17ம் நாளாக (04/03/2022) தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி அறவழிப்போராட்டம் தொடர்கிறது
சிறிலங்காப் பேரினவாத அரசானது தமிழர்களை இரசாயன, கொத்துக்குண்டுகளாலும், பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தும், வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்தவர்களை படுகொலை செய்தும், வயது பால் வேறுபாடுகளின்றி திட்டமிட்டமுறையில் உணவு, மருந்துகள் மறுத்த நிலையிலும் இனப்படுகொலை செய்து அதற்கான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் பல கபட நாடகங்களையாடி வருகின்றது.
அதன் அடிப்படையில் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் சிறிலங்காப் பேரினவாத அரசு புரிந்த தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தமிழர்களுடைய தாயகமாம் தமிழீழமே உறுதியான தீர்வு எனும் கோரிக்கைகளோடு, மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் பொருட்டும் ஐரோப்பிய நாடுகளை சந்தித்து மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொள்வோர்களால் மனு ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக 24 வது தடவையாக பயணித்து வரும் இப்போராட்டம் இன்று பேர்ன், சுவிசு மாநகரத்தில் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சிடமும் சம நேரத்தில் முதல்வரினையும் சந்தித்து மனு ஒப்படைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிறிபோர்க் மாநகர முதல்வரிடமும் மனு ஒப்படைக்கப்பட்டு எழுச்சிகரமாக நடைபெற்ற மக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டு தம் அனுபவங்களை பகிர்ந்தபின் போராட்டத்தினை தொடர்ந்தனர்.
முக்கிய குறிப்பாக பல்லின வாழ் பெண்மணி ஒருவரும் நீதி தேவதை போன்று தன் கண்களை சிவப்புத்துணியினால் கட்டிக்கொண்டு தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என எம்மோடு பயணித்தார். அச்செயல் பல்லின வாழ் மக்களின் கவனத்தினை மேலும் ஈர்த்தது.
நாளை மீண்டும் இப்போராட்டம் லெளசாண் மாநகரத்தினை நோக்கி பயணித்து ஐக்கிய நாடுகள் அவை முன்றலினை வந்தடைந்து ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றது.
“சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது.”–தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.