வேர்களைத் தேடும் விழுதுகள்-மானிப்பாய்

இயற்கை அன்னை அளித்த கொடைகளிலே பலவற்றை தன்னகத்தே கொண்டு, காண்போர் கண்களுக்கு சொர்க்க புரியாகக் காட்சியளிக்கிறது மானிப்பாய் நகர். இது  யாழ்ப்பாணத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் வலிகாமம் தெற்குப் பிரிவில் அமைந்துள்ளது. மானிப்பாயை அண்மித்த ஊர்களாக உடுவில், சுதுமலை, நவாலி, சண்டிலிப்பாய், சங்குவேலி போன்றன காணப்படுகின்றன. மானிப்பாய் யாழ்மாவட்டத்தின் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது இடத்தைப் பிடிக்கிறது. இங்கு வாழும் மக்களில் 89 சதவீதமானவர்கள் எழுத்தறிவைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இது புராதன காலத்தில் “பெரிய புலம்” என அழைக்கப்பட்டது. மானிப்பாய் என்று பெயர் வரக் கரணியம்: (மானி +பாய்) அதாவது மானி என்றால் கோயிற்தொண்டர்கள், மானமுள்ளவர்கள் என்று பொருள் படும். பாய் என்றால் இடத்தைக்குறிக்கும். கோயிற் தொண்டர்கள் வாழும் ஊர் அல்லது மானமுள்ள மாந்தர்கள் வாழும் ஊர் எனப் பொருள் படும்.

யாழ்ப்பாணத்தின்  நெற்பாண்டம் மானிப்பாய் என்று கூறுவது தவறில்லை என்பதற்கிணங்க, பார்க்கும் இடமெல்லாம் பச்சைப்பசேலென மருத நிலத் தோற்றத்தில் நெல்வயல்களும் வானுயர வளர்ந்து நிற்கும் பனைமரங்களும்  செழித்து நிற்கும் தெங்குகளும் பருவத்திற்கேற்ப பயன் தரும் கனிமரச்சோலைகளும் இம்மண்ணின் இயற்கை வளங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அது மட்டுமல்லாமல் இங்கு காணப்படும் “வழுக்கையாறு” மென்மேலும் இவ்வூருக்கு அழகு சேர்க்கிறது. மாரி காலத்தில் பொங்கி வழிந்தோடி வயல்களையெல்லாம் வளப்படுத்தி இவ்வூரை செழிப்படையச் செய்கிறது வழுக்கையாறு, யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஒரேயொரு ஆறு வழுக்கையாறு ஆகும்.

இவ் ஊரின் மிடுக்கு இயற்கை வனப்பில் மட்டுமல்லாமல் இங்கு வாழும் மக்களின் உயரிய வாழ்க்கை முறையிலும் தங்கியுள்ளது என்றால் மிகையாகாது.  கல்விகேள்விகளில் வல்லுனர்களாகவும்  கலை கலாச்சாரங்களைப் போற்றுபவர்களாகவும் தாய் மண் மீது பற்றுள்ளவர்களாகவும் விருந்தினராக வந்தோரையும் சரி, வருந்தி வந்தோரையும் சரி வரவேற்று விருந்தோம்பும் பண்பாட்டிலும் தலைசிறந்தவர்களாகத் திகழ்ந்தார்கள் மானிப்பாய் வாழ் மக்கள்.

இயற்கையையும் பண்பாட்டையும் போற்றிப்  பேணியவர்கள் இறைவழிபடாட்டிலும் சிறந்து விளங்கினார்கள். சைவ சமயத்தினரும்  கிறீத்துவ சமயத்தினரும்  மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள்.அவர்களை நெறிப்படுத்தும்நோக்கில் பல கோவில்களும் தேவாலயங்களும் இங்கு காணப்படுகின்றன.  மானியம்பதி மக்கள் தன்மானமும், இனமானமும் வழுவாத மக்களாக வாழ்கின்றனர். இங்கு தான் தமிழ் வேந்தர் காலத்துத் திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும்  மருதடி விநாயகர் கோவில் காணப்படுகிறது. இது அருட்சிறப்பும் அற்புதமும் நிறைந்த கோவிலாக, புராதன சிற்பங்களைக்  கொண்டும்  வானுயர்ந்த கோபுரத்தைத் தாங்கியும்  பரந்து விரிந்த மண்டபங்களைக் கொண்டும்  ஈழத்திருநாட்டில் தனித்துவம் மிக்கதாகக்  காணப்படுகிறது.

இங்கு மருத மரங்கள் காணப்படுவதாலும் மருத மரத்தின் கீழ் விநாயகர் எழுந்தருளியதாலும் இக் கோவில் மருதடி விநாயகர் கோவில் என அழைக்கப்படுகிறது.கோவிலின் தென் திசையில் அமைந்துள்ள குளம் பிள்ளையார் குளம் என அழைக்கப்படுகிறது. இக் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழாக்கள்  ஆரம்பமாகி 25 நாட்கள் நடைபெறும். 

மானிப்பாயின் வடக்கே அமைந்துள்ள சுதுமலை அம்மன் கோவிலும் ஈழத்தில் பிரசித்தி பெற்ற கண்ணகி அம்மன் கோவிலாகும். இது முன்னர் தங்கு சங்களை அம்மன் என அழைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் 1987 ஆம் ஆண்டு எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மக்கள் முன் தோன்றி “தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழீழத் தனியரசு தான் தீர்வு” எனும் சுதுமலைப்பிரகடனம்  நிறைவேற்றப்பட்ட பெருமைக்குரிய இடமாக சுதுமலை அம்மன் கோவில் சிறந்து விளங்குகிறது.

மானிப்பாயின் தெற்கே சண்டிலிப்பாயில் சீரணி நாகபூசனி அம்மன் கோவில் அமைந்துள்ளது. யாழ் குடா நாட்டின் இரு கண்களாகத் திகழும் அம்மன் ஆலயங்களாக நயினை நாகபூசனி அம்மன் கோவிலும், சீரணி நாகபூசனி அம்மன் கோவிலும் திகழ்கின்றன. இன்னும் பல கோவில்கள் மானிப்பாய் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் காணப்படுகின்றன.

மானிப்பாய் கிறீத்துவ சமயத்தினரின் பிரச்சார மையமாகக் காணப்பட்டதால் பல கிறீத்துவ தேவாலயங்களும் இங்கு காணப்பட்டன. அவற்றுள் புனித பேதுரு பவுல் தேவவாலயம், அங்கிலிக்கன் திருச்சபை தேவாலயம், அந்தோனியார் தேவாலயம் போன்றன சிலவாகும்.

இங்கு காணப்படும் மெமோறியல் கிறீன் வைத்தியசாலை வரலாற்றுப் பெருமை வாய்ந்தது. பிறந்த மண்ணில் சேவையாற்றுவது  என்பது ஒவ்வொருவரின் கடமை. ஆனால் இங்கு மேலைத்தேய நாடான அமெரிக்காவில் பிறந்து மருத்துவர் பட்டம் பெற்ற கிறீன் சாமுவேல் அவர்கள் மானிப்பாய் மண்ணில் வந்து சேவையாற்றுவது என்பது உண்மையில் வியக்க வைக்கிறது. இவர் தமிழின் அறிவியல் தந்தை என்று போற்றப்படுகிறார். இவரால் 1848ல் மெமோறியல் கிறீன் மருத்துவமனை நிறுவப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 1855ல் மானிப்பாயில் மருத்துவக்கல்லூரி ஒன்றையும் நிறுவி தமிழில் மேனாட்டு மருத்துவத்தை  தொடக்கிய முன்னோடியாவார். இவர் 24 மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார். அது மட்டுமன்றி தான் இறந்த பின் தனது நினைவுக்கல்லில் “தமிழருக்கான மருத்துவ ஊழியர்”  என்று பொறிக்குமாறும் கூறியுள்ளார். ஈழத்தில் தமிழ் வளர்த்த பெருமைக்குரியவராகிறார் கிறீன் சாமுவேல் அவர்கள்.

மானிப்பாய் மண்ணில் பிரசித்தி பெற்ற பாடசாலைகள் பல  காணப்படுகின்றன. அவை பல்லாயிரம் அறிவாளிகளையும்  கல்விமான்களையும் உருவாக்கியுள்ளன என்பது திண்ணம். மானிப்பாய் இந்துக்கல்லூரி 1910ம் ஆண்டு வேலாயுதம் சங்கரப்பிள்ளை என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இக் கல்லூரியில் 1917ம் ஆண்டு விபுலாநந்த அடிகளாரும் கல்வி  கற்பித்துள்ளார்  என்பது பெருமைக்குரிய விடயமாகும். மானிப்பாய் மகளிர் கல்லூரி 1954ல் அரச அதிபர் சிறிகாந்தா அவர்களால் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு  1956ல் திறந்து வைக்கப்பட்டது. இது 1963ல் மகளிர் கல்லூரியாக அரசினால் அங்கீகரிக்கப்பட்டது.

மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையானது 1900 ம் ஆண்டு திரு தானியல் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகளில் பெருமைப்படும் வகையில் ஒரு நிகழ்வு நடைபெற்றது. அக் காலகட்டத்தில் கல்வியதிகாரியாக கடமையாற்றிய ஸ்கொட் என்பவரால் “அகில இலங்கை ரீதியில் ஒழுக்கம், கல்வி, பிறகருமங்கள் ஆகிய துறைகளில் இப்பாடசாலை முதன்மையான  இடத்தை வகிக்கிறது” என்ற உத்தியோக குறிப்பு எழுதப்பட்டமை பெருமையுடன் குறிப்பிடத்தக்கது. உடுவில் மகளிர் கல்லூரி இது யாழ்மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பாடசாலைகளுள் ஒன்று. 1824ல் அமெரிக்க மிசனரியைச் சேர்ந்த ஹரியற் வின்சிலோ அம்மையார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இது தெற்காசியாவிலேயே பெண்கள் தங்கிப்படிப்பதற்கான வதிவிடவசதியுடன் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பெண்கள் கல்லூரி எனும் பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. இக் கல்லூரியில் தான் எனது அம்மாவும் கல்வி கற்றுள்ளார் என்பதை இட்டு நான் பெருமையடைகிறேன்.

இவ்வாறு மானிப்பாய் மண்ணில் கல்வி வளர்ச்சிக்கு பாடசாலைகளுடன் இணைந்து மானிப்பாய் பொது நூலகமும் பல தனியார் கல்வி நிலையங்களும் உறுதுணையாகவுள்ளன. மானிப்பாய் மண்ணில் பிறந்து புகழ் படைத்த கல்விமான்கள் சிலரின் விபரங்கள்:

  • சுவாமி ஞானப்பிரகாசர் (பன்மொழிப்புலவர்)
  • சோமசுந்தரப்புலவர் (ஈழத்துக் கவிஞர்)
  • வனிதா வரதராஜன் (எழுத்தாளர்)
  • டொமினிக் பைங்கோ (குறும்படப் படைபாபாளி)
  • இராசவல்லன் இராசயோகன் (நாடகக் கலைஞர், சிறுவர் இலக்கிய எழுத்தாளர்)
  • தந்தை  பொன்னம்பலம் அருணாசலம் (தாய் மொழிக் கல்வி இயக்கத்தின் தந்தை)
  • தந்தை பொன்னம்பலம் இராமநாதன் (தமிழ்த்தேசிய அரசியல்வாதி)
  • சுவாமிநாதர் அருணாசலம் (புலவர்)

இவ்வாறு மானிப்பாய் மண்ணில் முளைத்து விருட்சமாகி பரந்து நிற்கும் அறிஞர்கள் பலர்; இன்னும் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் அறிவாளிகளும் பல கோடி.

தாயக மண் மீட்புப் போராட்டத்திலும் மானிப்பாய் மக்கள்  தங்களால் முடிந்தளவு பங்களிப்புகளைச் செய்ததுள்ளார்கள். எத்தனையோ வீர்ர்கள் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்து மாவீர்த்தெய்வங்களாகியுள்ளார்கள் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் மானிப்பாய் மண்ணில் பிறந்து விதையாகிப் போனவர்கள் சிலர்:

வீரவேங்கை எழில்வேணி சென்மைக்கல் குயின்சி ஜெயரூபினி நவாலி, மானிப்பாய், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.09.2000

இத்தகைய சிறப்புகளையும் வனப்புகளையும் பெருமிதத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள மானிப்பாய் மண்ணில் எனது பெற்றோர் பிறந்து வளர்ந்துள்ளார்கள் என்பதில் நான் பெருமையடைகிறேன். இப்பேற்பட்ட மண்ணின் வேர்களைத் தேடும் விழுதாகி நிற்பதில் நான் பேருவகையடைகிறேன்.

நன்றிகள்

இராஜ்குமார் லதீக்கன் ஆண்டு 11 செனோவா திலீபன் தமிழ்ச்சோலை இத்தாலி

உங்கள் கவனத்திற்கு