சிங்களத்தின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்
தமிழர்கள் நாம் ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்த பூமியிலேயே அடிமைகளாகி அன்னியர் ஆக்கப்பட்டு சொல்லொணாத் துன்பங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டக் கொடூரக் கரிநாள் இன்று.
பல நூற்றாண்டுகளுக்கு காலனித்துவ ஆட்சிக்குக் கீழ் அடிமையாக்கப்பட்ட ஈழத்தமிழினம் இறுதியாக ஆங்கிலேயர்களின் காலனித்துவத்திலிருந்து விடுபட்டு பெப்ரவரி 4, 1948ம் ஆண்டு முதல் ஆட்சிப்பீடத்தில் ஏறிய சிங்கள பௌத்தக் கோரப் பிடிக்குள் சிக்குண்டு இன்றுடன் 74 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்ற சிறிலங்கா அரசு, அன்று முதல், தமிழர்களின் சுதந்திரத்தைப் பறித்து ஒரு இனவழிப்பையே அரங்கேற்றத் தொடங்கிய நாள் தான் பெப்ரவரி 4.
தமிழர்களின் உரிமைகளையும் உடைமைகளையும் பறித்து அவர்களை பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற இனவெறியாட்டம் ஆரம்பித்த நாள்.
தமிழர்களுக்குத் தமிழீழம் தான் நிரந்தரத் தீர்வு என்பதனை உணர்ந்த ஈழத்தமிழினம் அறவழியிலும் ஆயுதவழியிலும் தனது சுதந்திரத்திற்காக் கிளர்ந்தெழுந்தது சிறிலங்கா அரசை அதிரவைத்தது. இதனாலேயே தனது கண்மூடித்தனமான இனவெறியை தமிழர்கள் மீது திணித்தது சிறிலங்காப் பேரினவாதம்: சிங்கள தனிச் சட்டம் ஊடாக தமிழர்களை புறக்கணித்தது, தரப்படுத்தல் சட்டம் ஊடாக தமிழ் மாணவர்களின், இளையோர்களின் வளர்ச்சியை முறியடித்தது, யாழ் பொது நூலக எரிப்பு ஊடாக தமிழர்களின் வரலாற்றை அழித்தது, 1983ல் யூலைக் கலவரத்தில் தமிழர்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தது, தமிழர்களின் சொத்துக்களை சூறையாடியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பெயரில் தமிழர்களை கைது செய்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. அவர்களில் ஏறாளமானவை இன்று வீடு திரும்பாத நிலையில் அவர்களின் குடும்பங்கள் தவிக்கின்றன. அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற உயரிய நம்பிக்கையில் அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இரவு பகல் இன்றி போராடி வருகின்றார்கள் எமது தமிழ் உறவுகள். அவர்களுக்கு கிடைத்த பதில் என்ன? இறப்புச் சான்றிதழ்!
2009ல் தமிழர்களின் இனவழிப்பு உச்சத்தை எட்டியது முள்ளிவாய்க்கால் மண்ணில். பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களை காட்டுமிராண்டித்தனமாக காவு கொண்டது சிங்கள அரசாங்கம். ஒரு நேர உணவின்றி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு திணறிய எமது தமிழ் மக்களின் அவலக்குரல்களை மறக்கவோ மறுக்கவோ முடியாது. சர்வசாதாரணமாக ஒரு இனவழிப்பை நிகழ்த்திவிட்டு, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று சர்வதேசக் குற்றங்களை தொடுத்துவிட்டு இன்று உலகிற்கு முன் எவ்விதத்திலும் பொறுப்பெடுக்காமல் தமிழர்கள் மீதான இனவழிப்புத் திட்டத்தை தந்திரமாக முன்னகர்த்திச் செல்கிறது சிறிலங்கா. தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்தும் அபகரித்தும், தமிழர்களின் இருப்பையே இல்லாதொழித்தும், இன்று வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பெயரில் தமிழர்களை கைது செய்தும் கொடுமைப்படுத்தியும் வருகின்றது. தமிழ் மக்களின் இனவழிப்பை உலகிற்கு மறைப்பதற்காகவும் மறுப்பதற்காவும் செயல்படுகின்றது சிங்கள அரசு.
இவ்வாறு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் அன்றாடம் தவித்துக் கொண்டிருக்கும் எமது மக்களுக்கு “சுதந்திர தின வாழ்த்துக்கள்” எனும் கொடும் செய்தியை அனுப்பி வைத்து சுதந்திரத்தை மகிழ்ச்சியாக அனுட்டிக்கும் சிங்கள பௌத்த இனவெறி அரசிற்கு உரத்தக் குரலில் சொல்வோம் “இன்று தமிழர்களின் சுதந்திர தினம் அல்ல!” என.
பல்லாயிரக்கணக்கான உயிர்களை ஆகுதியாக்கி எமது விடுதலைப் போராட்டம் தொடர்கின்றது. அவ் விடுதலை வேட்கையை நெஞ்சில் சுமந்து உலகிற்கு ஓங்கிச் சொல்வோம் “இன்று தமிழர்களின் கரிநாள்! ” என.
சிங்கள அடக்குமுறைகளுக்கும் கெடுபிடிகளுக்கும் மத்தியிலும் தமிழர் தேசத்தையும், தமிழர் உரிமைகளையும், தமிழர்களுக்கான நீதியையும் பெற்றெடுக்க இன்று எமது ஈழத்தமிழ் மக்கள் புரட்சி கொள்ளும் வேளையில் புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழர்கள் நாமும் எம்மைக் கைவிட்ட சர்வதேசத்திற்கு எடுத்துரைப்போம் “தமிழர்கள் நாம் சுதந்திரம் அடையும் வரை ஓயோம்!” என.