அகிம்சை தாய் அன்னை பூபதி
அகிம்சையை போற்றும் மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் இருந்து அமைதி காக்க வந்த இந்திய அமைதிப் படையின் அடாவடிக்கெதிராக தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் வழியில் உண்ணாவிரதம் இருந்து தன்னை ஆகுதியாக்கிய அன்னை பூபதி தாய் மறைந்து 33 ஆண்டுகளுக்கு பின்னரும் ஈழத்தமிழ் மக்களின் நிலை குறித்து சர்வதேச அளவில் மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.
பல ஆண்டுகளாக அதாவது 1948 இன் பின்னர் சிறிது சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழின அடக்குமுறைக்கு, அழிப்புக்கெதிராக தமிழ் மக்கள் எண்பதுகள் வரை அகிம்சை வழியிலும் பின்னர் தம்மீது ஆயுதப்போராட்டம் திணிக்கப்பட ஆயுத வழியிலும் நடாத்திய போராட்டம் முனைப்பு பெற்ற நிலையில் தமிழர் சேனைக்கு தாக்குபிடிக்க முடியாத ஜெயவர்த்தன தலைமையிலான சிறீலங்காவின் இனவாத அரசு மிகவஞ்சகமாக இந்துசமுத்திர பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கத்தில் குறியாக இருந்த இந்திய அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் தீர்வுக்கு எந்த வழியையும் கருத்தில் கொள்ளாத இந்த ஒப்பந்தம் மூலம் தமிழரின் இராணுவ பலத்தை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த சிறீலங்கா இந்திய கூட்டுநடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் கொடுக்கப்பட்ட தாக்குதலுக்கெதிராக முகம் கொடுக்க முடியாத இந்திய அமைதிப் படையினரால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடாவடிக்கெதிராக அமைதி வழியில் அன்னை பூபதி தாய் நடாத்தியது பலனளிக்காமல் பரிதாபமாக அவர் உயிர் பிரிந்தது.
பின்னாளில் அவர் மறைந்த தினமே தமிழீழ தேசிய நாட்டுப்பற்றாளர் தினமாக தமிழீழ தேசிய தலைவரால் அறிவிக்கப்பட்டது.
முப்பதாண்டுகாலத்திற்கு மேலாக காலங்கள் கடந்த பின்னரும் இந்திய அரசுகள் அல்லது அதன் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் ஈழத்தமிழ் மக்களின் நிலை குறித்து தமது சிந்தனைப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கு பக்கபலமாக இருக்க வேண்டிய தமிழக அரசுகளும் அரசியல் வாதிகளும் தமது சுய நல அரசியல் காரணங்களுக்காக பெரியளவில் அக்கறை காட்டவில்லை என்பதும் கவலைக்குரியது.
வளர்ந்துவரும் பொருளாதார யுகத்தில் ஈழத்தமிழர்களின் தாயகம் புவியியல் ரீதியாக வல்லாதிக்க சக்திகளின் தேவைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையில் இருப்பதால் சரியான வழியில் தமது புவிசார் அரசியலை ஆய்ந்தறிந்து தமிழகத்தை தம்பால் ஈர்த்து இந்திய அரசின் ஈழத்தமிழர்கள் மீதான பாராமுகத்தை மாற்றம் செய்ய வழிவகை செய்வதே அகிம்சை தாய்க்கு நாம் செலுத்தும் வணக்கமாகும்.