சோல்பரி வகுத்த சிறுபான்மையினருக்கான காப்பீடு – வரலாறு சொல்லும் பாடம் 14
சிறுபான்மையினருக்குக் காப்பீடாகச் சிலவற்றைத் தமது அரசியற்றிட்டத்திலே சோல்பரி வரைந்திருந்தார் என்பது உண்மையே. அதுவும் கூட சிறுபான்மையினரின் பல்வேறு அழுதங்களினாலேயே செய்யப்பட்டது. “ஆணைக்குழு இலங்கையிலிருந்தபோது சில சிங்கள அரசியல்வாதிகளின் பேச்சு, சிங்கள மக்களின் ஒருமைப்பாட்டையும் தமிழர்களை அடக்கி அழுத்துவதையும் நோக்கிய பேச்சுக்களாய் அமைந்திருந்தன. டீ. எஸ் சேனநாயக்காவிலும் அவரது கீழ் அமைந்த அரசிலும் ஆணைக்குழுவுக்கு நம்பிக்கை இருந்த போதிலும், சிறுபான்மையோரின் சார்பாகச் சில சட்டகாப்பீடுகளை வைக்க வேண்டிய தேவையை இத்தகைய பேச்சுக்களே அவசியமாக்கியது” என சோல்பரி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா எப்படி நோக்கியது என்பதற்கு, அன்றைய இங்கிலாந்துப் பராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கம்மன்ஸ் அவர்களின் வெளிப்படையான கூற்று ஒரு அசையாச் சான்றாகும்.” தமிழர்கள் அளவுக்கு மீறி ஆசைப்படக்கூடாது தருவதைப் பெற்றுத் திருப்தி கொள்ள வேண்டும். தமிழர்கள் பொதுவுடமைக் கருத்தின் பாற்பட்டவராதலால் அவர்களுக்கு வழங்கப்படும் பெரும் உரிமைகள் பிரித்தானிய முடிக்குப் பாதகமாய் அமையக்கூடும்” என்று இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கும் தீர்மானத்தின் போது இங்கிலாந்துப் பராளுமன்றத்தில் கம்மன்ஸ் வெளிப்படையாகவே கூறினார்.சோல்பரி அரசியற் சட்டத்தின் 29(2)ஆம் பிரிவு சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட சிறந்த காப்பீடாக அப்போது சொல்லப்பட்டது.
அதன்படி,
அ) எந்த ஒரு மதத்தினதும் சுயமான செயற்பாட்டைத் தடுக்கும் வகையில் அல்லது கட்டுப்படுத்தும் வகையிலான சட்டத்தை,
ஆ) எந்தவொரு சமூகத்திற்கோ அல்லது மதத்திற்கோ விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அல்லது தகுதியின்மையை பிறிதொரு சமூகத்திற்கு அல்லது மதத்திற்கு வழங்குகின்ற சட்டத்தை,
இ) எந்தவொரு சமூகத்திற்கோ அல்லது மதத்திற்கோ வழங்கப்படாத சலுகைகளை அல்லது மதத்திற்கு வழங்குகின்ற சட்டத்தை ,
ஈ)எந்த ஒரு மதத்தினதும் சட்டத்தை அம்மதத்தின் ஆளும் குழுவின் ஒருமைப்பாடின்றி மாற்றும் சட்டத்தை நாடாளுமன்றம் ஆக்க முடியாது.
இவ்வகையிற் செயற்படும் அளவிற்கு செல்லுபடியற்றதாக்கும்.சிங்களப் பெரும்பான்மை நடாளுமன்றத்திலே தமக்கு வரக்கூடிய பெரும்பான்மை வலுவைக் கொண்டு சிறுபான்மையினரைக் கீழ்த்தள்ள முடியாத அளவிற்கு மிகவும் இறுக்கமான காப்பீடாகவே இது அமைக்கின்றது என்று சோல்பரியும்,அவரைச் சேர்ந்தவர்களும் அன்று கருதினர்.
நடாளுமன்ற மொத்த உறுப்பினர்களின் (மன்றத்திற்கு வருகை தராதவர்கள் உட்பட) 2/3 பேர் ஒருப்பாடு வேண்டுமென்று 29(4) இல் விதிக்கப்பட்டது. ஆயினும், சோல்பரி அரசியல் யாப்பின்படியான தேர்தல் முறையில் சிங்களவர் 2/3 பங்கு பெரும்பான்மை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கவே செய்தது. கட்சி வேறுபாடுகள் காரணமாகச் சிங்களவர்களால் 1970 வரை 2/3 பெரும்பான்மை கொண்ட அரசை அமைக்க முடியவில்லையே தவிர, பிரதிநிதித்துவ வலுவில் அந்த இலக்கினைத் தரக்கூடிய வலுவைச் சிங்கள இனத்தவர் கொண்டேயிருந்தனர்.