வேர்களைத் தேடும் விழுதுகள்-உரும்பிராய்

தமிழீழ யாழ்ப்பாண மாவட்டத்திலே இருக்கும் ஊர்களில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் உரும்பிராய்.

இது யாழ்ப்பாணம் பலாலி வீதியில் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் பலாலி வீதியையும் அதற்கு குறுக்காகச் செல்லும் மானிப்பாய் கைதடி வீதியையும் தனதாக்கிக் கொண்டது. உரும்பிராய்க்கு வடக்கில் ஊரெழுவும் தெற்கில் கோண்டாவிலும் மேற்கில் இணுவிலும் கிழக்கில் கோப்பாயும் எல்லைகளாக அமைந்துள்ளன.

ஒவ்வொரு இடங்களுக்கும் ஏதோ ஒரு சிறப்பு இருக்கும். அதன் காரணமாக ஊர்ப்பெயர்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் உரும்பிராய் என்ற பெயர் வந்ததற்கு காரணம் வழிப்போக்கர்களின் நலன் கருதி “பிராய்” என்ற உயரமான நிழல் தரும் மரக்கன்றுகள் வீதிகள் தோறும் நாட்டப்பட்டிருந்தன. அவை நன்றாக வளர்ந்து நிழல் தந்தன. பெரிய உயரமான என்பதற்கு “உரு” என்றும் சொல்வார்கள். எனவே  உயரமான பிராய் மரங்கள் நாட்டப்பட்டதனால் உரும்பிராய் என்று பெயர் வந்துள்ளது. இதனைவிட இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. இக்கிராமத்தில் 25 பிராய் மரங்கள் நாட்டப்பட்டு இருக்கலாம் என்பதனை ஆரம்ப காலங்களில் எழுத்துக்களைக் கொண்டு இலக்கங்கள் எண்ணப்பட்டன. அந்தவகையில் உ- 2,  ரு- 5, உரு- 25+பிராய் – உரும்பிராய் என்று பெயர் வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

எந்த ஒரு நல்ல விடயத்தை செய்வதற்கு முன்பும் விநாயகரை வணங்கிய பின்பே தொடங்குவர். அந்த வகையில் இவ்வூரின் சிறப்பு இங்கு அமைந்திருக்கும் கற்பகப் பிள்ளையார் கோவில். இவ்வாலய திருவிழா ஆனி பூரணையை தீர்த்தமாகக் கொண்டு நடைபெறுகின்றது. ஒரு காலத்தில் பத்து திருவிழாக்கள் நடந்தன. இப்பொழுது 15 திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. இத்திருவிழாவிற்கு வெவ்வேறு ஊர்களிலிருந்து கூட்டங் கூட்டமாக பலர் வருகை தருவார்கள். இக்கோயிலைப் பற்றி கற்பகவிநாயகர் திருவந்தாதி என்ற நூலினை கவிஞர் சேனா அய்யாதுரை அவர்களும் கற்பக விநாயகர் அந்தாதி என்ற நூலினை கண்டியைச் சேர்ந்த ஆசிரியரான சு.பொ.  குழந்தை வடிவேலு அவர்களும் இயற்றி வெளியீடும் செய்துள்ளனர். மேற்கு எல்லையில் பிள்ளையார், அம்மன், முருகன் ஆகிய மூன்று சைவாலயங்கள் அருகருகே அமைந்து மூன்று கோயிலடி என அந்தப் பகுதி சிறப்பிக்கப்படுகிறது.

பிற்காலத்தில் இவ்வூரில் மத மாற்றம் ஏற்பட்டதால் கிறித்தவ ஆலயங்கள் தோற்றம் பெற்றன. அந்த வகையில் உரும்பிராய்ச் சந்தியில் அமைந்துள்ள புனித மிக்கேல் ஆலயம் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆலயத்தில் திருவிழா ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பாக நடைபெறும்.  இந்த தேவாலயத்தில் 2018ஆம் ஆண்டு 85 அடி உயரத்தில் கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டது.

நீர் வளத்தையும் நில வளத்தையும் கொண்ட உரும்பிராய் உழவுத் தொழிலில் முன்னணி வகிக்கிறது. இங்கு வாழை, மரவள்ளி கிழங்கு போன்ற பல வகையான காய்கறி வகைகள் பயிரீடு செய்வதற்குப் பெயர் பெற்ற ஊராகும். அதுபோல தானிய வகைகளை பயிரீடு செய்வதிலும்  உரும்பிராய் மண் சளைத்ததல்ல. 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திராட்சை, உருளைக்கிழங்கு என்பன பயிரிட்டு வெற்றியீட்டிய பொன்விளையும் பூமி உரும்பிராய் மண். இதைவிட கரிய பனைகளும் உயரிய தென்னைகளும் கனிச் சோலைகளும் இனிய நீர்ச் சுனைகளும் விளைந்துள்ளன.

உரும்பிராய் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் மற்றுமோர் விடயம் 1911ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட உரும்பிராய் இந்துக் கல்லூரி. தாய்த் தமிழின் மேல் தளராத பற்றுக் கொண்டு பல பண்டிதர்களையும் கல்விமான்களையும் உருவாக்கிய பெருமையுடன் இன்று இப்பாடசாலை “உனக்கு உண்மை உள்ளவனாக இரு”  எனும் குறிக்கோளுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது. சமீபத்தில் இக்கல்லூரி தனது பவள விழாவை கொண்டாடி உள்ளது. மற்றும் வரலாறுகளை அடக்கிய பவளவிழா மலர், இணையம் மூலம் வெளியீடும் செய்துள்ளது. அறிஞர்கள் பலர் இவ்வூரில் உருவாகுவதற்கு இக்கல்லூரி உழைத்த உழைப்பு மகத்தானது. மகாவித்தியாலய அந்தஸ்தினை முன்னரே பெற்றுக்கொண்ட உரும்பிராய் இந்துக் கல்லூரி உரும்பிராய் கொத்தணி மூலாதார பாடசாலையாகத் திகழ்கிறது.

தியாகி பொன்னுத்துரை சிவகுமாரன அவர்களும் உரும்பிராயைச் சேர்ந்தவரே. இந்த உலகில் தனி ஒருவனாய் போராடிய தனித்த நாயகன் இவர் அநீதிகளைக் கண்டு அதற்கெதிராக கொதித்தெழுந்து போராடினார். தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடியான இவர் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரமரணம் அடைந்தார். ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம் உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் இவர் ஜூன் 5 இல் நஞ்சருந்தி மரணமடைந்தார். போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே! இவரது இழப்பு இளைஞர்களிடத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. இவரது நினைவு நாளான ஜூன் 5, சுற்றுச்சூழல் தினமாக வருவதால் ஜூன் 6ஆம் நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டுள்ளது.

உரும்பிராயின்  பக்கத்து கிராமமான ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் தியாகி திலீபன். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் உயர் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் கற்றார். பின்பு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனாக இருந்த போதும் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து 12 நாட்கள் நீர் உணவு எதுவும் இன்றி உண்ணாவிரதம் இருந்தார்.    கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப் கேணல் திலீபன் அவர்கள் அகிம்சைப் போராட்டத்திற்கு உண்மையான வடிவம் கொடுத்தார்.

தாயக விடுதலை வேண்டி தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணையும் மக்களையும் காத்த வீரமறவர்கள் இவர்கள்: 

  • மேஜர் அன்பு  (கதிர்ச் செல்வன்) கனகு தவராசா உரும்பிராய் யாழ்ப்பாணம்.                                                                               வீரச்சாவு 01.08.1997
  • கப்டன் பிறைமாறன் இராசதுரை கருணாகரன்                                                செல்வபுரம் உரும்பிராய்                         யாழ்ப்பாணம்.                                                                           வீரச்சாவு 01.08.1997
  • கப்டன் சுரேந்திரன்                                                            சின்னத்துரை  ஸ்ரீதரன்                                                           உரும்பிராய்.                                                                     வீரச்சாவு 04.07.1995
  • மாவீரர் சிறீகுமார், முத்துக்குமாரு சிவகுமார் உரும்பிராய் யாழ்ப்பாணம். வீரச்சாவு 27.07.1983

போன்றோர் மண் மீட்புப் போரிலே வீரகாவியமானவர்கள்.  

இவ்வாறாக எனது வேரினைத் தேடுகையில், தனித்துவம், வீரம், தியாகம் போன்ற பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட உரும்பிராய் மண்ணில் எனது பெற்றோரும் பிறந்து வளர்ந்ததையிட்டு பெருமிதம் கொள்கிறேன்.

நன்றி

திலீபன் தமிழ்ச்சோலை ரெச்சியோ எமிலியா-05

உங்கள் கவனத்திற்கு