வீரகாவியம் படைத்த பெண் வேங்கைகள்
தமிழீழ தேசத்தின் விடுதலை வேண்டி எம் தலைவர் நடாத்திய விடுதலைப் போரின் வீரமும் வெற்றியும் தமிழரின் உன்னதமான வரலாறு. வையகத்தில் ஆணும் பெண்ணும் சரிநிகர் என்பதற்கிணங்க எமது மண்மீட்புப் போராட்டத்திலும் பெண்களின் பங்களிப்பின்றேல் எம் தேசத்தின் விடுதலை என்பது சாத்தியமாகாது என்பதைத் தெளிவாக அறிந்தமையால் தலைவரின் சிந்தனையில் தோன்றியது தான் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி எனும் பெண்கள் இராணுவப் பிரிவு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1980 ம் ஆண்டிலிருந்து பெண்களை அணிசேர்ப்பதன் ஊடாக பெண்விடுதலையையும் சமூக விடுதலையையும் தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம் என நம்பி பாரதியின் கனவை நனவாக்கியவர் நம் தலைவர். அவரின் நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுத்து பெண் போராளிகள் வீரத்திலும் தியாகத்திலும் விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு சரிநிகர் என்பதை நிரூபித்துக் காட்டினர்.
சமூகத் தளைகளுக்குள் கட்டுண்டு கிடந்த பெண்கள் தலைநிமிர்ந்தார்கள். போரியல், தலைமைத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், நிர்வாகம், அரசியல், ஊடகத்துறை என அனைத்திலும் ஆளுமைமிக்கவர்களாகச் சாதனை படைத்தார்கள். அடுக்களையில் கிடந்த பெண்ணினம் களத்துடிப்பிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை தரையிலும் கடலிலும் வானிலும் சாதனை படைத்து வல்லமையின் வடிவங்களாகத் திகழ்ந்தனர். உடல்வலிமைக்கும் மனவலிமைக்கும் சவால் விடக்கூடிய பெரும் நெருப்பாறுகளைக் கடந்து “எம்மால்முடியும்” என்று சரித்திரம் படைத்தார்கள். தாம்நேசித்த மண்ணின் விடுதலைக்காகவும் தாம்நேசித்த மக்களின் விடிவிற்காகவும் தம் உயிர்களை ஈகம்செய்தார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இந்தியப் படைகளுடனான மோதலின் போது முதல் பெண் வித்தாய் வீரவரலாறு படைத்தார் இரண்டாம் லெப்டினன் மாலதி. பதினாறு கடல்மைல்கள் நீரின் அடியால் நீந்திச் சென்று காங்கேசன் துறையில் எதிரியின் கப்பலில் வெடிகுண்டு பொருத்தி முதல் பெண் கடற் கரும்புலியாய் காவியம் படைத்தார் கப்டன் அங்கயற்கண்ணி. தாண்டிக்குளத்தில் இராணுவத்தின் விநியோகமையம் மீது கரும்புலித் தாக்குதல் நடாத்தி வீரவரலாறு எழுதினார் முதற் தரைக் கரும்புலி மேயர் யாழினி.
தன் குழந்தையை செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்துவிட்டு கடற்புலியாய் காவியமானார் கப்டன் செந்தாரணி. பெண் போராளிகளைச் செதுக்கிடும் வல்ல தளபதிகளாய் தடம் பதித்து ஆனந்தபுர முற்றுகைச் சமரில் விதையானார்கள் பிரிகேடியர் விதுஷா மற்றும் பிரிகேடியர் துர்க்கா. தன்சகோதரியிடம் தன் குழந்தையை ஒப்படைத்துவிட்டு ஆனந்தபுரத்திலே புறநானூற்றைப் புதுப்பித்தார் கேணல் தமிழ்ச்செல்வி.
எம் தேசத்தலைவரின் வழித்தோன்றலால் ஈழத்துப் பெண்களின் வீரத்து நிகழ்வுகள் உலகையே பல தடவை உலுப்பி வைத்துள்ளது. ஆணுக்கு நிகராய் போருக்கு எதிராய் நேருக்கு நேர் நின்று போரிடும் வலிமை; ஈழத்துப் பெண்களுக்கு நிகர் எவரும் இல்லையென வீர வரலாறு படைத்தார்கள்.
இவ்வாறு ஆயிரமாயிரம் பெண்போராளிகளின் அர்ப்பணிப்புக்களாலும், ஈகங்களாலும் வீறுகொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டமானது வெல்வது உறுதி.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்