வாகை நிழலில்-இளையோர்களுக்கான பட்டறை
கடந்த 30,31 ஒக்டோபர் ஆகிய இரு தினங்களில் “வாகை நிழலில்” எனும் தலைப்பில் இளையோர்களுக்கான பட்டறை இத்தாலி நாட்டின் பலெர்மோ நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தேசிய கட்டமைப்புகளின் ஆதரவுடன் இத்தாலி மண்ணில் வாழும் தமிழ் இளையோர்கள் ஒன்றிணைந்து இப் பட்டறையை மிகச் சிறப்பாக நடாத்தி முடித்தார்கள்.
கொடி மரியாதைக்கான விளக்கம் கொடுக்கப் பட்டு, தமிழீழத் தேசிய கொடியேற்றல், சுடர் வணக்கம், மலர் வணக்கம் மற்றும் அகவணக்கத்துடன் இரு நாட்களும் பட்டறை ஆரம்பமாகியது.
புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது அடுத்த சந்ததியானது தமிழர்களின் வரலாறு, அடையாளம், போராட்டம் சார்ந்த விடயங்களை மேலும் அறிவதற்காகவும், உணர்வதற்காகவும் இப் பட்டறை அமைக்கப்பட்டது.
காலனித்துவ காலத்திலிருந்து 2009ல் ஆயுதப் போராடடம் மௌனிக்கப்பட்டது வரை புதிய இளம் சமுதாயத்தினருக்கு வகுப்பு எடுக்கப்பட்டு எதிர்காலத்தில் இளையோர்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்ற ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆய்வின் போது கடந்த தலைமுறையினரின் அனுபவங்களும் பகிரப்பட்டு “அன்றும் இன்றும் இளையோர்கள்” எனும் பிரிவின் கீழ் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு இணங்க எமது தேசிய விடுதலையையும், எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் கருத்தில் கொண்டு அடுத்த கட்டத்திற்குள் நுழைய வேண்டிய தலையாய கடமையில் உள்ள எமது இளையோர்களின் தொடர்ச்சியான பங்கு மற்றும் வேலைத்திட்டங்கள் பற்றி பகிரப்பட்டது. முக்கியமாக, பலெர்மோ நகரில் சென்ற மாதம், 24 செப்டம்பர், கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் விளக்கம் அளிக்கப்பட்டு, தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் இனப்படுகொலையை உறுதிப்படுத்தி, மே 11 முதல் 18 வரை தமிழினப்படுகொலை வாரத்தை நியமித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் உடன்படிக்கையை அடித்தளமாக வைத்து மேலும் நகர்வதற்கான வழிமுறைகள் பற்றியும், கல்வி வாரத்தில் இத்தாலி பாடசாலைகள் மற்றும் இத்தாலி பிரமுகர்களுடன் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப் பட்டது.
31 ஒக்டோபர் ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்துடன் இளையோர்களுக்கான பட்டறை நிறைவுபெற்று அவர்களுக்கான சான்றிதழும் இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினரால் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திலீபன் தமிழ்ச் சோலை ஆசிரியர்கள் மற்றும் தமிழ் தேசிய கட்டமைப்புகளின் உறுப்பினர்களுடனான சந்திப்பும் இடம்பெற்று அதில் இத்தாலி வாழ் தமிழ் இளையோர்கள் முன்னெடுத்து வரும் திட்டங்கள் பற்றி பகிரப்பட்டு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்ட்து.
இறுதியில், தேசியக்கொடி இறக்கல் மற்றும் நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலுடன் எமது தாரக மந்திரத்தை உச்சரித்து பட்டறை மிகச் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டது.
எமது அடுத்த சந்ததியை வழி நடத்திச் செல்ல வேண்டிய பாரிய கடமை தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ளது. அந்த கடமையில் இருந்து தவறாமல் எமது மாவீரர் கண்ட கனவு நனவாகும் வரை அவர்கள் விட்டுச் சென்ற இலட்சியப் பாதையில் அனைவரும் பயணிப்போமாக.
“எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக, தேசப்பற்றாளர்களாக, நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக, ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும்; இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக, நிர்வாகிகளாக, ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும்.”– தமிழீழத் தேசிய தலைவர் வே.பிரபாகரன்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்