இத்தாலியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற கரும்புலிகள் நாள்2024 நினைவேந்தல் நிகழ்வு
“கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் .எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் எதிரியின் படை பலத்தை மனப்பலத்தால் உடைத்து எறியும் இரும்பு மனிதர்கள்” என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுத்து தங்களை ஆகுதியாக்கிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு
பியல்லா பிரதேசத்தில் மிக உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
பொதுச் சுடரேற்றல், தேசிய கொடி ஏற்றலுடன் அகவணக்கத்தை தொடர்ந்து பிரதான ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற அனைவராலும் மலர் வணக்கம், சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது.தேசியத் தலைவர் அவர்களின் கரும்புலிகள் உருவாக்கம் தொடர்பாக வெளியான “தெய்வப் பிறவிகள் தான் கரும்புலிகள்” என்ற சிறப்புரை வாசித்ததைத் தொடர்ந்து பியல்லா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் கவிதை, பேச்சு, எழுச்சி நடனங்களும் அத்தோடு எழுச்சி கானங்களும் இசைக்கப்பட்டது. இறுதியாக எமது தேசியக்கொடி கையேற்றலுடன் எமது தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உறுதிமொழியுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றது.