“IMMUNI”: நோயாளிகளை அடையாளங் காணும் புதிய App
கொரோனாவைரசு அவசரகால நிலையிலிருந்து இத்தாலி இரண்டாம் கட்டத்திற்குள் நுழைய தயாராகிக்கொண்டு இருக்கிறது. இந்த வகையில், மக்களின் பாதுகாப்பான நகர்வுகளை நோக்கமாக கொண்டு நோயாளிகளை கண்காணிக்கும் புதிய செயலி (App) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தென் கொரியா, தைவான், நியூசிலாந்து போன்ற பல நாடுகளில் இந்த கண்காணிப்பு செயல்முறையால் (contact tracing) அதிக மக்களை தொற்றுக்குள்ளானவர்களிடம் இருந்து பாதுகாக்க உதவியுள்ளது. அத்துடன் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும் இவ்வகையான செயலிகள் பயன்படுத்தப்பட்டன. இதேபோல், தற்போது இத்தாலியிலும் Immuni என்னும் செயலி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
பெறப்பட்ட 300 க்கும் மேற்பட்ட திட்டங்களில் இருந்து கண்டுபிடிப்பு அமைச்சின் வல்லுநர்கள் குழு இந்த திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இப்போது Colao தலைமையில் உள்ள சிறப்பு குழுவினரால் மதிப்பீடு செய்யப்படுகிறது.
இந்த Immuni செயலி கைத்தொலைபேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதன் செயல்பாடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- Bluetooth தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரண்டு கைத்தொலைபேசிகளுக்கு இடையிலான அருகாமையை (ஒரு மீட்டருக்குள்) வைத்து, Covid -19 ஆல் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய முடியும் மற்றும் அவர்களின் அடையாளக் குறியீடுகளின் பட்டியலை சேமித்து வைத்திருக்கும் ;
- எந்தவொரு தனிப்பட்ட தரவும் சாதனத்தை விட்டு வெளியேறாமல், பயனர்களின் உடல்நலம் மற்றும் கொரோனாவைரசின் அறிகுறிகளின் பரிணாம வளர்ச்சியைக் கண்காணிக்க மருத்துவ நாட்குறிப்பு ஒன்றும் உள்ளது.
கொரோனாவைரசு அவசரநிலைக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி Domenico Arcuri இந்த மென்பொருள் பயன்பாட்டு உரிமத்தை இலவசமாக மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், “Immuni”அவசரகாலத்தின் அடுத்த கட்டத்தை நிர்வகிப்பதில் ஒரு முக்கியமான “தூணாக” இருக்கும். ஆனால், பயனுள்ளதாக இருக்க, Immuni- ஐ 60% விகிதமான மக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.