இத்தாலி பியல்லா திலீபன் தமிழ்ச்சோலையில் இடம்பெற்ற தாய் மொழி தினம்2025
தாய் மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. தாய் மொழி தினம் வருடா வருடம் மாசி மாதம் 21ம் திகதி அனைவராலும் கொண்டாடப்படுகிறது. தாய்மொழியைக் காப்பதற்காக இந்த உலகமெங்கும் பல புரட்சிகள் தோன்றியிருக்கின்றன. எமது தாய்மொழியான
தமிழ் மொழி என்பது வெறுமனே மொழி அன்றி அது நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்ற உணர்வாக விளங்குகின்றது.
அந்த வகையில் பியல்லா திலீபன் தமிழ்ச்சோலையில் தாய்மொழி தினம் மிகச் சிறப்பாக 09/03/2025 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அகவணக்கம் தலைவரின் சிந்தனைத் துளியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி திலீபன் தமிழ்ச்சோலை கீதம், தமிழ் தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மாணவர்களால் நம் தாய்மொழியின் சிறப்பைப் பற்றி வாழிட மொழியிலும் தமிழ் மொழியிலும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அறிவுத்திறன் போட்டி, மாணவர்களின் கவிதை, பேச்சு, நடனம், வாத்திய இசை நிகழ்வு என்பவற்றுடன் பாடல்களும் இடம்பெற்று இரவு 7.30 மணியளவில் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவேறியது.







































































