இத்தாலி புனரமைப்புக்கான சிறப்பு குழு நியமனம்.
கொரோனாவைரசால் இத்தாலி பாரியளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக சிக்கல்களை சமாளிக்கும் நோக்கோடு புனரமைப்பு திட்டம் அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளது.
நேற்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரதமர் Conte இத்தாலி புனரமைப்பு திட்டத்திற்காக பல தரப்பினருடன் ஆலோசிக்கப்பட்டு சிறப்புக் குழு ஒன்று தயாராகவுள்ளது என்று அறிவித்துள்ளார்.
Vodafone நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பல வெளிநாட்டு நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்பில் சிறப்புப் பெற்ற Vittorio Colao தலைமையில் இந்த குழு முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இக் குழுவில் பொருளாதார வல்லுநர்கள், சட்டவியல் நிபுணர்கள், மனநல நிபுணர்கள், சமூகவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை ஒன்றிணைத்து மிகப் பெரிய பணிகளுடன் நாட்டை மீட்டெடுக்க செயல்படுவார்கள் எனவும் உறுதியளித்துள்ளார்.
தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பட்சத்தில் அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளின் மையம் சுகாதார நெருக்கடியை விட பொருளாதார நெருக்கடியிலிருந்து எவ்வாறு மீள்வது என்பதாகத் தான் இருக்கும்.
எனவே, குழுத் தலைவர் Colaoவின் நோக்கமும் துல்லியமாக இந்த தோற்றத்தைக் கொண்டுள்ளது.
தற்போது இத்தாலியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (PIL) இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்தவாறு 10% விகிததிற்கு மேலாக குறைந்துள்ளது. எனவே, வரும் மாதங்களுக்கு ஒரு சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான கட்டமைப்பை அமைக்க வேண்டிய அவசியத்திலிருந்து இக் குழுவின் முதல் கட்ட நடவடிக்கை தொடங்குகிறது.
நாட்டின் புனரமைப்புக்கு அவசியமான தீர்வுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் இந்த சிறப்புக் குழுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் அவ் உரையில் தெரிவித்துள்ளார்.
1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் நிறுவப்பட்ட புனரமைப்புக்கான இடைநிலைக் குழு போலவே இச் சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.