நீதியையும் தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாக கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்!
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும் போர்க் குற்றத்திற்கும் விசாரணை வேண்டும் என்ற சிங்கள இனவெறி அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது உள்ளடங்கிய நியாயமான 4 கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் உயர்ந்த தியாகங்களைப் புரிந்த தியாக தீபங்களை வணங்கி உணவு தவிர்ப்பு அறவழிப் போராட்டத்தை 27.02 2021 அன்று ஆரம்பித்து 15 வது நாளாக தொடருகின்றார் திருமதி அம்பிகா செல்வக்குமார் அவர்கள். அத்தோடு தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டமும், ஐ.நா நோக்கிய தமிழினத்தின் நீதிக்கான கோரிக்கைகளை அடையும் வரையிலான சுழற்சி முறையிலான உண்ணா மறுப்புப் போராட்டமும் எம்மினத்தின் நீதியை கேட்கும் உன்னத அர்ப்பணிப்புமிக்க முன்னெடுப்புக்களாகும்.
திருமதி அம்பிகா செல்வக்குமார் அவர்கள், தமிழ் மக்களின் விடிவிற்காகவும் உரிமைகளுக்காகவும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து சிங்கள பௌத்த இனவெறி அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி எம் நிலங்களை மீட்டெடுக்க தொடரும் தனது அகிம்சை ரீதியான உண்ணா மறுப்பு சாத்வீகப் போராட்டத்திற்கு உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்கள் பரிபூரணமான ஆதரவை நல்க வேண்டும் என அறைகூவல் விடுத்து போராட்டத்தை தொடர்ந்து நடாத்தி தனது உயிருக்கு போராடுகின்றார்.
போர் நிறைவுற்று 12 ஆண்டுகளாகியும் தமிழினத்தின் இனப்படுகொலைக்கு எதிரான கூர்மையான ராஜதந்திர ரீதியான அனுகுமுறையற்ற முறையினால் எம் விடுதலைக் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்திலும் சரி ஜனநாயக ரீதியான போராட்டத்திலும் சரி எமது தமிழ்ச் சமூகம் சலித்திருக்க முடியாது. இனியும் நாம் பொறுத்துக் கொண்டு இருந்தால் ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லாமல் போகும். எனவே தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்மானிக்கும் வகையில் ஐ.நா கண்காணிக்கும் வாக்கெடுப்பை பரிந்துரைக்க வேண்டுமெனவும் கோரி பிரித்தானியா அரசிடம் வலியுறுத்தி இந்தப் போராட்டம் தொடர்கிறது.
எமது தாய் நிலத்தில் நீதிக்காக ஏங்கி தவிக்கும் எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஜனநாயகத்தை மதிக்கும் நாடாக சர்வதேச அரங்கில் காட்டிக் கொள்ளும் பிரித்தானியா ஐ.நா மனித உரிமை ஆணையரின் பரிந்துரைகளில் கூறப்பட்ட விடயங்களை உதாசீனம் செய்து தனது நலனை மட்டும் கருதி செயற்படுவதும், ஈழத்தமிழ் மக்களுக்கும் புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே பிரித்தானிய அரசு தனது நீதியான கருத்தை வழங்கி தமிழர் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
ஒட்டுமொத்த தாய்த்தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து மக்கள் புரட்சியின் மூலமே இதனை சாதித்து வெல்ல முடியும். ஐ.நா வில் இனியும் கால வரையறை கொடுக்க விடாது, தமிழ் இனவழிப்பை முன் நிறுத்தி எமது இனத்தின் விடுதலையை அடையும் வரை எமது கடமைகளைச் செய்வோம்.
தியாகம் வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. முள்ளிவாய்க்காலில் எம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளை பிரித்தானிய வீதிகளை இடமறித்த போராட்டங்களில் எம் இனத்திற்காய் உரக்க ஒலித்த அக்குரல்கள் மீண்டும் குரல் கொடுக்கவேண்டும். பூகோள நலனும் புவிசார் வல்லாதிக்க போட்டிகளும் எமது நீதிக்கு தடையாக இப்போது இருக்கின்றது. இதனை சிங்கள பேரினவாதம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி எமது ஆயுத ரீதியான தமிழரின் பாதுகாப்பை இல்லாமல் பண்ணி முள்ளிவாய்க்காலில் 21 ஆம் நூற்றாண்டின் பெரும் இனவழிப்பை செய்து முடித்து இன்று கட்டமைப்புசார் இன அழிப்பை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தாயகத்திலும் உலகெங்கிலும் காத்திரமாக முன்னகரும் தமிழ் மக்களின் அறவழிப் போராட்டங்களும் எமது மக்களின் ஒன்றுபட்ட அரசியல் விடுதலைக்கான எழுச்சி மூலம் நீதியின் கண்கள் திறக்கப்படும் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது. இவ் அறவழியும், அரசியல் விடுதலை கலந்த எமது மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களும் நிச்சயமாக எமது தேசத்தை நாம் என்றோ ஒருநாள் அனைத்து தமிழ் ஈழ மக்களின் முழுமையான பங்களிப்பின் ஊடாக இதனை நாங்கள் அடைந்தே தீருவோம். இந்த நம்பிக்கையின் காரணமாகவே இன்று திருமதி அம்பிகா செல்வக்குமார் அவர்களின் அறவழிப் போராட்டத்திற்கு நாம் தார்மீக ஆதரவை வழங்குகின்றோம்.
நன்றி
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”