முடியவில்லை முள்ளிவாய்க்காலில்
மே18 தமிழினப்படுகொலை உச்சம் தொட்ட நாள், தமிழீழம் சிதைக்கப்பட்ட நாள், சிங்களத்தின் கோரமுகம் உலகிற்கு வெளிப்பட்ட நாள், இப்பூமிப்பந்தில் மனிதம் தொலைக்கப்பட்டநாள்.
சர்வதேசமே கண்திறந்து பார்த்திருக்க கணப்பொழுதில் கருகி குற்றுயிராய் கும்பல் கும்பலாய் குண்டுகளால் தமிழினம் குதறித்தள்ளப்பட்டதையும் கதறியழுததையும் என்றும் மறவாது எம்தமிழினம். இறந்த தாயின் மார்பு உமிந்த குழந்தையும் உயிருடன் தோளில் சுமந்த குழந்தையை இறக்கி வைக்க இறந்த பிண்டமாக கண்டு பரிதவித்த தாயும் தலையிழந்த பிண்டமாய் கை கால் இழந்த முண்டமாய் எம் அன்னை தந்தை அண்ணன் தம்பி அக்கா தங்கை மாமன் மச்சான் என வரலாற்றின் வடுக்களாய் எம்மனங்கள் கனத்து பதினொராண்டுகள் ஓடியும் எமக்கின்னும் நீதி கிடைக்கவில்லை.
ஈழத்தமிழர்களின் அறுபது ஆண்டுகால அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்ட வரலாற்றில் முப்பதாண்டுகாலம் ஆயுதம் ஏந்தி போராடி இனவழிப்பின் பாதுகாப்பாய் இருந்த எம் விடுதலையமைப்பும் தேசியத்தலைமையும் ஆயுதங்களை மவுனித்தாலும், முள்ளிவாய்க்காலில் முடித்துவிடவில்லை எம் விடுதலை வேட்கையை, மாறாக முள்ளிவாய்க்காலே முன்னெடுக்கிறது எம் விடுதலைப் போராட்டத்தை இதையுணர்ந்து இன்று புலம் பெயர்ந்த தேசங்களில் நாம் முடங்கிகிடந்தாலும் எமக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டியும் எம் தேசத்திற்காய் தேசியத்திற்கான அழைப்பை ஏற்று இன்றைய சமூகவலைத்தளங்களின் அதியுச்ச பாவனையைப் பயன்படுத்தி இனவழிப்பு இனவுணர்வு இனவெழுச்சி சார்ந்த ஆக்கங்களை வெளிக்கொணர்ந்து எமது அடுத்த தலைமுறையினருக்கும் பகிர்ந்து கொண்டும், தங்களின் பயன்பாட்டில் இருக்கும் முகநூல்(facebook), புலனம்(WHATSAPP), காயலை(SKYPE), Viber போன்ற மென்பொருட்களில் தங்கள் தன்னியம்பி வரைவாக்கப்பகுதியில் (profile space) இனவழிப்பு அடையாளத்தை மே 18 வரை பயன்பாட்டில் வைத்திருப்பது ஊடாக எம்முடன் இணைப்பில் இருக்கும் அனைவரது கவனத்திற்கு கொண்டுவருவதும் தொடர்ந்து தமிழ்மக்களாகிய நாம் ஒன்றிணைந்து எமது மக்களுக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டியும் எம் உரிமையை வேண்டியும் பணியாற்றுவோம் என்பதை உறுதி செய்வதாகவும் அமையும்.
இன்று மனிதனின் அறிவிற்கப்பாற்பட்டு நிகழ்ந்து வரும் மரணங்கள் மனிதகுலத்தை உலுக்கி நிற்கும் தருணத்தில் அன்று மதவெறியும் இனவெறியும் கொண்டவர்கள் மனிதாபினமற்று எம்மக்களை கொன்று குவித்ததை மனிதனால் மனிதனுக்கிழைக்கப்பட்ட அநீதியை இரக்கமின்றி பார்த்து வாளாவிருந்தவர்களுக்கு இடித்துரைப்பதும் மனிதகுலம் இவ்வுலகில் இருக்கும் வரை இக்கொடுஞ் செயலுக்கு நீதி வேண்டுவதும் எந்த சூழ்நிலையிலிருந்தாலும் இனவுணர்வும் தன்மானமும் உள்ள ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும் இதனை கருத்தில் கொண்டும் வரும் நாட்களில் தமிழ்த்தேசிய கட்டமைப்புக்களால் தரப்படவிருக்கும் அறிவுறுத்தல்களுக்கு அமையவும் ஒன்றிணைந்து மே18 “இனவழிப்பு”நினைவு நாள் மட்டுமல்ல தமிழினம் ஒன்றுதிரண்டு மீண்டெழுந்து தன்னிருப்பை உறுதி செய்யும் நாளும் இதுவேயாகும் என்பதை இவ்வுலகிற்கு வெளிக்காட்டுவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்பு குழு
இத்தாலி தமிழர் ஒன்றியம்.