ஆழிப் பேரலையை எதிர் கொண்ட தமிழீழ அரசு
இது மார்கழி மாதம் 26ம் திகதி 2004 ஆம் ஆண்டு பூத்திருந்த இந்து சமுத்திரம் காலைக் கதிரவனின் வரவை வழமை போல் வரவேற்க காத்திருந்த நேரம் அது. கிட்டத்தட்ட முப்பது வருடம் சிங்கள வெறி அரசின் கோரப் பிடியில் சிக்குண்டு உயிர்களை இழந்து, உறவுகளை இழந்து, இரத்தமும் சதையுமாக எங்கே எமக்கொரு விடிவுவராதா என்று ஏங்கிக் கிடந்த மக்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் அன்று நத்தார் தினத்தை வெகு மகிழ்ச்சியாக கொண்டாடித் திழைத்திருந்தனர் அன்று தான் அவர்கள் நிம்மதியாக உறங்கியிருப்பார்கள் என்று தான் நினைக்கிறோம். அவர்களை துயரத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் அந்த கோர சம்பவம் அதிகாலை சுமார் 7:00 மணியளவில் நடந்தேறியது.
மகா சமுத்திரத்தின் ஆழியில் ஏற்பட்ட பிளவுகள் பூகம்பமாகி இந்தோனேசியாவின் சுமத்திரா மேற்குப் பிரதேசத்திலிருந்து சுமார் ஆறுமீற்றர் உயரம் கொண்ட இராட்சதப் பேரலையாக உருவெடுத்தது. இந்த ஆழிப் பேரலைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, அந்தமான் தீவுகள் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் காவு கொண்டது. கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இவ் ஆழிப்பேரலை தமிழீழ மக்களையும் விட்டு வைக்கவில்லை எமது தாய் நாட்டில் பேரழிவை எதிர் கொண்ட இடங்களாக முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பல இடங்களையும் குறிப்பிடலாம். தழிழீழ கடற்பரப்பில் இரண்டு பகுதி துவம்சம் செய்யப்பட்டது கடல் பசிக்கு முழமையாக இரையாக்கிக் கொண்டது. இந்நாளில் இறந்த உறவுகளையும் அன்புக்குரியவர்களையும் பறிகொடுத்து ஆற்ற முடியாத துயரத்தில் துடித்தது தமிழீழ தேசம்.
தமிழீழம் தமிழரின் தாய் நாடு, எல்லாளன் என்ற தமிழ் மன்னனால் 44 ஆண்டுகள் இலங்கை முழுவதும் நீதி தவறாது ஆட்சி செய்யப்பட்டது. சிங்களவர், தமிழர் என இரு இனமும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலமது. சிங்களவரின் அரியணை ஆசையால் ஐரோப்பியரின் உதவியுடன் சூழ்ச்சியால் தமிழ் மன்னர்கள் தோற்கடிக்கப் பட்டு சிங்களவர் ஆட்சியைக் கைப்பற்றினர். வடகிழக்கு தமிழர் தேசமெங்கும் தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டனர், சிங்களவர் தமிழரின் உரிமைகளை மறுத்தனர், தமிழ் இனத்தை அழிக்க திட்டம் தீட்டினர், இதனால் தம் உரிமைகளைப் பெற தமிழினம் பல இன்னல்களை எதிர் கொண்டது. இதனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளைப் பெற தமிழினம் அகிம்சை வழியில் பல போராட்டங்களை முன்நெடுத்த போதும் சிங்களதேசம் ஆயுதவழியில் அடக்குமுறையை முன்நெடுத்ததை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கி வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் நிர்வாக அலகுகளை உருவாக்கி தமிழ் மக்களை சுதந்திரமாக வாழ வைத்தார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். தனி அரசிற்குரிய எல்லா அம்சங்களும் காணப்பட்டது. முப்படைகள், சிறந்த அரசியல், வங்கி, காவல்துறை, நீதிமன்றம், கல்வி, என்று தமிழீழ அரசு மக்களை தன்நிறைவாக காத்து வந்தது. புலம் பெயர்ந்த மக்களும் தமிழீழ தேசத்திற்கு உறுதுணையாக இருந்தனர்.
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கபட்ட தமிழர் தாயகத்தை கட்டியெழுப்ப சகல வளங்களையும் ஒன்று திரட்டி மக்களைக்காக்குமாறு தமிழீழ தேசியத்தலைவர் கட்டளையிட்டார். அதற்கமைய பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்க்கும் ஒவ்வொரு தளபதிகள் நியமிக்கப்பட்டு சிறப்பு செயலணிகள் உருவாக்கப்பட்டு சகல வளங்களையும் ஒன்று திரட்டி தமிழீழ மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் மீட்பு பணிகளை தனி அரசிற்குரிய பண்போடு தமிழீழ விடுதலைப்புலிகள் மிகவும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டனர். சுணாமி மீட்புப்பணியில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் பணிகளை வெளிநாட்டு ஊடகங்களும், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புலம் பெயர் தேசங்களில் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையால் உருவாக்கப்பட்ட தேசியக்கட்டமைப்புக்களால் இளையோர் முதியோர் என வயது வேறுபாடின்றி பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரவர் வாழும் நாட்டு தெருக்களில் இறங்கி நிதி திரட்டினார்கள். புலம்பெயர் தமிழ் மருத்துவர்களும், தாதிமாரும் மருத்துவ உபகரணங்களுடன் தமிழீழம் சென்று மக்களுக்கு அவசர மருத்துவ உதவியினை வழங்கினார்கள். இந்த அனர்த்தத்தின் பின்னர் நோய் தொற்றுக்கள் ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமாகவே இருந்தது. ஆனால் தமிழீழ சுகாதாரப் பிரிவால் சிறப்பாக கையாளப்பட்டு மக்கள் காக்கப்பட்டார்கள். தமிழீழ நிதித் துறையால் ஏனைய செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு சுணாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் மீழ் கட்டுமானத்திற்காக கூடுதல் நிதி வழங்கப்பட்டது.
இத்தாலி நாட்டு அரசு கூட தமது உதவிப் பொருட்களை நேரடியாக தமிழீழ அரசிடமே கையளித்து, இது தமிழினத்திற்கு கிடைத்த ஒரு மேலுமொரு அங்கீகாரமாகவே கருதப்படுகிறது. சிங்கள அரசு சமாதானத்தை முன்னெடுத்துள்ளோம் என்று உலகிற்கு காட்டிக் கொண்டாலும் இந்த சூழலில் தமிழ் மக்களின் அழிவையே எதிர் பார்த்துக் காத்திருந்தது. வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட அவசர நிவாரணப்பொருட்களாகட்டும், தொண்டு நிறுவனங்களின் உதவியாகட்டும், தமிழர் பிரதேசத்திற்குள் வருவதற்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திக்கொண்டு மாறாக உலக நாடுகளுக்கு சிங்களப் பிரதேசங்களே கூடுதலான அழிவிற்குள்ளானதாக காண்பிக்கப்பட்டது.
இந்த இயற்க்கை அழிவிற்க்கு முகம் கொடுத்து தமிழீழ மக்கள் இன்று 16 வருடங்களை பூர்த்தி செய்துள்ளனர். இன்றும் தம் உறவுகளை பறிகொடுத்த மக்கள் இந்நாளில் கடற்கரைக்குச் சென்று மலர் தூவி வணக்கம் செலுத்தும் இந்நாளில் அன்று எம் மக்களை காத்து உலகம் போற்றிய செயல்திறன் மிக்க தமிழீழ அரசை தமிழர்களாக பெருமையோடு மீட்டுப்பார்க்கின்றோம். அதை மீண்டும் உருவாக்க உறுதியோடு பயணிப்போம்.
ஆக்கம்: Biella திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள்.
பிரசாந்தன் நிலாஷ், கஜன் வைஷ்ணவி, கருணாகரன் கவீஷ்சனா.