ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா
ஆடிப்பிறப்பு விழா தமிழ் இனத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் ஆடிப்பிறப்பை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வருகிறார்கள். தைத்திருநாளும், ஆடிப்பிறப்பும் தமிழர்களின் கொண்டாட்டங்களில் தலைசிறந்தவை. இத்தகைய சிறப்பான ஆடிப்பெருவிழா (18/7/21) ஞாயிற்றுக்கிழமை ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பமானது. திலீபன் தமிழ்ச்சோலை ஆசிரியை மங்கலவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து ஈழப்புலவரான நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை என்ற பாடலை ஆசிரியர்கள் பாட தொடர்ந்து அனைவரும் சேர்ந்து பாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து, முப்படை கட்டி ஆண்ட ஒப்பற்ற எம் இனத்தின் தேசியத்தலைவர் அவர்களின் வரலாற்றை சொல்லும் மேதகு திரைப்படம் திரையிடப்பட்டது. அதிகமான மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் மேதகு திரைப்படத்தை பார்த்து எம் போராட்டவரலாறுகளை அறிந்து கொண்டனர். அடுத்த நிகழ்வாக மாணவர்கள் எல்லாளன், சங்கிலியன் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு, சிவப்பு, மஞ்சள் இல்ல நிறத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் விளையாட்டுக்கள், அறிவியல் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இறுதியாக பெற்றோர்களுக்கான சிறப்பு விளையாட்டுகள் நடைபெற்றன. பண்பாட்டு விழாவான ஆடிப்பெருவிழாவை அனைவரும் விருப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர். மாலையில் விழா இனிதே நிறைவுக்கு வந்தது. அவற்றின் சில பதிவுகள்.