இத்தாலி மேற்பிராந்தியத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024
இத்தாலி மேற்பிராந்தியத்தியத்தைச் சேர்ந்த ஜெனோவா ,பியல்லா , மாந்தோவா ,வெரோனா,ரெச்சியோ எமிலியா ,போலோனியா, ரோம் , நாப்போலி நகரங்கள் ஒன்றிணைந்த தமிழீழத் தேசிய மாவீரர் எழுச்சிநாள் 2024 நிகழ்வுகள் ரெச்சியோ எமிலியா நகரத்தில் 01/12/2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு விடுதலைக்காக களமாடி விழுந்து விதையாகிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு எழுச்சி பூர்வமாக ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வின் முதன்மை நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இத்தாலி மற்றும் தமிழீழத் தேசிய கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. அடுத்து 2008 ஆம் ஆண்டின் தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை மற்றும் அனைத்துலகத் தொடர்பகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் உரை ஒலிக்க விடப்பட்டதனைத் தொடர்ந்து மணியோலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது, அடுத்து பிரதான ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு துயிலும் இல்லப் பாடல் ஒலிக்க மாவீரர் குடும்பத்தினர் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள், இளையோர் அமைப்பினர்,மகளிர் அமைப்பினர், பொதுமக்கள் ஆகியோர் மலர்வணக்கம். சுடர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து விடுதலை எழுச்சிப் பாடலுடன் ஆரம்பமாகி எழுச்சி நிகழ்வுகளான நடனம், வில்லிசை என்பன இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து அனைத்துலத் தொடர்பகத்தால் தேசியத்தலைவரின் அகவை எழுபதை முன்னிட்டு நடாத்தப்பட்ட “மேதகு 70” போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கான நினைவுப் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன .அத்துடன் அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட அறிவாடல் போட்டிகளில் இத்தாலி நாட்டிலிருந்து பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கமும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
அடுத்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் பங்கேற்ற மாவீரர் நினைவுசுமந்த ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து சமகால அரசியல் சூழல் தொடர்பான சிறப்பு உரையோடு எழுச்சி நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் ஒன்றிணைந்து உறுதி மொழி எடுத்துக்கொண்டதன் பின்பு தேசியக்கொடிகள் கையேற்கப்பட்டதைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் 2024 வருடத்திற்கான மாவீரர் எழுச்சி நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.