பர்மாவில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ ஆட்சி
கடந்த ஒரு சில மாதங்களாக உலகத்தின் கவனம் மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மாவின் மீது திரும்பியுள்ளது. ஜனநாயகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பர்மா மறுபடியும் இராணுவத்தின் சூட்சியில் சிக்கியுள்ளது. ஆனால் இன்றைய அரசியல் நகர்வுகளை அறிவதற்கு நாம் இந்த நாட்டின் வரலாற்றை புரிந்து கொள்வது அவசியம்.
பர்மாவும் பல ஆசியா மற்றும் ஆபிரிக்கா நாடுகள் போல், மேற்கத்திய நாடுகளின் காலனித்துவ ஆதிக்கத்துக்குள் உள்ளானது. அதில் ஆங்கிலேயர்களின் ஆட்சி பர்மா மக்களின் வரலாற்றுக்கு திருப்பு முனையாக இருந்துள்ளது.
பர்மாவில் 135க்கும் மேற்பட்ட சிறுபான்மையின மக்கள் வாழ்ந்த போதும், 1948இல் ஆங்கிலேயர் சுதந்திரம் எனும் பெயரில் ஆட்சியை பர்மா மக்களின் கைகளில் ஒப்படைத்து விட்டு சென்றார்கள். ஆனால் இதனால் ஏற்பட்ட விளைவுகள் ஏராளமானவை. சுதந்திரம் பெற்றதிலிருந்து பர்மாவில் ஏற்பட்ட மோதல்களும், உள்நாட்டு சிக்கல்களும், பர்மா நாட்டை ஒரு தடுமாற்ற நிலைக்குள் தள்ளியது. இதை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்று பர்மா இராணுவம் 1962இல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
1988 ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) இராணுவ ஆக்கிரமிப்புகளை அறவழியால் தான் வெல்ல முடியும் என்று “மக்கள் ஆட்சிக்கான தேசியக் கட்சியை’’ (National League of Democracy – NLD) அமைத்து இராணுவ வெறியர்களை எதிர்த்தார். இதன் விளைவாக 1990இல் ஆங் சான் சூகிக்கு இராணுவத்தால் வீட்டு காவல் எனும் தண்டனை 15 வருட காலத்துக்கு விதிக்கப்பட்டது. நாட்டுக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் தன்னலமற்று போராடிய ஆங் சான் சூகியின் உறுதியைப் பார்த்து சர்வதேச நாடுகள் வியந்ததோடு மட்டுமல்லாமல், 1992இல் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. சர்வதேச அழுத்தங்கள் மற்றும் மக்களின் போராட்டங்களினாலும், 2010 இல் இராணுவம் பொதுத் தேர்தலை நடத்த சம்மதிக்கின்றார்கள், இதனைத் தொடர்ந்து வீட்டுக் காவலிலிருந்து விடிவிக்கப்பட்ட ஆங் சான் சூகி சற்றும் மனம் சோராமல் 2015இல் இடம்பெற்ற தேர்தலின் போது பெரும்பான்மையினரின் ஆதரவை பெற்று வெற்றி அடைகிறார். பர்மா மக்கள் தங்களுக்கான விடிவு காலம் வந்துவிட்டது என எண்ணினார்கள்.
இராணுவ ஆதிக்கத்தை வேரோடு அழித்துவிட்டோம் என நம்பிய மக்களுக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. நவம்பர் 2020இல் இடம்பெற்ற தேர்தலை தொடர்ந்து முறைகேடு செய்ததாக ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் மீண்டும் வைக்கப்பட்டார். இராணுவம் ஆட்சியை வன்முறையால் கைப்பற்றி இரண்டு ஆண்டு அவசரகால நிலையை அறிவித்தார்கள். இதை எதிர்த்து பர்மா மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மோதல்களின் போது 500 மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கின்றார்கள்.
ஆனால் சர்வதேச நாடுகள் மியான்மாரின் சூழ்நிலையைப் பொருத்தளவு மிகவும் இராஜதந்திரமாகத் தான் நடந்துகொள்கிறார்கள். அரசியல் முடிவுகளுக்கு அடிப்படையாக இருப்பது பூகோள அரசியல், அந்த வகையில் மியான்மர் என்பது உலக புவியியலில் ஒரு மூலோபாய இடத்தில் உள்ளது; தெற்கு ஆசியாவையும், கிழக்கு ஆசியாவையும் இணைக்கும் ஒரு வணிகப் பாலமாக உள்ளது. இதனால் மியான்மாரை சுற்றி வர உள்ள நாடுகள் மட்டுமல்லாமல், உலக வல்லாதிக்க அரசுகளும் இந்த இராணுவப் புரட்சியால் தங்களுடைய நலத்தைப் பெறுவதில் கண்ணும் கருத்தாகவும் உள்ளனர். அந்த நாடுகளில் சீனாவும் ஒன்று; மியான்மாரில் ஜனநாயகம் வந்தால் சீனாக்கு எதிராக மாறி விடும், அதோடு இந்து சமுத்திரத்தில் நுழைவதற்குப் பாலமாக உள்ள மியான்மார் தங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிவிடுமோ எனும் அச்சத்தில், இராணுவப் புரட்சியை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, மறைமுகமாக இராணுவத்திற்கு பொருளாதார ரீதியில் உதவுகின்றனர். மியான்மாரில் இராணுவ ஆட்சி மீண்டும் நிறுவப்பட்டால், மிகப் பெரிய நன்மைகளைப் பெறப்போவது சீனா தான்.
ஒரு பக்கம் பர்மா மக்கள் இராணுவத்தின் வலையில் சிக்கியிருப்பது மட்டுமல்லாமல், பர்மா மற்றும் பங்களாதேஷ் எல்லையில் வாழ்ந்த ரோகிங்கியா முச்லீம் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பர்மா அரசால் பெரும் அநீதி விளைவிக்கப்பட்டது. மியான்மாரில் இராணுவ ஆட்சியின் போது மத வேறுபாட்டை கருவியாக பயன்படுத்தி, ரோகிங்கியா முச்லீம் மக்கள் மீது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆனால் இதை பர்மா அரசாங்கம் மறுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த வந்தேறுகுடிகள் என்று புறக்கணித்தார்கள். தேரவாத பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட பர்மா அரசாங்கம் துன்புறுத்தல், சட்ட அநீதிகள், பாலியல் வன்முறைகள் என ரோகிங்கியா முச்லீம் இனத்தவர்களுக்கு விளைவித்த அநீதிகள் ஏராளமானவை. ஜனநாயக ஆட்சி இந்த இனப்படுகொலைக்கு ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கும் எனும் நம்பிக்கை, ஆங் சான் சூகியின் ஆட்சியின் போது அழிந்து விட்டது. அமைதிக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் போராடிய ஆங் சான் சூகியே அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சிறுபான்மையின மக்கள் மீது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருந்துள்ளார். இதனால் பல சர்வதேச நாடுகள் ஆங் சான் சூகி மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்தார்கள். இன்னும் சில நாடுகள் அமைதிக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினார்கள்.
கடந்த வருடங்களில் ரோகிங்கியா மக்களின் நீதிக்கான போராட்டத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு பக்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICJ) காம்பிய நாடு, இஸ்லாமிய குழுவின் சார்பாக, இனப்படுகொலைக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மியன்மாருக்கு எதிராக வழக்கு சமர்பித்தது. அடுத்தாக சர்வதேச நீதிமன்றத்தில் (ICC) மியான்மாருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள், மத அடிப்படையில் திட்டமிட்ட இன அழிப்பு மேற்கொள்ளப் பட்டதாக வழக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மியான்மர் சர்வதேச நீதிமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், பங்களாதேஷ் நாட்டின் எல்லையில் ரோகிங்கியா மக்களின் அநீதிகள் நடந்த வகையில், பங்களாதேஷ் மூலம் ரோகிங்கியா மக்கள் தமக்கான நீதியை சர்வதேச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர். பல ஆண்டுகள் கடந்தும் ரோகிங்கியா மக்களுக்கு நீதி வழங்கப்படுமா என்பது காலம் தான் எமக்குச் சொல்லும்.