வேர்களைத் தேடும் விழுதுகள்-சங்கானை
சங்கானை நகரம், இலங்கையின் யாழ் நகரத்திலிருந்து 12 கிமீ வடமேற்காக அமைந்துள்ளது. சங்கானை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாம வலயப் பிரிவில், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் வடலியடைப்பு, பிரான்பத்தை, பண்டத்தரிப்பு ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் சண்டிலிப்பாய், மானிப்பாய் ஆகிய ஊர்களும், தெற்கில் சங்கரத்தையும், மேற்கில் சித்தங்கேணி, வட்டுக்கோட்டை என்பன உள்ளன.
சங்கானை பிரதேச செயலாளர் பிரிவு
சங்கானை பிரதேச செயலாளர் பிரிவு அல்லது வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 25 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை வட்டுக்கோட்டை வடக்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, வட்டுக்கோட்டை தெற்கு, வட்டுக்கோட்டை தென்மேற்கு, வட்டுக்கோட்டை மேற்கு, அராலி வடக்கு, அராலி கிழக்கு, அராலி தெற்கு, அராலி மேற்கு, அராலி மத்தி, சங்கரத்தை, தொல்புரம் கிழக்கு, தொல்புரம் மேற்கு, பொன்னாலை, மூளாய், பண்ணாகம், பனிப்புலம், சித்தங்கேணி, சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம் மேற்கு, சுழிபுரம் மத்தி, சங்கானை கிழக்கு, சங்கானை தெற்கு, சங்கானை மேற்கு, சங்கானை மத்தி என்பனவாகும்.இங்குள்ள முக்கிய ஊர்கள் அராலி, சங்கானை, சுழிபுரம், மூளாய், பண்ணாகம், பனிப்புலம், பொன்னாலை, சங்கரத்தை, சித்தங்கேணி, தொல்புரம், வட்டுக்கோட்டை என்பனவாகும். இப்பிரிவு குடாநாட்டில் வடமேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் இதன் மேற்கு, தெற்கு எல்லைகளாக உள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமே நிலப்பகுதி எல்லைகளையுடைய இப்பிரிவு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுடன் மட்டுமே பொதுவான எல்லையைக் கொண்டுள்ளது. இதன் நிர்வாகத் தலைமை அலுவலகம் சங்கானையில் அமைந்துள்ளது. 2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேச செயலாளர் பிரிவு இலங்கைத் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது.
சங்கானை, மாதகல் கந்தரோடைக்கு நடுவே உள்ளது. இங்கு ஓடக்கரை எனும் நீரோடை இருக்கிறது. சங்கானையில் விளான் பகுதியை அண்டி இராச முருக்கடி என்று ஓர் பகுதியுண்டு. ஓர் ஆற்றுப்பாதை சங்கரத்தை வெளிக்குச் செல்கிறது. இது பெருமளவு கந்தரோடையுடன் இன்று தொடர்புறுவதைக் காணக்கூடியதாகவுள்ளது. சங்கானையும் ஓர் கந்தரோடை ஆட்சிநகர எல்லையுள் ஓர் பகுதியாக இருந்திருக்கிறது. அது மாதகல் கந்தரோடை துறைமுக நகர் எல்லையுள் ஓர் பகுதியாக இருந்திருக்கிறது. அது மாதகல் கந்தரோடை துறைமுக நகர் தொடர்பு பெறும் வழியில் அமைந்துள்ளது.
சங்கானையில் சில சிங்களப் பெயர்கள் குறிச்சிக்கு இருப்பதைக்கண்டு சிங்கள அரசே ஆதி அரசு என முடிவு கட்டி விடமுடியாது. சிங்களவர் எம்மை ஆண்டதும் தமிழர் சோழர் சிங்களப் பிரதேசங்களை ஆண்டதும் சாதாரண நிகழ்ச்சிகள். போர்த்துக்கேயராட்சிக்கு சற்றுமுன் மன்னராட்சி புரிந்தனர். அவர்கள் விட்டுச் சென்றதும் போர்த்துகேயர் காணி நில விபரம் தயாரிக்கும் போது சிங்களவர் இட்ட பெயர்களை அப்பிரதேச பெயராக இட்டனர். அதற்குமுன் வழங்கிய பரம்பரைத் தமிழ்ப் பெயர்களை கவனிக்கத் தவறினர். இதன் விளைவே இன்றுவரை மாலியவத்தை முதலிய பெயர்கள் நிலைபெறக்காரணமாயிற்று.
சங்கானைத் தேவாலயம் ஒரு வரலாற்று நோக்கு
ஒல்லாந்தர்கள் புரட்டஸ்தாந்து மதத்தினை பரப்புவதில் அதிகளவு ஆர்வம் கொண்டதன் விளைவாக யாழ்ப்பாணத்தில் ஓரளவான இடங்களில் தேவாலயங்களை அமைத்தனர். தேவாலயங்களோடு இணைந்த வகையிலான கல்வி நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். சங்கானையில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் மொத்தமாக 18000 மாணவர்கள் கல்வி கற்றனர் எனவும் அவர்களுள் 12357 மாணவர்கள் ஞானஸ்தானம் பெற்றார்கள் எனவும் ஒல்லாந்த அரசின் அறிக்கைகளிலிருந்து அறிய முடிகிறது.
இன்று சங்கானையில் காணப்படும் தேவாலயமானது ஒல்லாந்தர் கால கலை மரபில் அமைக்கப்பட்டுள்ளது. 1658ம் ஆண்டு போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றிய பின்னர் அவர்களது வர்த்தகம், அரசியல், சமயக் கொள்கை காரணமாக யாழ்ப்பாணம் குறிப்பிடத்தக்க விளைவுகளையும், மாற்றங்களையும் சந்தித்தன. இம் மாற்றங்களில் ஒன்றாக ஒல்லாந்தக் கட்டடக்கலை மரபு இலங்கையில் வேரூன்றியது. ஒல்லாந்தரைப் பொறுத்த வகையில் அவர்கள் கட்டடக்கலையில் சிறந்து விளங்குவதற்கு அவர்களுடைய தாய் நாடாகிய ஒல்லாந்தில் பெரும் பகுதி நிலம் சதுப்பு நிலமாகவும், கடலாகவும் இருந்தமையும், அவற்றில் பாரம்பரிய கட்டங்களை அமைப்பதில் அவர்கள் பெற்றுக் கொண்ட தேர்ச்சியுமே அவர்கள் கட்டடக்கலையில் குறிப்பாக கோட்டைக் கட்டடக் கலையில் விற்பனராக மிளிரக் காரணமாக அமைகிறது.
அந்த வகையில் அந்நியக் கலை மரபான ஒல்லாந்தக்கலை மரபினை பிரதிபலித்து நிற்கின்ற வகையிலும் பல நூற்றாண்டுகளை கடந்து ஒல்லாந்தரின் யாழ்ப்பாண ஆட்சியினையும் புரட்டஸ்தாந்து மதம் பெற்ற செல்வாக்கினை நிலைநிறுத்தும் முக்கிய பண்பாட்டுச் சின்னமாகவும் சங்கானை தேவாலயம் சிறப்புப் பெறுகின்றது. போர்த்துக்கேயரால் சங்கானைத் தேவாலயம் முதலில் அமைக்கப்பட்டாலும் பின்னர் ஒல்லாந்தர் தமது மதத்திற்கு ஏற்ற வகையிலும், கலை மரபிற்கு ஏற்ற வகையிலும் மாற்றிக் கொண்டனர்.
இத் தேவாலயம் முருங்கைக் கற்களினால் அமைக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான தேவாலயம் ஆகும்.இது உள்மண்டபம் வெளிமண்டபம் என இரு மண்டபங்களைக் கொண்டு காணப்படுகின்றது. உள் மண்டபக்கூரை அமைப்பானது முருங்கைக் கற்களினால் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒல்லாந்தர் கால கலைத் தொழில் நுட்பத்தை வெளிப்படுத்துகின்றது. உள் மண்டபத்தில் 2 சாளாரங்கள் காணப்படுகின்றன வெளிமண்டபத்தில் 9 சாளாரங்கள் காணப்படுகின்றன. சாளாரங்கள் மற்றும் வாசல் அமைப்பானது பிறை போன்ற அமைப்பினை கொண்டு காணப்படுகின்றன. இவ்வாறு ஒல்லாந்தக்கட்டடக் கலை மரபினை பின்பற்றி சங்கானைத் தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
சங்கானைத் தேவாலயத்தின் தற்போதைய நிலை
கி.பி 1658ம் ஆண்டு இலங்கைக்கு வந்த அந்நிய இனத்தவரான ஒல்லாந்தரது ஆதிக்கத்தின் கீழ் அவர்களது மதமான புரட்டஸ்தாந்து மதத்தின் பரம்பலுக்கு உட்பட்ட இடமாக சங்கானை காணப்பட்டதனை இன்றும் அழிவடைந்த நிலையில் காணப்படும் ஒல்லாந்தர் கால எச்சங்கள் பறை சாற்றுகின்றன. யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்ட கத்தோலிக்க தேவாலயங்கள் பின்னர் ஒல்லாந்தர் ஆட்சியில் புரட்டஸ்தாந்து தேவாலயமாக மாற்றப்பட்டன.
ஒல்லாந்த கலை மரபில் கட்டப்பட்ட இத்தேவாலயமானது ஏறத்தாழ 350 வருடங்களுக்கு மேற்பட்ட நிலையில் ஒல்லாந்தரின் ஆட்சியின் விளைவினை இன்றும் பறைசாற்றும் முக்கிய பண்பாட்டு தொல்லியல் எச்சமாகக் காணப்படுகின்றது. இத் தேவாலயம் அமைந்துள்ள இடம் 5 பரப்பு காணியை கொண்டு உள்ளது. சங்கானைத் தேவாலயத்தின் இன்றைய நிலையில் அதன் மொத்த நீளமானது 4195 செ.மீற்றர் ,அகலம் 1190 செ.மீற்றர் ஆகவும் காணப்படுகின்றது. இக் கூரை அமைப்பானது முருங்கைக் கற்களினாலே அமைக்கப்பட்டவையாகும். இத் தேவாலயத்தின் வெளிமண்டபமானது எவ்வித கூரையமைப்பும் இன்றி வெறுமையாக வெளியாகவே காணப்படுகின்றது. இதற்கு எத்தகைய கூரை அமைப்பு முறையை பின்பற்றி இருப்பார்கள் என்பதை ஊகிக்க முடியாத அளவிற்கு அதன் அமைப்பு காணப்படுகின்றது. சாளாரங்களின் அமைப்பானது பிறை வடிவில் அமைந்து காணப்படுகின்றது. சாளாரங்கள் அனைத்துமே அழிவடைந்த நிலையிலே காணப்படுகின்றது. இன்றுள்ள நிலையில் சாளாரங்களோ,கதவோ அற்ற நிலையில் காணப்படுகின்றது. அடுத்த தேவாலயத்தின் உள்மண்டபத்திற்கு செல்லும் நுழை வாயிலானது ஒல்லாந்தர் கால கலை மரபிற்கு ஏற்ப வில்போன்ற வடிவ வளைவைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. மற்றும் உள்மண்டபத்தினதும் வெளிமண்டபத்தினதும் நில அமைப்பானது மண்ணாகவே காணப்படுகின்றது. நில அமைப்பிற்கு எத்தகைய முறையை பயன்படுத்தினார்கள் என்பதை அகழ்வாய்வு மூலமே கண்டறிய முடியும்.
சங்கானைத் தேவாலயமும் தொல்லியல் திணைக்களமும்
ஐரோப்பிய வரலாற்றிலே கி.பி 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே தொல்பொருட் சின்னங்கள் பற்றிய பார்வை புத்துயிர் பெற்றது. அவ் வகையில் இலங்கையில் கி.பி 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே தான் குறிப்பாக பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தான் தொல் பொருட்கள் தொல் பொருட்சின்னங்கள் என்பவற்றின் முக்கியத்துவம் உணரப்பட்டது. இதன் விளைவாக தொல்லியல் திணைக்களம் கி.பி 1890ல் நிறுவப்பட்டது.
அந்த வகையில் சங்கானைத் தேவாலயத்தின் தொல்லியல் திணைக்களத்தின் பணியை நோக்க முடியும். சங்கானைத் தேவாலயமானது தொல்லியல் திணைக்களத்தினால் 2007.02.23 திகதி பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பதிவு இலக்கம் 1986 ஆகும். இது தொல்லியல் திணைக்களத்தினால் வடக்கில் அடையளம் காணப்பட்ட போதிலும் அதனை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் மேற்க்கொள்ளப்படவில்லை. இத் தேவாலயத்தினை பலர் ஒல்லாந்தர் கால கோட்டை என்று குறிப்பிடுகின்றனர்.
இத் தேவாலயத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டு இங்கு ஆய்வுகள் மேற்கொண்டு அவ்வாய்வின் மூலம் அது எவ்வாறு காணப்பட்டது என்பதனை கண்டறிந்து அதனை மாற்றியமைத்து இலங்கையில் முக்கிய தொல்லியல் சின்னமாக மாற்றி அமைப்பதன் ஊடாக அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தி கொடுக்கும் வகையில் திட்டமிட்டு செயற்படுகின்றன. இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் குறைந்தளவு மூலதனத்துடன் அதிக இலாபம் ஈட்டும் சுற்றுலாவாக தொல்லியல் மரபுரிமை சுற்றுலா அமைகின்றது. இத் தேவாலயத்தினை பாதுகாப்பதன் ஊடாக அதனை ஓர் தொல்லியல் சுற்றுலா மையமாக மாற்றுவது முக்கிய அம்சமாகும். இந்த வரலாற்றுச் சின்னத்தை அழியாது பாதுகாப்பது எல்லோரதும் கடமையாகும்.
கல்விக்கு முதல் இடம் கொடுத்துபல பாடசாலைகளை எமது முன்னோர்கள் அமைந்தனர். “கல்வியே மனிதனின் கண் ஆகும்” என்பதில் அழிக்க முடியாத உறுதி கொண்டிருந்தனர். சிவபிரகாச மகாவித்தியாலயம். அமெரிக்கமிசன் பாடசாலை, விக்னேசுவரா வித்தியாசாலை போன்றவை தரத்தில் முன் நிற்கும் பாடசாலைகளாகத் திகழ்கின்றன.
நாகலிங்க சுவாமிகள்
இம்மண்ணில் உதித்து சமயப்பணிக்கு தன்னை அர்ப்பணித்த நாகலிங்க சுவாமிகளைப் பலர் அறிவர். இவர் இந்தியாவில் திருவாவடுதுறை ஆதினத்தில் சமய, சங்கீத திருமுறைகளை முறைப்படி கற்றார். பின் அங்கேயே பல இடங்களுக்கும் சென்று கதாப்பிரசங்கம்,. பண்ணிசைபாடி சமயத்தொண்டுகள் செய்து வந்தார். இவர் தன் பிற்காலத்தில் இலங்கை திரும்பிச் சங்கானை நிகரைவைரவர் ஆலயத்திலும், இலுப்பைத்தார் முருகமூர்த்தி கோயிலிலும் சமயத் தொண்டாற்றி வந்தார். இன்று இறைவனுடன் கலந்துவிட்ட இவரின் பெயரில் ஒரு நூல்நிலையம் நடாத்தப்பட்டு வருவது குறிபிடத்தக்கது. மேற்கூறிய ஆலயங்களை போல பிராம்பத்தை வீதியில் இருக்கும் அமெரிக்க மிசன் தேவாலயமும், சிவன் கோயில், அரசடி வயிரவர், மாவடி வயிரவர், காளி கோயில், முருகன் கோயில் கூடத்தம்மன் கோயில் என்பன பிரசித்தி பெற்ற ஆலயங்களாகத் திகழ்கின்றது.
யாழ்/ சங்கானை மாவடி ஞான வைரவர் கோயில்
சங்கானை மாவடி ஞான வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட சங்கானை கிராமத்தில் அமைந்துள்ளது.
வலிகாமம் மேற்கு கூட்டுறவு சங்கம் எமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். 1944ஆம் ஆண்டு ஆடி மாதம் ஆரம்பித்த இந்நிறுவனம் ‘கூட்டுறவு நாட்டுயர்வு’ என்பதனை நிரூபித்ததுடன் 1964இல் அராலியில் ஓர் உப்பளத்தை ஆரம்பித்தது. தனியார் நிறுவனத்தால் நடாத்தப்படும் ஒரே ஒரு உப்பளம் என்ற பெயரை தேடித்கொண்டது. 25க்கும் அதிகமான கூட்டுறவுச் சங்கக் கிளைகளை நடாத்தி வரும் இந்நிறுவனம் ஒரு பாரிய மின் நெசவு ஆலையை சங்கானையில் நிறுவியது. இங்கு தயாரிக்கப்படும் உடுபுடவைகள் தரத்தில் உயர்வு பெற்றன. இதனால் இந்நிறுவனம் ஏராளமான பணத்தையும், புகழையும் தேடிக்கொண்டது.
மின் விநியோகம் இங்கு 1966ஆம் ஆண்டு ஆவணி மாதம் கிடைத்தது. இதன் பின் பல மின் அரிசி ஆலைகள், கைத்தொழில் சாலைகள் உருவாகின. விவசாயிகள் கூட இதனால் பயன் பெற்றனர்.
இங்கு அரச உதவியுடன் இயங்கி வரும் கால்நடைப் பராமாரிப்பு நிலையம் பணியாற்றி வருகிறது. கால்நடைகளைச் சினைப்படுத்துதல், அவற்றின் நோய்களுக்கு மருந்து கொடுத்தல், பராமரிப்பு பற்றிய அறிவுரை கொடுத்தல் போன்ற பல சேவைகளை செய்கின்றது. இதே போல அரசினர் மரக்காலையும் பல நன்மைகளைத் தருகிறது. தரம் உயர்த்தப்பட்ட புதிய கட்டிடத்தில் இயங்கிவரும் அஞ்சல் அலுவலகமும் சிறந்த சேவை புரிகின்றது.
கலைஞர்களுக்காக ஒரு கலாச்சார மண்டபம்
தென் இந்தியத் திரைவானில் திரைக்கதை வசனம் எழுதிப் புகழ் பெற்ற பின்னர் தயாரிப்பாளராக மாறியுள்ள திரு . சி . குகநாதனைச் தெரியாதவர் யாருமில்லை. சங்கானையில் உதித்த அவர் மேற்படிப்பை இந்தியாவில் முடித்துக்கொண்டு இன்று திரையுலகில் முன்னணிக் கலைஞராக ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சிறப்புப்பெற்ற, சகல வசதிகளும் கொண்ட சங்கானை மண்ணின் நினைவுகள் என்று நம் மனதைவிட்டு அகலாது.
கலைஞர்களின் நலன் கருதி ஒரு கலாச்சார மண்டபத்தை இங்கு நிறுவி உள்ளனர். சாதனை படைத்த கலைஞர்களை உருவாக்கிய பெருமையும் சங்கானைக்கு உண்டு. வட மாகாணத்திலேயே முதன் முதலாக அருகருகே இரண்டு மேடைகளை உருவாக்கி, அதில் ஒரு நாடகத்தை புதுமையான முறையில் மேடை ஏற்றிப் புகழ் கண்டது சங்கானை கலையக நாடகமன்றம், இதேபோல வெண்ணிலா நாடக மன்றம், நிகரை வாலிப மன்றம் , பாலமுருகன் நாடக மன்றம் ஆகிய மன்றங்களும் புகழ் பெற்றிருந்தன.
கலை வளர்ச்சியில் முன்னிலையில் நிற்கும் எமது பட்டினத்தில் உருவான நகைச்சுவை நடிகர்களான திருவாளர்கள் ஜெயபால், சபான், பொன்னுத்துரை, கந்தசுவாமி போன்றவர்களும் புகழ் பெற்றிருந்தனர்.
இங்கு ஒரு பெரிய அரச வைத்தியசாலை இயங்குகிறது. நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதைவிட இரண்டு தனியார் வைத்திய நிலையங்களும் இங்கு மிகுந்த பிரசித்தி பெற்றன. வலிகாமம் மேற்கான உதவி அரசாங்க அதிபர் பணிமனை இங்கே இயங்குகிறது. இங்கு கிராமசேவர்கள் மூலம் மக்களின் குறைகளை அறிந்து அவற்றை நிறைவு செய்கின்றனர். எல்லைத் தகராறு, புயல், வெள்ளம், பயிர்ச்சேதம் போன்றவைகளுக்கு அரசின் உதவியைத் பெற்று தருதல், கூப்பன் ,பால்மா ,வீடுகட்டும் பொருள்களுக்கான அனுமதிகளை வழங்குதல் போன்ற சேவைகளைச் செய்கின்றது.
விவசாயமும் வியாபாரமும் ஒருதாய் பிள்ளைகள். “வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான்” என்றார் ஒளவையார். மக்கள் உயர்வு பெற்றால்தான் அரசு உயர்வு பெறும் என்பது இதன் பொருள் .உபஉணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தோட்ட நிலம் சித்தங்கேணி, வடலியடைப்பு, பண்டத்தரிப்பு வரை பரந்து கிடக்கிறது. நெல் விளைச்சல் செய்யும் வயல் நிலம் நவாலி, சங்கரத்தை, அராலி, சண்டிலிப்பாய் வரை வியாபித்துள்ளது. இதனால் எத்தனை கடினங்களுக்குள்ளும் இப் பட்டினம் என்றுமே பஞ்சப்பட்டது இல்லை.
சந்தை
விவசாயமும், வியாபாரமும் ஒரு தாய் பிள்ளை என்று முதியோர் கூறுவார். இங்கு முன்னணி வகிக்கும் மற்றோர் தொழில் வியாபாரமாகும். “சங்கானைச் சந்தையிலே சுங்கானைக் போட்டுவிட்டேன்” என்றோர் பழைய பாடல் உண்டு.
சுங்கான் பாவிப்போர் இருந்த காலத்திலேயே சங்கானை பிரசித்தி பெற்று இருந்தது என இதன் மூலம் தெளிவாகிறது. அயல் கிராமங்களான வட்டுக்கோட்டை, மூளாய், சுளிபுரம், காரைநகர், அராலி, சித்தங்கேணி போன்ற இடங்களிலிருந்து வர்த்தகர்களும் , பொதுமக்களும் அதிகாலையிலேயே இங்கு கூடிவிடுவார்கள். பொருட்கள் யாவும் அங்கு துரித கதியில் விற்பனையாகி விடும்.
தம்மை இழந்து தமது இனத்தின் பெருமையையும், தாய்நாட்டின் விடுதலையையும் நேசித்த வீர வேங்கைகளின் தடம் பதித்த அழியாத வரலாறும் எம் மண்ணில் உண்டு.
இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்
நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: அகல்யா இயற்பெயர்: இராசரத்தினம் கமலராணி முகவரி: அரசடி, நவாலி, சங்கானை, யாழ்ப்பாணம் மாவட்டம்: யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 20.11.1982 வீரச்சாவு: 17.05.2000 நிகழ்வு: யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்
நிலை: கப்டன் இயக்கப் பெயர்: கலையரசி இயற்பெயர்: வளர்மதி சுப்பிரமணியம் முகவரி: சங்கானை கிழக்கு, யாழ்ப்பாணம் மாவட்டம்: யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 20.04.1974 வீரச்சாவு: 04.08.1996 நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் படையினரின் முன்னகர்விற்கெதிரான சமரில் வீரச்சாவு துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மேலதிக விபரம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக எனது பெற்றவர்களின் வேர்களைத் தேட விளைகையில் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட சங்கானை மண்ணின் சிறப்பும், விடுதலைக்காக வீரகாவியமான மறவர்கள் பற்றிய தேடலும் என் தேடலை உணர்வு பூர்வமாக்கியது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை என்பதைக் கூறிக்கொண்டு இத் தேடலை நிறைவு செய்கின்றேன்.
செல்வி செல்வகுமார் றினோசா
ரெச்சியோ எமிலியா திலீபன் தமிழ்ச்சோலை, இத்தாலி. RE-04