இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024
தாயக மண்மீட்புப் போரிலே தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024, 27.11.2024 புதன்கிழமை அன்று Don Orione மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒழுங்கமைப்பின் கீழ் மிகவும் சிறப்பாகவும், உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடரேற்றலுடன், வெண்திரையில் மாவீரர் துயிலுமில்லக் காட்சி ஒளிபரப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், முதல் மாவீரரான சங்கர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அனைத்து மக்களாலும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
பலெர்மோ மாநகர சபை ஆளுநருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினருக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. தமிழர்களுக்கு இலங்கை அரசால் இழைக்கப்பட்ட அநீதி, துரோகம் என்பதை எடுத்துக் கூறி இவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
மேலும் மாவீர்ர் நினைவு சுமந்த எழுச்சி கானங்கள், தமிழீழத் தேசிய மாவீர்ர் நினைவு சுமந்த பேச்சுப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்கழுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டு அவர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றன. அத்துடன், மாணவர்களின் மாவீர்ர் வணக்கப் பாடலுக்கான நடனங்கள், எழுச்சிநடனங்கள் போன்றவற்றுடன் சிறப்ப அதிதியாக வருகை தந்த மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின், மாவீரர் நாள் சிறப்புரை, நன்றியுரைகள் வழங்கப்பட்டதுடன், தேசியக்கொடி இறக்குதல், உறுதிமொழி எடுக்கப்பட்டு, “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலுடன், மாவீரர்களை நெஞ்சிலே சுமந்த வண்ணம் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 நிறைவு பெற்றது