50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கட்டாயத் தடுப்பூசி-புதிய ஆணை
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கட்டாயத் தடுப்பூசி இன்று சனவரி 8 முதல் புதிய ஆணை மூலம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நோய்த்தொற்றுகளின் வளைவைக் குறைத்து, அதிகளவில் தொற்றால் பாதிக்கப்படக் கூடியவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தில் உள்ள நபர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கும் நோக்கத்துடன் இவ் ஆணை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இவ் ஆணை ஜூன் 15 வரை நடைமுறையில் இருக்கும்.
குறிப்பாக, 50 வயது உள்ளவர்கள் அல்லது ஜூன் 15 ஆம் திகதிக்குள் 50 வயதைப் பூர்த்திசெய்யும் அனைத்து இத்தாலிய குடிமக்கள் மற்றும் இத்தாலியில் வசிக்கும் பிற மாநிலங்களின் குடிமக்கள் covid-19க்கு எதிரான தடுப்பூசியைப் பெற வேண்டும் என சட்டம் விதிக்கப்படுகிறது. பிப்ரவரி 1 முதல், தடுப்பூசி கட்டாயத்திற்கு இணங்கவில்லை என்றால், 100 யூரோக்கள் நிர்வாக அபராதம் விதிக்கப்படும்
50 வயதுடைய அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு, அடுத்த பிப்ரவரி 15 முதல் பணியிடங்களுக்குச் செல்ல Super green pass (தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள், நோய்த்தொற்றிலிருந்து குணமாகியவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் சான்றிதழ்) தேவைப்படும். Super green pass இல்லாத 50 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்கள், நியாயமற்ற முறையில் வேலையிடத்தில் இல்லாதவர்களாகக் கருதப்படுவார்கள். இந் நாட்களுக்கு சம்பளம் நிறுத்தப்படும். ஆனால் ஒழுக்காற்று விளைவுகள் இல்லாமல் வேலை உறவும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. Super green pass இல்லாமல் பணியிடத்திற்குள் நுழையும் தொழிலாளர்களுக்கு € 600 முதல் € 1,500 வரை நிர்வாக அபராதம் விதிக்கப்படும்.
அழகு மையங்கள், சிகை அலங்கார நிபுணர்கள், பொது அலுவலகங்கள், தபால், வங்கி மற்றும் நிதி சேவைகள், வணிக நடவடிக்கைகளுக்கு உள்நுழைவதற்கு சாதாரண green pass (தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள், நோய்த்தொற்றிலிருந்து குணமாகியவர்கள், பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்) தேவைப்படும். உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனைச் செய்யும் கடைகளுக்குள் நுழைய green pass தேவையில்லை.
பள்ளிகளில் covid-19 தொற்றுகள் ஏற்படும் பட்சத்தில் இவற்றை கையாளும் விதிமுறைகளும் மாற்றம் அடைகின்றன:
- மழலையர் பள்ளிகளில், ஒரு தொற்று ஏற்படும் பட்சத்தில், 10 நாட்களுக்கு அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும்.
- ஆரம்பப் பள்ளிகளில் (Elementari) ஒரு தொற்று ஏற்படும் பட்சத்தில், பரிசோதனையுடன் கூடிய கண்காணிப்பும் செயல்படுத்தப்பட வேண்டும். வகுப்பறையில் பாடங்கள் தொடரப்படும், ஆனால் தொற்று ஏற்பட்ட விடயம் தெரிந்ததும் உடனடியாக பரிசோதனைகளை மேற்கொண்டு ஐந்து நாட்களுக்குப் பிறகும் மறுபடியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இரண்டு அல்லது கூடிய தொற்றுகள் ஏற்படும் பட்சத்தில் முழு வகுப்புக்கும் பத்து நாட்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
- நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் (Medie-superiori) ஒரு தொற்று ஏற்படும் பட்சத்தில் சுயக்கண்காணிப்பை மேற்கொண்டு Ffp2 முகக்கவசமும் அணிய வேண்டும். இரண்டு தொற்றுகள் ஏற்படும் பட்சத்தில், booster ஊசியைப் பெற்றுக்கொள்ளத் தேவையிலில்லாமல், நான்கு மாதங்களுக்கு மேல் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களும், covid-19 நோய்த்தொற்றிலிருந்து குணமாகியவர்களும் இணையவழி வகுப்புகளை மேற்கொள்வார்கள். ஏனையவர்கள் அனைவருக்கும் சுயக்கண்காணிப்பு மற்றும் வகுப்பறையில் FFP2 முகக்கவசங்களை பயன்படுத்துவதன் மூலம் முன்னிலையில் வகுப்புகள் நடத்தப்படும். ஒரே வகுப்பில் மூன்று தொற்றுகள் ஏற்படும் பட்சத்தில். அனைவருக்கும் இணையவழி வகுப்புகள் 10 நாட்களுக்கு நடத்தப்படும்.