்ட சிறிய நகராட்சிக்குள் வசிப்பவர்கள் 30 கி.மீ (Km) சுற்றளவில் நகர்வுகளை மேற்கொள்ளலாம். ஆனால் மாகாண தலைநகரங்களுக்கு செல்ல முடியாது.
- Bar, உணவகங்கள் மூடப்பட வேண்டும். வீட்டிற்கு உணவு எடுத்துச் செல்லும் சேவை இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகின்றது. இரவு 9 மணி வரை ஏனைய கடைகள் திறந்திருக்கும்.
முதல் ஆணையில் குறிப்பிட்டது போல் இரவு 10 மணியிலிருந்து ஊரடங்குச் சட்டம் உறுதி செய்யப்படுகின்றது.
கடந்த நாட்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மக்கள் பொறுப்புணர்ச்சியுடன் கடைப்பிடித்ததால் நோய்த்தொற்றின் அளவை குறிக்கும் Rt என்பது 1,7லிருந்து 0,86க்கு குறைந்திருப்பதாகவும் மேலும், நத்தார், புதுவருட விடுமுறை நாட்களில் நோய்த்தொற்றின் அளவை இன்னும் கட்டுப்படுத்தும் நோக்கோடு இப் புதிய ஆணை அமுல்படுத்தப்படுகிறது எனவும் பிரதமர் Conte பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.