கேணல் பரிதியின் 9ம் ஆண்டின் நீங்கா நினைவில்
தமிழீழ மண்மீட்புப் போரில் தன்னை அர்ப்பணித்து பின்னர் தாயக விடுதலைக்காக புலம் பெயர் மண்ணில் அயராது உழைத்தவர் கேணல் பரிதி அவர்கள்.
நடராஜா மதீந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட கேணல் பரிதி அவர்கள் 1983ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு களமுனையில் விடுதலை தாகத்தைச் சுமந்து கம்பீரமாய்ப் போராடியவர். பின்னர், 2003ம் ஆண்டு தொடக்கம் புலம் பெயர் மண்ணில், குறிப்பாக பிரான்சு நாட்டிற்கான அரசியல் பொறுப்பாளராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் நியமிக்கப்பட்டார். தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்திற்காக முழுமூச்சாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.
2009ல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடும் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் விடுதலை தாகம் தணியவில்லை என்று உணர்ந்த சிங்களப் பேரினவாத அரசு, முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய கொடூரங்களைத் தொடர்ந்து, புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த எமது விடுதலைச் செயர்பட்டாளர்களையும் தனது இனவாத இலக்குக்கு உள்ளாக்கியது. இதன் வெளிப்பாடே பரிதி அவர்களுக்கு எதிராக நடைபெற்ற அச்சுறுத்தல்களும் கொலை முயற்சிகளும். குறிப்பாக, 2011ம் ஆண்டு அவரது பணியக வாசலில் வைத்து அவரை கொல்ல முயன்றனர். அச் சம்பவத்திலிருந்து உயிர் தப்பிய அவர், எதற்கும் அஞ்சாமல், அனைத்து சவால்களையும் தாண்டி தனது விடுதலைப் பணியை தொடர்ந்தார். தொடர்ச்சியாக அவரை குறி வைத்திருந்த எதிரிக்கு இது ஒரு பெரும் பதிலடியாக அமைந்தது. இறுதியில் அதே பணியக வாசலில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக 08/11/2012 அன்று எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு வீரச்சாவடைந்தார்.
தமிழர்களை அனைத்து வழிகளிலும் முடக்க நினைக்கும் இனவாதத்தின் திட்டமிட்ட செயற்பாடு தான் கேணல் பரிதியின் கொலை. அவரின் இழப்பென்பது தமிழர்களுக்கும் எமது போராட்டத்திற்கும் நிகழ்ந்த ஒரு பெரும் இழப்பாகும். முள்ளிவாய்க்கால் மண்ணோடு தமிழர்களின் விடுதலைப் பயணம் நின்று விடும் என எண்ணிய இனவாதத்தின் மிலேச்சத்தனமான வன்முறைச் செயலே இது.
எந்த இடர் வரினும் தமிழர்கள் நாம் எமது உயரிய இலட்சியத்திற்காக அயராமல் துணிவுடன் போராட வேண்டும் என்பது கேணல் பரிதி அவர்கள் எமக்கு விட்டுச் சென்ற பெரும் பாடம். அதை நன்கு உணர்ந்து எமது விடுதலை வேட்கையில் தொடர்ந்து பயணிப்போம் என இந் நாளில் சபதம் எடுத்துக் கொள்வோம்.