18ம் நாளாக (19/09/2021) பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐக்கிய நாடுகள் அவையினை அண்மிக்கின்றது
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் உண்ணா விரதப்போராட்டத்தின் 34 ம் ஆண்டின் 5 ம் நாள் நினைவில் நாம் நின்றுகொண்டு இருக்கின்றோம். ஒரு போராட்ட வீரனை நினைவு கூறுவது என்பது அவரின் போராட்ட இலட்சிய நோக்கங்களில் அமைந்த பாதைகளில் வீறு கொண்டு நம் விடுதகைக்காக நகர்வதும் தான். இதுவே சரியான நினைவு கூறல். எனவே எம் தமிழ் உறவுகளே நாமும் நம் வரலாற்றுக்கடமையில் திலீபன் அண்ணாவினை நெஞ்சில் சுமந்து தேசியத்தலைவரின் வழிகாட்டலில் பயணிப்போம்.
கடந்த 18 நாளாக மனித நேய ஈருருளிப்பயணம் பிரித்தானியா, நெதர்லாந்து, பெல்சியம், லுக்சாம்பூர், யேர்மனி, பிரான்சு நாடுகளின் ஊடாகவும் இப்போது சுவிசு நாட்டிலுமாக முக்கியமான அரசியல் மையங்களாக இருக்கக்கூடிய அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐரோப்பிய ஒன்றியம், மாநகரசபைகள், ஐரோப்பிய ஆலோசனை அவை, ஐரோப்பிய பாராளுமன்றம்… மற்றும் முதல்வர்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், உள் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகங்கள், பல்லின வாழ்மக்கள் என அனைவரிடத்திலும் எதிர்வரும் 48 ஆவது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு சிங்களப்பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வைத்து விசாரிக்க வேண்டும் எனவும் தமிழீழமே தமிழருக்கான உறுதியான தீர்வு எனவும் அதற்கு நம் வாழிட நாடுகள் குரல்கொடுக்க் வேண்டும் எனவும் பறைசாற்றப்பட்டுக்கொண்டு வருகின்றது.
இப்போராட்டம் பல நெடும் தூரம் இன்னல்களோடு பயணித்துக்கொண்டு இருந்தாலும் கொடிய நோய்த்தொற்று காலத்தில் தமிழர்கள் வீறு கொண்டு 23ம் தடவையாக பயணிக்கின்றார்கள் என்னும் உணர்வு பூர்வமான செயல் மிகவும் கூர்மையாக சர்வதேச மட்டத்தில் தமிழர்களுடைய அறவழிப்போராட்டத்தின் நியாயத்தன்மையினை புடம் போட்டுக்காட்டுகின்றது என்பதை நாம் உணரக்கூடியவாறு உள்ளது.
அந்தவகையிலே இன்றைய பயணம் 19/09/2021 லெளசான் , சுவிசு மாநகரத்தில் இருந்து ஐ.நா நோக்கி தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. டென்மார்க்கில் இருந்தும் கூட மனித நேய செயற்பாட்டாளர் ஒருவரும் கலந்து கொண்டு தன் வரலாற்றுப்பணியினை ஆற்றமுன்வந்துள்ளார்.
இப்போராட்டம் இன்று (19/09/2021)பி.ப 4.30 மணியளவில் ஐ.நா முன்றலினை வந்தடைந்ததும் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நாளை நடைபெறும் மிகப் பெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு எமக்கு கிடைக்கப் படவேண்டிய நீதியினை ஐ.நா வெகுவிரைவில் பெற்றுத்தர வேண்டும் என தமிழீழ மக்களின் குரலாக ஐக்கிய நாடுகள் அவைமுன்றலில் ஒலிக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே எம் தமிழ் உறவுகளே, காலம் எமக்கு தந்திருக்கும் அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து உறவுகளும் உங்கள் வரலாற்றுக் கடமையினை ஆற்றி தமிழீழ மண்ணை மீட்க நடைபெறும் அறவழிப்போராட்டத்தில் பங்குகொள்ள வாருங்கள் நாளை பி.ப 2.30 மணியளவில்.
“ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது”-தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.