புதிய ஆணை: மே 3 வரை நெறிமுறைகள் நீடிக்கப்பட்டுள்ளது
நேற்று மாலையில், பத்திரிகையாளரின் சந்திப்பின் பொழுது, இத்தாலி அரசாங்கத்தின் பிரதமரால் புதிய ஆணை விதிக்கப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்ட நெறிமுறைகள் பயனுள்ளதாக அமைந்திருக்கின்றன என நோய்ப்பரவு வளைவு மூலம் நாம் காணலாம். இப்படியானச் சூழலில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வீணாகப் போகக்கூடாது என்ற காரணத்தினால் எதிர்வரும் மே 3ம் திகதி வரை இவ் அவசரகாலச் சட்டங்கள் அனைத்தும் நீடிக்கப்படும். Pasqua பண்டிகை, சுதந்திர தினம் மற்றும் தொழிலாளர்கள் தினம் போன்ற விடுமுறை நாட்களை முன்னிட்டு, பரவுதலை மேலும் தடுக்கும் முகமாக, இவ் அவசரகாலச் சூழ்நிலை நீடிக்கப்பட்டுள்ளது.
மெதுவான மற்றும் படிப்படியான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பட்சத்தில் ஏப்ரல் 14ம் திகதி முதல் புத்தகக் கடைகள், எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகளுக்கானக் கடைகள், வனவியல் நடவடிக்கைகள் போன்ற உற்பத்தி வேலைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி கொடுக்கப்படுகின்றது. எமது நாட்டிலிருந்து வைரசு ஒட்டுமொத்தமாக அழிந்து போவதைக் காத்திருக்க முடியாது என்பதால் இரண்டாம் கட்ட நடவடிக்கை படிப்படியாக ஆரம்பிக்கின்றது.
புது விதமான நிறுவன அமைப்புக்களை முன்னெடுக்க வேண்டிய காரணத்தினால் சமூகவியலாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் பணியமைப்பு வல்லுநர்களை உள்ளடக்கிய நிபுணர்கள் குழு மற்றும் பணியிடும் இடங்களில் பாதுகாப்பு நெறிமுறைகளை நியமிக்கின்ற இரண்டு விதமான திட்டங்களிற்காக இத்தாலி அரசாங்கம் வேலை செய்து வருகின்றது.
இதனால், அனைத்து நிறுவன மேலாளர்களும், இவ் அவசரகால நீடிப்பைப் பயன்படுத்தி, பணியிடங்களைச் சுத்தம் செய்து தொழிலார்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை தயார் செய்ய வேண்டும் என உத்தரவிடப்படுகின்றது. முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் நடவடிக்கைகளின் அடிப்படையில் தான் உற்பத்திமுறை சரியான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் முழுமையாக ஆரம்பமாகும்.
எமது குறிக்கோள் R0 எண்ணிக்கை 1க்குக் குறைவாக இருக்க வேண்டும் என்பது தான். அதனால் நோய்ப்பரவு வளைவு மீண்டும் அதிகரிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது என பிரதமர் வலியுறுத்தினார். இதன் வகையில் போக்குவரத்துச் சேவைகளைப் பற்றியும் நிபுணர்கள் குழுவின் உதவியுடன் ஆலோசிக்க வேண்டிய ஒரு விடயமாகும். கூட்டம் மற்றும் நெரிசல்களை உருவாக்கும் போக்குவரத்து வழிமுறைகளைத் தடுக்கும் முகமாக பணியிடத்திற்கு அருகில் வாழும் தொழிலார்களின் நகர்வுகளை மேற்கொள்வது எப்படி என்பதைப் பற்றியும் சிந்திக்க வேணடும் என பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.