“விண்ணிலிருந்து பார்ப்பேன் விடுதலையை” – தியாக தீபம் திலீபன்
தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை அங்கீகரிக்க மறுத்தது இந்திய இலங்கை ஒப்பந்தம். தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை, தமிழர் நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை மிக வேகமாக தொடர்வதற்கு வழி வகுத்தது இந்திய அரசின் கூட்டுச்சதி. காந்திய தேசம், அகிம்சையின் ஆசான் என உலகிற்கு தன்னை பறைசாற்றும் இந்திய அரசுக்கு எதிராக, மகாத்மா காந்தி இவ்வுலகிற்கு விட்டுச் சென்ற போராட்ட வழிமுறையைக் கையில் எடுத்து, அகிம்சையின் அடையாளமாக உலகிற்கு முன் நிமிர்ந்தார் தியாக தீபம் லெப். கேணல் திலீபன்.
- மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்;
- சிறைச் சாலையிலும் தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் யாவரும் விடுவிக்கப்பட வேண்டும்;
- அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்;
- ஊர்க்காவல் படைக்கு வழங்கப்பட்ட ஆயுதம் யாவும் மீளப்பெறப்பட வேண்டும்;
- தமிழ்ப் பிரதேசத்தில் புதிதாக காவல் நிலையங்கள் திறக்கப்படும் முயற்சிகள் முற்றாகக் கைவிடப்பட வேண்டும்;
என்ற ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்டம்பர் 15ம் திகதி நல்லைக் கந்தனின் முன்றலில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1987ம் ஆண்டில் திலீபன் முன்வைத்த கோரிக்கைகள் இன்று இடம்பெறுகிற அரசியல் சூழ்நிலையிலும் அவசியமான மற்றும் முக்கியமான கோரிக்கைகளாக உள்ளன. வடகிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியான நில அபகரிப்பும் மற்றும் இராணுவ மையமாக்குதலும் இன்று வரை இடம் பெற்று கொண்டு வருகிறது. அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் வழக்கு இன்றி அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
திலீபனின் போராட்டத்தின் முக்கிய காரணிகள் இன்றும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. திலீபனின் போராட்டம் வரலாறு அல்ல, இன்று நடைபெறுகின்ற நிலவரத்தில் அவசிய தேவையாகவும் அமைகின்றது.
“கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் இருப்பேன். ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்க மாட்டேன். மருத்துவப் பரிசோதனை செய்யக்கூடாது. நான் உணர்வு இழந்தபிறகும் வாயில் தண்ணீர் ஊற்றக்கூடாது. இறக்கும் வரை எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக்கூடாது” என்பதை உறுதிப்படுத்தி பன்னிரு நாட்களுக்கு நீராகாரம் இன்றி தனது விடுதலைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
“நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்துக்காக உழைப்பேன்” என்று கூறிய தியாக தீபம் திலீபன் அணைந்து இன்று 34 ஆண்டுகள் கடந்து விட்டாலும் அவர் விட்டுச் சென்ற எமது விடுதலை நெருப்பு அணையாமல் தொடர்ந்தும் எரிந்துக் கொண்டு தான் இருக்கிறது. அதன் வெளிப்பாடே இன்றைய நாட்களில் இத்தாலி மண்ணின் வெவ்வேறு பிராந்தியங்களில் தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்படும் தியாக தீபத்தின் பயணத்தை உள்ளடக்கிய புகைப்படக் கண்காட்சி ஆகும். நேற்றைய தினம், 25/09/2021, Palermo மற்றும் Reggio Emilia நகரங்களிலும் இன்று, 26/09/2021 Biellaவிலும் இக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அவற்றின் பதிவுகள் இங்கே.
Palermoவில் நடைபெற்ற கண்காட்சிப் பதிவுகள்
Reggio Emiliaவில் நடைபெற்ற கண்காட்சிப் பதிவுகள்
Biellaவில் நடைபெற்ற கண்காட்சிப் பதிவுகள்
“நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்”என்று கூறி எம்மிடமிருந்து நம்பிக்கையுடன் விடைபெற்றுச் சென்ற திலீபன் இப்போதும் விடுதலைப் பசியோடு தான் இருக்கின்றார். அந்த விடுதலையை வென்றெடுக்கும் வரை திலீபன் மூட்டிச்சென்ற புரட்சித்தீ பிரகாசமாய் எரியட்டும்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்