வேர்களைத்தேடும் விழுதுகள் – அச்சுவேலி
ஈழத்திருநாட்டின் தனித்தமிழர் தாயகமாக சிறப்புகள் பலகொண்ட வட மாகாணத்தில் யாழ்மாவட்டத்தின் கிழக்குப்பகுதியில் அச்சுவேலி எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது.இக்கிராமத்தின் உப பிரிவுகளாக இடைக்காடு, வளலாய், தம்பாலை, பத்தைமேனி, கதிரிப்பாய், போன்ற கிராம அலுவலர் பிரிவுகளைக் தன்னகத்தே கொண்டு,வடக்கே தொண்டமனாறும், தெற்கே ஆவரங்காலும்,மேற்கே ஒட்டகப்புலம், வசாவிளானும்,கிழக்கே வல்லைக்கடலுடன் கூடிய பரந்த வயல்வெளியும் உள்ளடக்கிய அழகிய கிராமம்.இந்த கிராமத்திற்கு அச்சுவேலி என்ற பெயர் எப்படி வந்தது என்று நோக்கினால் பல மரபுவழிக்கதைகள் உள்ளன. அதாவது அச்சு என்றால் அழகு என்றும், மத்தியில் என்றும் பொருள் கூறப்படுகிறது.
அதாவது வலிகாமம், வரமராட்சி, தென்மராட்சி ஆகிய பெரும் பகுதிகளில் மத்தியில் அமைந்துள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தையும், வடமராட்சியையும் இணைக்கும் வண்டிசக்கர அச்சு போல இக் கிராமம் உள்ளது எனவும் இதன் கரணியமாக இப்பெயர் வந்திருக்கலாம் என பல்வகைக் கதைகள் சொல்லப்படுகின்றன. கடல் அலைகள் தாலாட்ட தெங்கும், பனை வளங்களையும் அள்ளித்தர, பச்சைப்பசேல் என வாழைத்தோட்டங்களும், வெங்காயத்தோட்டங்களும்,மரவள்ளியும் என செம்மண் விளைநிலங்களைக்கொண்ட பூமியாக மிளிர்கிறது.
இங்குள்ள மக்கள் வேளாண்மையும், கணிசமான அளவு மீன்பிடித்தொழிலையும் நம்பியே வாழ்கின்றனர். வழிபாட்டுத்தலங்கள் என்று பார்ப்போமேயானால் இந்து, கிறீஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் பரவலாக காணப்பட்டாலும் உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலயம், காட்டுமலைகந்தசுவாமி ஆலயம், அந்தோனியர் ஆலயம், புனித சூசையப்பர் ஆலயம் என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.இவ்வாலயங்களின் பின்னணியில் பலவரலாற்றுக்கதைகள் உள்ளன.
கல்வியறிவைப்போதிக்கும் நற்பாடசாலைகளும், நல்லாசான்களும், கல்விநிலையங்களும் என பல பள்ளிகள் பல அறிஞர்களை உருவாக்கி தலைநிமிர்ந்து நிற்கிறது. குறிப்பாக அச்சுவேலி மத்திய கல்லூரி, புனித தெரேசாள் மகளிர்கல்லூரி, அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை என்பன குறிப்பிடத்தக்க பாடசாலைகளாகும்.இவற்றிலே அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை நூற்றாண்டு பழமை வாய்ந்த பாடசாலையாக விளங்குகிறது.
இங்கே உள்ள வளங்களைக்கொண்டு இயங்கும் கைத்தொழில்பேட்டையும், வல்லைவீதியில் அமைந்திருந்த பனங்கட்டித் தொழிற்சாலையும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.இவ்வாறு சுற்றம் எல்லாம் சூழ்ந்து அயலவர்களுடன் நட்புரிமையைடன் வாழ்ந்த இனம் யுத்த அரக்கர்களின் பிடியில் சிக்குண்டு பல அழிவுகளையும், இழப்புக்களையும் எதிர்கொண்டனர்.அச்சுவேலி மக்கள் பல்லாண்டுகளாக புலப்பெயர்வுக்கு உள்ளாகியதோடு பல இன்னல்களை எதிர்கொண்டனர். பலாலி இராணுவத்தளத்தில் இருந்து ஏவப்பட்ட பலநூறு எறிகணைகள் அச்சுவேலி குடியிருப்புக்களிலேயே வீழ்ந்து வெடித்து பல உயிர்பலிகளையும், மக்களின் உடமைகளையும் சேதப்படுத்தியது. அத்தோடு விமானக்குண்டு தாக்குதல்களாலும் பாரிய அழிவுகளை மக்கள் எதிர்நோக்கினர்.
அச்சுவேலி மண் எமது மண்மீட்பு போராட்டத்திற்காக நூற்றுக்கணக்கான வீரமறவர்களை விதைத்துள்ளது.மேஜர். அல்பேட்,கரும்புலி மேஜர்.கலைமகள்,வான்கரும்புலி கேணல் ரூபன்,கப்டன்.குட்டி றமேஸ் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.எம் தேசத்து புதல்வர்கள் விதைக்கப்பட்ட நிலமாக அருகே உள்ள கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் விளங்கியது. இந்நாளில் இரண்டர்களினால் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டு, போரினால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு இன்னல் படும் நிலை இன்னமும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. விழுதுகள் புலம்பெயர் தேசத்தில் பரப்பி இருந்தாலும் வேர்கள் எப்போதும் தாயகத்திலே தான் உள்ளது.
தேவராஜா ஆதவன்.
ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை.